உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (122)

அன்பு ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 2 படிக்கும் மாணவி எழுதிக் கொண்டது. எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம்; நிறைய படிக்க ஆசை; வசிப்பது குக்கிராமம்; நான் விரும்புகிற பாடப்பிரிவு உள்ள கல்லுாரி, அருகில் இல்லாததால், நிச்சயமாக விடுதியில் தங்கி தான் படிக்க வேண்டிய நிர்பந்தம். 'அப்படி ஒரு படிப்பு தேவையில்லை; உனக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறேன்...' என்கிறார் அப்பா.விடுதியில் தங்கிப் படித்தால் கெட்டுப் போய் விடுவேன் என்று பயப்படுகிறார் ஆன்டி. 'பொத்தி, பொத்தி வளர்த்துட்டோம்; உன்னை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்து விட்டால், எங்கள் கடமை முடிந்து விடும்!' என்கிறார் ஆன்டி.என் தலையில் இடி விழுந்ததை போல இருக்கு... படித்து, நல்ல வேலைக்கு போய் கைநிறைய சம்பாதித்து, பெற்றோரை நன்றாக வைத்துக் கொள்ள ஆசை. அதுக்குள்ள, குடும்பம், குழந்தைன்னு ஒரு வாழ்க்கையை என்னால நெனச்சு கூட பார்க்க முடியாது. எங்கம்மா எவ்ளோ சொல்லிட்டாங்க, கேட்க மாட்றார்; உங்க மேல, நல்ல மதிப்பு உண்டு; நீங்க சொன்னா நிச்சயம் கேட்பாரு ஆன்டி. தயவுசெய்து, என் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்லுங்க ப்ளீஸ்...அச்சச்சோ... அழாதம்மா... படிப்பின் மீது உனக்குள்ள ஆர்வம் புரியிது. அவ்ளோ சீக்கிரம் திருமணம் செய்து செட்டில் ஆகும் வயதுமில்லை. பெண்கள் ஒவ்வொருவரும், சுய காலில் நிற்கும் அளவிற்கு, படிப்பு மிகவும் அவசியம். உனக்காக, நான் பரிந்து பேசுறேன். 'உங்கப்பா பயப்படுவது போல, விடுதியில் கிடைக்கும் சுதந்திரத்தை, தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன்; நல்ல தோழியருடன் பழகி, நல்ல பெயர் எடுப்பேன்' என்று நீ எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும்; ஓ.கே.,இந்த, 'அட்வைஸ்' உன் அப்பாவுக்கு,அன்பு சகோதரருக்கு வணக்கம்!என் மீது தாங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி... உங்கள் குடும்பப் பிரச்னையில் தலையிடுவதற்கு மன்னிக்கவும்.மகளின் படிப்பு, எதிர்காலம் கருதிய விஷயம் என்பதால், இதில் தலையிடுகிறேன்.இன்றைய காலகட்டத்தில், விடுதி என்றாலே ஆண் பிள்ளை ஆகட்டும், பெண் பிள்ளை ஆகட்டும் பயப்படத்தான் வேண்டியுள்ளது. காரணம், அங்கு நடக்கும் விஷயங்கள் அப்படி... எல்லா இடங்களிலும் தவறு நடக்கிறது என்பது இல்லை. நல்ல கல்லுாரி, நல்ல விடுதி என்றால், நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் மகளை எப்படி வளர்த்துள்ளீர் என்பது, உங்களுக்குத் தெரியும். எனவே, நம் பிள்ளைகள் மீது, நாம் எப்போதும் கவனம் செலுத்தினால், அவர்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பு குறைவு. இந்த காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது, அவர்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல; அப்போது தான் நல்ல வரன்களே கிடைக்கிறது. இப்போதெல்லாம் அதிகம் படிக்காத, வேலைக்கு போகாத பெண்களுக்கு, அதற்கேற்றார் போல் தான் மாப்பிள்ளையும் அமைவர்.விடுதிக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அவள் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம். மகளது ஆசையை தடை செய்து, திருமணம் செய்து வைத்தால், சந்தோஷமாக வாழ்வாள் என்று நினைக்கிறீர்களா... ஏதாவது காரணம் காட்டி, கண்ணை கசக்கியபடி வந்து நிற்பாள்..நம்பிக்கையுடன் மேற்படிப்பு படிக்க வையுங்கள்; அவள் படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, கை நிறைய சம்பாதிக்கும் போது, சந்தோஷத்தில் பூரித்து போவீர்கள். பிறகு, நல்ல மாப்பிள்ளை தானாகவே தேடி வரும். சரி தானே பிரதர்!- அன்புடன், ஜெனிபர் பிரேம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !