உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வாய்ப்பையும் நேரத்தையும் இழக்க கூடாது!

வாய்ப்பையும் நேரத்தையும் இழக்க கூடாது!

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த, சமூக நல ஆர்வலர்களான நித்யா - சிவா தம்பதியின் மகன் அனீஷ், மகள் ஜான்வி பல்வேறு உலக சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். அவர்களின் தாய், நித்யா:'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பர். நானும், கணவரும் சமூக நல ஆர்வலர்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தலைமுடி கொட்டி போன பெண்களுக்கு என் தலைமுடியை தானமாக வழங்கினேன். அதைப் பார்த்து, எந்தக் கூச்சமும் படாமல், 'அம்மா... நானும் அந்த நோயாளிகளுக்காக என் தலையை மொட்டையடித்துக் கொள்கிறேன்' என்று ஜான்வி சொன்னபோது, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களே கண்கலங்கி, அவளுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டினர்.அதுமட்டுமல்ல... கடற்கரையை சுத்தம் செய்தல், இயலாதவர்களுக்கு உணவு வழங்குதல் என, எங்களுடன் ஜான்வியும் தன்னார்வலராக இணைந்து பணியாற்றுகிறாள். நானும், கணவரும் உடல் தானத்திற்கு அரசாங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளோம். அதைப் பார்த்து மகனும், மகளும் பதிவு செய்துள்ளனர். '4 வயது சிறுமிக்கு எப்படி இந்தச் சிந்தனையும், சமூக செயல்பாடுகளும் வந்தது?' என பலர் வியந்து கேட்கின்றனர்.தன், ஒன்றரை வயதிலிருந்தே ஜான்வி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பாள். எங்கள் வீட்டில் அனைவரும் சாதனையாளர்கள். எங்கள் மகனுக்கு இப்போது, 10 வயது; ஆறாம் வகுப்பு படிக்கிறான். இதுவரை, 40க்கும் மேற்பட்ட உலக சாதனைகள் படைத்துள்ளான். அண்ணனைப் பார்த்து தான் ஜான்விக்கும் ஆர்வம் ஏற்பட்டது.தினசரி காலையில் நாங்கள் செய்யும் உடற்பயிற்சி ஆசனங்களைப் பார்த்த அவள், 2 வயதிலேயே, 15க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து பழகினாள். அதற்கும் முன்பாகவே, தமிழின் உயிர், மெய் எழுத்துகளை கற்று, பிழை இல்லாமல் அதிவேகமாக கூறியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.அதன் பின் தான் தெரிந்தது... 2 வயதில், பிழையில்லாமல், இவ்வளவு குறுகிய வினாடிகளில் யாருமே சாதனை செய்யவில்லை என்று! அதையே முதல் சாதனை ஆக்கினோம். அதேபோல் ஒன்பது ஆசனங்களை ஒரே நிமிடத்தில் செய்து அசத்தியது, இரண்டாவது சாதனையானது.எங்கள் மகன் சிலம்பம் பழகுவதைப் பார்த்து, ஜான்விக்கு ஆர்வம் ஏற்பட்டு, வீட்டிலேயே கற்றுக்கொண்டாள். தொடர் பயிற்சி காரணமாக, கண்களைக் கட்டிக்கொண்டு, பானை மீது நின்று சிலம்பம் சுற்றி, சாதனை படைத்தாள்.இதுவரை, 10 உலக சாதனைகள் வரை படைத்துள்ளாள். 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய நிறுவனங்கள் சான்றளித்து, பாராட்டி உள்ளன.வாழ்க்கையில் எதை இழந்தாலும், வாய்ப்பையும், நேரத்தையும் இழக்கவே கூடாது. ஏனெனில், அவற்றை திரும்ப பெற முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி