மனிதர்களே இப்படித்தான்!
கீரப்பாளையம் என்ற ஊரில், ஒரு பாட்டி இருந்தாள். அவளது மகள் அழகே உருவானவள். சிறு வயதிலேயே, திருமணம் முடிந்தது. கடமை முடிந்து விட்டது என்று, பாட்டி திருப்தியடைந்தாள். அந்த நேரத்தில், புருஷன் வீட்டுக்குப் போன மகள், சோகம் ததும்பிய முகத்தோடு, பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள். கர்ப்பிணி என்றும் பாராமல், அவளை அடித்து, தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டான், இரக்கமற்ற கணவன்.அவள் அழகான, ஆண் குழந்தையை பெற்றாள். சில நாட்களிலே இறந்துவிட்டாள். மகளை இழந்த பாட்டிக்கு, ஒரு பேரன் கிடைத்து விட்டான்.குடிசையில், ஒண்டிக் குடித்தனம் நடத்தி வந்த பாட்டி, பேரனை சீராட்டி வளர்த்தாள். தாயின் முகமறியாத குழந்தை அது. சிரித்து விளையாடும் போது, 'மானே... மயிலே... மரிக்கொழுந்தே...' என்று கொஞ்சுவாள். அழ ஆரம்பித்து விட்டால், 'நாயே... பேயே... சனியனே...' என்று திட்டத் துவங்கி விடுவாள்.ஒரு நாள்-குழந்தை, தொடர்ந்து அழுதபடியே இருந்தது. பாட்டி, சமாதானம் சொல்லி பார்த்தாள். அழுகையை நிறுத்தியபாடில்லை. அப்போது, இரை தேடி அலைந்து கொண்டிருந்த ஓநாய் ஒன்று, அங்கு மிங்கும் சுற்றி விட்டு, பாட்டியின் குடிசை பக்கம் வந்து நின்றது.குடிசைக்குள்ளே குழந்தையின் அழுகை சத்தமும், பாட்டியின் அதட்டலும் ஓநாயின் காதில் விழுந்தது. குழந்தையை அதட்டியபடி, 'இனியும் அழுகையை நிறுத்தா விட்டால், என்ன செய்வேன் தெரியுமா... உன்னை துாக்கி போய், குடிசைக்கு வெளியே நிற்கும் ஓநாய்க்கு போட்டு விடுவேன்...' என்று, சத்தம் போட்டு பயம் காட்டினாள், பாட்டி.குடிசைக்கு வெளியே பசியுடன் நின்று கொண்டிருந்த ஓநாய், இதைக் கேட்டு, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது.'இன்னும் சிறிது நேரத்தில், குழந்தையை, குடிசைக்கு வெளியே வீசுவாள்' என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது.நேரம் செல்ல செல்ல, ஓநாய்க்குப் பசி அதிகரித்தது. எதிர்பார்த்தபடி, குழந்தையை வெளியே கொண்டு வரவில்லை பாட்டி. குழந்தையின் அழுகை படிப்படியாக குறைந்து, முழுவதுமாக நின்று விட்டது.அழுகையை நிறுத்தி, சிரித்த குழந்தையை கண்ட பாட்டி, 'ராசா... இப்பத்தான் நிம்மதி; நல்லா துாங்கு... இப்ப அந்த ஓநாய் வரட்டும்; இங்கிருக்கிற உலக்கையால் ஒரே அடியில், தலையை சுக்கு நுாறாக்கி விடுறேன்...'' என்றாள்.'குழந்தையைத் தின்னலாம்' என்று பசியுடன் காத்திருந்த ஓநாய், 'ச்சே... இந்த மனிதர்களே இப்படி தான்; சொல்வது ஒன்று; செய்வது வேறு' என்று நினைத்தபடியே, அவ்விடத்தை விட்டு சென்றது.குட்டீஸ்... காதில் விழும் வார்த்தையில், உண்மை இருக்கிறதா என்பதை, நிதானமாக சிந்தித்து முடிவு செய்தால், வாழ்க்கையில் உயரலாம்.