இளஸ் மனஸ்! (266)
அன்புள்ள ஆன்டி...என் வயது, 15; அரசு பள்ளியில், 10 வகுப்பு படிக்கும் மாணவன். எங்கு சென்றாலும், பல்வகை சீருடையணிந்த மனிதர்களை பார்க்கிறேன். அது எரிச்சல் தருகிறது.மனிதரை வகைப்படுத்தி, தரம் பிரித்து, சாயம் பூசும் சீருடைகள் எதற்காக அணிய வேண்டும். சீருடைகள் மனிதரை அடிமைப்படுத்துவதாக எண்ணுகிறேன். எனவே, அது ஒழிய வேண்டும் என விரும்புகிறேன். இது குறித்து, உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.இப்படிக்கு,ஆர்.எம்.சதக்கத்துல்லா.அன்பு செல்லத்துக்கு...ஒரு அமைப்பில் உறுப்பினராய் இருப்போர், அமைப்பு ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, பிரத்தியேகமான சீருடையை அணிகின்றனர். அதை அணிவோர் அது பற்றி பெருமையும் படுகின்றனர். சீருடை அணிந்தவர்களை பார்க்கும் போது, மக்களின் மனநிலை நேர்மறையாக பிரகாசிக்கிறது. சில இடங்களில் நம்பிக்கையும் மலர்கிறது.கீழ்க்கண்ட அமைப்புகளில் அல்லது தொழிலில் இருப்போர் சீருடையில் அதிக கவனம் செலுத்துவதை பார்க்கலாம்.அவை...* ராணுவம், காவல்துறை* மருத்துவர் மற்றும் செவிலியர் நங்கையர்* நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்* கப்பல் மாலுமி, விமான பைலட்டுகள்* தீயணைப்பு படை வீரர்கள்* பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்.பள்ளியில், மாணவ, மாணவியர் சீருடை அணிவது, பள்ளி நிர்வாகத்தின் கட்டளை. அந்த பள்ளிக்கு வெளியே உத்தரவு செல்லாது. பள்ளி மாணவர்கள் அணியும் சீருடை, ஏழை, பணக்காரர்- என்ற பாகுபாட்டை அறவே நீக்குகிறது. இது தவிர, மத்திய, மாநில அரசு பணிகளில் முக்கிய பொறுப்பு வகிப்போரும் சீருடை அணிகின்றனர்.இதை அணியாமல் அந்தந்த அமைப்பு மற்றும் துறைக்கு உள்ளேயும், வெளியேயும் பணி செய்ய இயலாது.சாதாரண வேட்டி, சட்டை அணிந்த ஒருவர், நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தால் ஏற்றுக் கொள்வோமா... சற்று சிந்தித்து பார்க்கவும்.பேகிஸ் டவுசரும், டி - சர்ட்டும் அணிந்தவர் வாகன போக்குவரத்தை நெறிபடுத்தினால் ஏற்றுக் கொள்ள மனம் வருமா...நைட்டி அணிந்த செவிலியர், மருத்துவ சிகிச்சையின் போது ஊசி போட்டால் ஒப்புக் கொள்வோமா...சீருடை அணியும் வழக்கம், அந்தந்த பணியிடத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது. கண்ணிய செயல்பாட்டையும், அதற்கு உரிய மரியாதையும் பெற்றுத் தருகிறது.சகோதரத்துவமும், சமத்துவமும் பூக்க வைக்கிறது. சீருடையில் கவனம் செலுத்தாத சமூகம் பாழடைந்து விடும். நாளை நீயும் படித்து முடித்து வேலைக்கு செல்லும் போது, ஏதேனும் முக்கிய பொறுப்பில் சீருடை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, சீருடை என்பது அர்ப்பணிப்பான பணிக்கு உரியது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வாய். பள்ளியில் படிக்கும் நீ, சீருடை அணிவதை தவறாமல் பின்பற்று. வாழ்வில் வெற்றிகள் குவிய வாழ்த்துகள்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.