வீட்டு வாசலில், 'இன்று ஒரு தகவல்' எழுதி வைக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கையைச் சேர்ந்த கணேசன்:திருவாரூர் மாவட்டம், புத்தகரம் ஏனகுடி தான் சொந்த ஊர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். எங்கள் குடும்பம் ஏழை நெசவாளர் குடும்பம்.'காஞ்சிபுரம் போனால் காலாட்டி பிழைக்கலாம்' என்று சொல்வர். எனவே, நெசவை நம்பி காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்தோம்.உண்மையில் நெசவு எங்களை கைவிடவில்லை; லுங்கி வியாபாரம் கைகொடுத்தது. திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2018, பிப்., 28ல் முதன் முதலாக வீட்டு வாசலில், இன்று ஒரு தகவல் எழுதத் துவங்கினேன். அப்போது, பலரும் படித்துவிட்டு வேடிக்கையாக கடந்து சென்றனர்; கடைசியில் பிடித்து போய் வாசகர்களாகி விட்டனர்.அன்று முதல் இன்று வரை நாள் தவறாமல், தங்கு தடையின்றி என்னுடைய தகவல் சேவை தொடர்கிறது. ஒரு நாள் தாமதமாகி விட்டால், 'ஏன் இன்னும் இன்றைய தகவல் மாட்டவில்லை?' என்று கேட்பர்.பலரும் எங்களை சிரமப்படுத்தாமல், வாசலில் காத்திருப்பர். 'உங்களுடைய தகவல்களை படித்தால் தான், முழு உற்சாகத்துடன் வேலையில் ஈடுபட முடிகிறது' என்கின்றனர்.இந்த தகவல்களை சிறு வயது முதலே வார, மாத இதழ்கள், தினசரிகளில் படித்ததை, மனதில் பதிந்ததை தொகுத்து வைத்திருக்கிறேன். அதில் இருந்து தான் எழுதுகிறேன்; அதை தற்போது பென் டிரைவில் சேமித்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும், நான்கைந்தை தேர்வு செய்து எழுதுவேன். அதில் தாய், தந்தை, குடும்ப உறவு என, கண்டிப்பாக ஒன்றை சொல்லி விடுவேன்; மீதியை, 'ஆல் ரவுண்டாக' எழுதுவேன். பலர் இதை மொபைல் போனில் படம் பிடித்து, வாட்ஸாப்பில் அனுப்ப, அவர்கள் மற்ற குழுக்களுக்கு அனுப்ப, பல லட்சம் பேர் இன்று படிக்கின்றனர். ஒரு நாள் நான் ஊரில் இல்லாதபோது என் மகன் எழுதி வைக்கவும், 'கணேசனுக்கு என்னாச்சு? கையெழுத்து மாறிப் போயிருக்கிறதே...' என்று விசாரிக்க வந்து விட்டனர். அன்றில் இருந்து வியாபார விஷயமாக வெளியூருக்கு சென்றாலும், நானே என் கைப்பட எழுதி, தேவையான நாட்களுக்கு, தேவையான தகவல்களை கரும்பலகைகளில் எழுதி வைத்துவிட்டு செல்கிறேன்; அதை மனைவி கொண்டு வந்து, வாசலில் மாட்டி விடுவார். மகன்களிடம், 'முதலில் நான் இறந்து விட்டால், அம்மாவை உங்களுடன் அழைத்து சென்று விடுங்கள்; ஒருவேளை, அம்மா இறந்து விட்டால், என்னை இங்கேயே விட்டு விடுங்கள்; தினமும் தகவல்களை எழுத வேண்டும்' என்று எப்போதோ சொல்லி விட்டேன்.தொடர்புக்கு: 94436 40267