அன்பின் விளைவு!
நீலகிரி மாவட்டம், கல்லக்கொரை அரசு உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...பள்ளி ஆண்டு விழாவையொட்டி ஓட்டப்பந்தயம், ஆடல், பாடல், பேச்சு போட்டிகள் அமர்க்களமாக நடந்தன. மதியம் நடந்த விருந்தில், கேசரி, வடை, ஐஸ்கிரீம் மற்றும் வாழைப்பழம் பரிமாறப்பட்டது. இவற்றை வீட்டில் இருந்த என் தங்கைகளுக்கு கொடுக்க பொட்டலமாக கட்டி புத்தகப் பைக்குள் வைத்தேன்.நிகழ்ச்சி முடிந்து, வீடு திரும்பிய போது, தந்தைக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்கு நானும் உடனிருந்து அழைத்து சென்றேன். புத்தகப்பைக்குள் இருந்த உணவு பொட்டலத்தை மறந்து விட்டேன். தொடர்ந்து, 10 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி சென்ற போது தான் புத்தகப்பையை திறந்தேன்.கெட்ட வாடை, 'குப்'பென வீசியதால் அதிர்ச்சி அடைந்தேன்; உணவு பொட்டலம் கிழிந்து குப்பையாய் கிடந்தது. வாழைப்பழம் அழுகி துர்நாற்றம் வீசியது. ஐஸ்கிரீம், கேசரி உணவுகள் கெட்டு, நோட்டு புத்தகங்களில் கறையாக படிந்திருந்தது. உடனிருந்த மாணவர்கள் விஷயத்தை ஆசிரியரிடம் கூறினர்; அவரது உதவியால் புதிய நோட்டு புத்தகங்கள் கிடைத்தன. நன்றாக படித்து வகுப்பில் முதன்மை மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன்.தற்போது, என் வயது, 63; தமிழக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தையும், புத்தகங்கள் தந்து உதவிய ஆசிரியரையும் மனம் மறக்க மறுக்கிறது.எல்.மூர்த்தி, கோவை.தொடர்புக்கு: 77087 71321