இளஸ் மனஸ்! (228)
அன்பு பிளாரன்ஸ் அம்மா...என் வயது, 13; தனியார் பள்ளி ஒன்றில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன். என் வகுப்பு தோழன், எகிப்து நாட்டில் மட்டும் தான் பிரமிடுகள் இருப்பதாக கூறுகிறான். இது உண்மையா... உலகில் வேறெங்கும் பிரமிடு இருக்கிறதா... இருந்தால் அது பற்றி பட்டியலிடவும்...பிரமிடுக்குள் வைத்திருக்கும் உடலை, 'மம்மிபிகேஷன்' செய்திருப்பதாக கூறுகின்றனர். அதை எப்படி செய்கின்றனர்; பிரமிடுகளை கட்டியது வேற்று கிரகவாசிகள் என்கின்றனரே. உண்மையா... விளக்கம் தாருங்கள் அம்மா.இப்படிக்கு,ஆர்.எஸ்.காத்தலிங்கம்.அன்புள்ள மகனுக்கு...வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தில் மொத்தம், 138 பிரமிடுகள் உள்ளன. கி.மு., 2,780ல், மன்னர் ஜோசரின் கட்டடக்கலை வல்லுநர் இம்ஹோடெப் தான் முதல் பிரமிடை கட்டியதாக வரலாறு கூறுகிறது.எகிப்து பிரமிடுகளை வெளிகிரக வாசிகள் கட்டியது என்பது எல்லாம் வடிகட்டிய கற்பனை; கட்டுக்கதை. பழங்காலத்தில் மரணத்திற்கு பின், ஒரு வாழ்க்கை இருப்பதாக கருதி, மன்னர் உடல்களை, 'மம்மிபிகேஷன்' செய்து பிரமிடுக்குள் பாதுகாத்தனர்.மம்மிபிகேஷன் செய்யும் முறை பற்றி பார்ப்போம்...முதலில், மன்னர் இறந்ததை நாடு முழுதும் அறிவிப்பர். பின், உடலை, 'நேட்ரான்' என்ற உப்பு போட்டு பதப்படுத்துவர். உடலில், மூளை மற்றும் உள்ளுறுப்புகளை அகற்றுவர்; அதை, 40 நாட்கள், வெயிலில் காய வைப்பர்.பின், உடல் முழுக்க எண்ணெய் தடவி, லினன் துணியால் சுற்றுவர். முகத்துக்கு, முகமூடி, உடலுக்கு தங்க நகைகள் அணிவித்து, சவப்பெட்டியில் வைப்பர். பின், பிரமிடில் உடலை பாதுகாப்பாக வைப்பர்.எகிப்தை தவிர்த்து, ஆசிய நாடுகளான, இந்தோனேஷியா, சீனா, கம்போடியா, ஆப்ரிக்க நாடுகளான கீத்மாலா, சூடான், வட அமெரிக்க நாடான மெக்சிகோ, ஐரோப்பிய நாடான இத்தாலி, மத்திய கிழக்கு நாடான ஈராக், தென் அமெரிக்க நாடான பெருவிலும் பிரமிடுகள் உள்ளன. உலகின், மிக பெரியதாக கருதப்படுவது மெக்சிகோவில் இருக்கும் சோலுலா பிரமிடு.உலகின் முக்கிய பிரமிடுகளை வரிசைப்படுத்துகிறேன்...* எகிப்தின் மிகப் பழமையான ஜோசர் பிரமிடுகள்* மெக்சிகோவில் உள்ள சூரிய பிரமிடு கி.மு., 100ல் கட்டப்பட்டது. இது, 65 மீட்டர் உயரம் உடையது * மெக்சிகோவில் அல் கேஸ்டியோ பிரமிடுகள் கி.மு., 1000ல் கட்டப்பட்டது. இதை மாயன் கோவில் என்பர்; 30 மீட்டர் உயரம் உடையது* கம்போடியாவில் பிராங்க் பிரமிடு கோவில் கி.பி., 921ல் கட்டப்பட்டது * எகிப்திய பிரமிடு குபு, கி.மு., 2650ல் கட்டப்பட்டது * சீனா ஜியான் பகுதியில், கி.மு., 400ல் கட்டப்பட்ட, 43 அடி உயர பிரமிடு * ஈராக் நஸ்சிரியா பகுதியில் சுடு செங்கல்லால் கட்டப்பட்ட ஜிக்குராத் பிரமிடு * சூடானில் கி.மு., 500ல் அமைந்த காஸ்தா மிரோ கல்லறை; இது நுபியன் பிரமிடு வகை * இந்தோனேஷியா, ஜாவாவில் கி.மு., 800ல் கட்டப்பட்ட போரோ புத்தர் கோவில் பிரமிடு * கீத்மாலாவில், கி.பி., 200ல் கட்டப்பட்ட திகால் விட்டென் பிரமிடுகள் * எகிப்தின் டெக் ஷர் நகரில் சுண்ணாம்பு கல்லால், கி.மு., 2600ல் கட்டப்பட்ட வளைந்த பிரமிடு * இத்தாலி, ரோமில் கி.மு., 12ல் கட்டப்பட்ட செஸ்டிபல் பிரமிடு * இந்தோனேஷியா ஜாவாவில், கி.மு., 1500ல் கட்டப்பட்ட சுஹூ பிரமிடுகள். இவை எல்லாம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளன. பிரமிடுகள் உலக அதிசயங்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. வாழ்நாளில் ஒரு முறையாவது எகிப்து பிரமிடுகளை நேரில் தரிசிக்க வேண்டும் என்பது என் பேரவா; உனக்கும் தானே...- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.