உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / உடம்புக்கு வயசு 66 மனசுக்கு 26 தான்!

உடம்புக்கு வயசு 66 மனசுக்கு 26 தான்!

பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: முத்துப் பேட்டை சோமசுந்தரம் பாஸ்கர், சுருக்கமாக எம்.எஸ்.பாஸ்கர். இதான் என் பேருக்கான அடையாளம். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகப்பட்டினத்தில் தான். கல்லுாரி படிப்பை, சென்னை பச்சையப்பா கல்லுாரியில் முடித்தேன்.ஆல் இந்தியா ரேடியோ, துார்தர்ஷனில் தேர்வாகி நாடகங்களில் நடித்திருக்கிறேன். 1986ல் இருந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக என் கவனத்தை செலுத்த துவங்கினேன். இதுவரைக்கும், 1,500 படங்களுக்கு மேல் பேசியிருக்கிறேன்.வருமானம் தரக்கூடிய தொழில், புகழ் கிடைக்குது என்பதை எல்லாம் தாண்டி, சினிமாங்கிறது என்னோட சுவாசம். அந்த சுவாசத்தோட, 37 ஆண்டு களா சினிமா உலகத்தில் சுழன்றுட்டு இருக்கேன். 60 வயதில் ரிட்டயர்டாகி ஓரமாக உட்கார்ந்து, மோட்டு வளையை பார்த்துட்டு இருக்குறதில்லை வாழ்க்கைன்னு நினைக்கிறவன் நான்.வயசாகிட்டா வரும் சோர்வில், இரண்டு வகை இருக்கு. உடல் சோர்வு ஒண்ணு. அதை சரி பண்ணிடலாம். மனசு சோர்வடைஞ்சா ஒண்ணும் பண்ண முடியாது. அடுத்த வேலை என்ன, அடுத்த வேலை என்னன்னு போய்க்கிட்டே இருந்தால், மனசுக்கு சோர்வே வராது.நடிப்பை பொறுத்தவரை, என் வயசுக்கேத்த கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதில் என் முழு ஈடுபாட்டையும் செலுத்துறேன். முகத்தில் சுருக்கம் வந்துடுச்சு. அதை மேக்கப் போட்டு சரி செய்றதா... இல்லை அப்படியே விட்டுடலாமா... அதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டலாமா என்றெல்லாம் யோசிக்கிறதில்லை. என் உடம்புக்கு வயசு 66; ஆனால், மனசுக்கு 26 தான். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஷூட்டிங்னா ஆறு மணி நேரம் எதை பத்தியும் நினைக்காமல் ரெஸ்ட் எடுப்பேன். மத்தவங்க விஷயத்தில் அதிகமாக மூக்கை நுழைக்க மாட்டேன்; அதனால் தான் நிம்மதியாக இருக்கேன்.இன்றைய தலைமுறைக்கு அறிவுரையெல்லாம் சொல்லக் கூடாது. பொதுவா யார்கிட்ட குறைகளை கண்டுபிடிச்சாலும், அதை நாசுக்கா, தனியா சொல்லணும். நிறைகளை சபையில் சொல்லணும். யார் மனதையும் புண்படுத்தக் கூடாது.எனக்கு கிடைச்சதை நான் மகிழ்ச்சியோட ஏத்துக்கறேன். கிடைக்காததை நினைச்சு கவலைப்படுறதில்லை. பபேன்னாலும் சரி... பழைய சாதம்னாலும் சரி... ஓகே. வயிறு நிறைஞ்சா போதும். 25,000 ரூபாய் ஷூ போடுறவனை பத்தி நினைக்க மாட்டேன்.சாதாரண செருப்பு போட என் இரண்டு காலும் நல்லாயிருக்கே... அது போதும்னு திருப்திபட்டுக்குவேன். அந்த திருப்தியான மனநிலை தான், இந்த வயசுலயும் என்னை வேகமாக, உற்சாகமாக ஓட வச்சுட்டே இருக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை