உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சோதனைச்சாவடி பணிக்கு போட்டா போட்டி!

சோதனைச்சாவடி பணிக்கு போட்டா போட்டி!

''மக்கள் வரிப்பணத்தை பாழடிக்கறா ஓய்...'' என்ற பரபரப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார், குப்பண்ணா.''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்யறாளே... சமீபத்துல கூட, 65 பேரை ஒட்டுமொத்தமா மாத்தினால்லியோ... சில சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூணு வருஷத்துல, மூணு, நாலு முறை மாத்தப்பட்டிருக்கா ஓய்... ''அரசாங்கத்துல ஒரு துறையை நன்னா புரிஞ்சுக்கவே ஒரு வருஷம் ஆகிடும்... அதுக்குள்ள சட்டுபுட்டுன்னு இடமாற்றம் பண்றதால, பணிகள் பாதிக்கப்படறது ஓய்...''இது ஒருபக்கம் இருந்தாலும், புதுசா வேற துறைக்கு மாறி போகும் அதிகாரிகள், அவா இஷ்டத்துக்கு ஆபீஸ்ல மேஜை, நாற்காலி, சோபாக்களை வாங்கி போடறா... இதுக்கு 20ல இருந்து 30 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாறது ஓய்...''இந்த மாதிரி நிறைய அதிகாரிகள் பண்றச்சே, செலவுகள் கோடிகள்ல எகிறிடறது... இதனால, 'அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் தான், அதிகாரிகள் அறைகளை புதுப்பிக்கலாம்னு ஆர்டர் போடணும்'னு கோட்டை வட்டாரத்துல பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தி.மு.க., புள்ளியின் உறவினரை கண்டுக்கல பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''திண்டுக்கல் மாநகராட்சி கணக்கு பிரிவு இளநிலை உதவியாளர் சரவணன், 4.66 கோடி ரூபாய் வரிப்பணத்தை கையாடல் பண்ணிய குற்றச்சாட்டுல, 'சஸ்பெண்ட்' ஆகிட்டாரு... இதை கவனிக்காத கண்காணிப்பாளர் சாந்தியும், இளநிலை உதவியாளர் சதீஷும் சஸ்பெண்ட் ஆகியிருக்காங்க பா...''இதுல, கண்காணிப்பாளர் சாந்திக்கு உதவி வருவாய் அலுவலர் உட்பட மூணு பொறுப்பு கள் இருந்ததால, அவங்களால கணக்கு பிரிவை கவனிக்க முடியாம இருந்துச்சு... இதனால, மாநகராட்சியின் முக்கிய பதவியில இருக்கிற தி.மு.க., நிர்வாகி, தன் அக்கா மகனை கணக்கு பிரிவை கவனிக்க நியமிச்சாரு பா...''கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா அக்கா மகன் தான், அன்றாட வசூல் பணத்தை வங்கியில் கட்டுற வேலையை பார்த்தாரு... ஆனா, பணம் கையாடல் விவகாரத்துல, அக்கா மகனிடம் விசாரணையே நடத்தல... ''அவரையும் விசாரிச்சா தானே உண்மை தெரியும்னு மாநகராட்சி ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''எல்லைக்கு போக போட்டி போடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''ராணுவத்துலயாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''அட நீரு வேற... தமிழகம் - கர்நாடகா எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் உள்வழி, வெளிவழின்னு ரெண்டு போக்குவரத்து சோதனைச் சாவடிகள் இருக்கு... இது போக, பாகலுார் சாலையில், நல்லுார் சோதனைச் சாவடி இருக்கு வே...''இங்க, கடந்த ரெண்டு வாரத்துல, ரெண்டு முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துனாவ... அப்ப, கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை பறிமுதல் செஞ்சாவ வே...''இந்த சோதனை சாவடிகள்ல, ஒரு நாளைக்கு அதிகபட்சம் தலா, 4 லட்சம் ரூபாய்க்கு மேல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லா கட்டிடுதாவ... ''இதுல, உயர் அதிகாரிகள் வரை பங்கு போவுது... இதனால, இங்க பணிக்கு வர, 50 லட்சம் ரூபாய் குடுக்கவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தயாரா இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 23, 2024 16:56

துறைகள் கிடக்கட்டும் ஒரு அலுவலகத்துக்குள்ளேயே கூட புது அதிகாரி மாற்றி வந்தால் அறையில் மேஜை முதல் புதிதாக வேண்டும் என்று சில ஆயிரங்களாவது செலவு வைத்து விடுவார்கள் ஐ. ஏ . எஸ் களுக்கு கேட்க வேண்டுமா ? ஒவ்வொருவரும் இவ்விதம் incidentals என்றே கஜானாவை துடைத்துவிடுவார்கள்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை