இளஸ்... மனஸ்... (260)
அன்புள்ள அம்மா...என் வயது, 16; பிளஸ் 1 படிக்கும் மாணவி. எனக்கு கீச்சுக்குரல் உள்ளது. அது பிடிக்கவில்லை. மிகவும் உறுத்தலாக உள்ளது. தோழியர், 'கீச்சி' என என்னை பட்டப் பெயரால் ஏளனமாக அழைக்கின்றனர். அது மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. மனிதர்களுக்கு குரல் எவ்வாறு உருவாகிறது... குரல் வகைகள் என்னென்ன... உலகின் கவர்ச்சிகரமான குரலுக்குரியவர் யார்... என் குரலை, விருப்பத்துக்கு தக்கவாறு சிறப்பாக மாற்ற முடியுமா... தக்க பதில் தாருங்கள்!இப்படிக்கு,யு.அக்சர செல்வி.அன்பு செல்லம்...ஒரு மனிதனுக்கு, குரலும், பேச்சும் எப்படி உருவாகிறது தெரியுமா...நுரையீரலில் இருந்து இரு வழி காற்று போக்குவரத்தால் குரல் உருவாகிறது. காற்று தொண்டைப் பெட்டியை தாண்டும் போது, அதிர்வடைகிறது. நாக்கு, உதடு ஒத்துழைப்புடன் பேச்சு உருவாகிறது. தொண்டை, மூக்கு, வாய் ஒன்று சேர்ந்து, ஒரு குரலை தனித்துவம் ஆக்குகின்றன.அந்த குரல் அர்த்தப்பூர்வமான பேச்சாக மாறுவது, மூளையின், 'நியூரான்' செல்களால் ஏற்படுகிறது. ஆண்கள் குரலை டெஸ்டோஸ்டிரோனும், பெண்கள் குரலை ஈஸ்ட்ரோஜென்னும் ஊக்குவிக்கின்றன.ஒரு குரலின் தன்மையை மரபணுக்கள், பாலினம், ஹார்மோன் சுரப்பு, எடை, உயரம், உதடு பிளவு போன்றவையே தீர்மானிக்கின்றன. சரி... இனி குரல்களின் வகைகள் பற்றி பார்க்கலாம்...பெண்கள் குரலை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை...* சோப்ரனோ - சிறுவர், சிறுமியின் உச்சபட்ச குரல்* மிசோ சோப்ரனோ - சோப்ரனோவில் பாதி குரல்* கன்ட்ரோல்டோ - ஆண்மை ததும்பும் பலவீனமான குரல்.ஆண்கள் குரலையும் வகைப்படுத்தலாம்.அவை...* கவுன்ட்டர் டெனோர் - உச்சக்குரல்* டெனோர் - நடுத்தரமான குரல்* பேஸ் - அடித்தொண்டைக்குரல்.ஒரு மனிதன் சாதாரணமாக பேசும் போது, ஒலியளவு, 60 டெசிபல் இருக்கும். கின்னஸ் சாதனை புரிந்த, ஜில் டிராக் என்பவரின் குரல், 129 டெசிபல் இருந்தது. ராக்கெட் பறக்கும் போது சத்தம், 204 டெசிபல் வரை இருக்கும். உலகில் வாழும், 801 கோடி மக்களின் குரல்களும், அவர்களின் கைரேகைகள் போல, தனித்துவம் மிக்கவை என்ற உண்மையை அறிந்து கொள்.உலகில், கவர்ச்சிகரமான ஆண் குரலுக்கு சொந்தக்காரராக சிலர் உள்ளனர். அதில், பாடகர்கள் எல்விஸ் பிரஸ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜஸ்டின் டிம்பர் லேக், ஸ்பானிஷ் பாப் படகர் ரிக்கி மார்ட்டின், பிரபல நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.கவர்ச்சிகரமான பெண் குரல் உடையோரைப் பார்ப்போம். இதில், பாடகியர் பியோன்ஸ், மரியாகரே, ஜானட் ஜாக்சன், லதா மங்கேஷ்வர், பி.சுசீலா, ஹிலாரி டப் போன்றோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.சரி... உன் குரலை மருத்துவ ரீதியாக மாற்ற முடியுமா என்று பார்ப்போம்... சில பயிற்சிகள் மூலம், குரல் அமைப்பை மாற்றி விட முடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதற்கு...* பேச்சு பயிற்சி* குரலை மேன்மைப்படுத்தும் அறுவை சிகிச்சை* லேசர் தொண்டை பெட்டி இசைவித்தல் அல்லது ஒட்டியாவிப்பு* சுருதி சமனப்படுத்தும் அறுவை சிகிச்சை போன்றவை செய்ய வேண்டும். அதற்கு வேண்டிய முயற்சியை செய்.விரும்பிய குரலுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.