உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (282)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 17; தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி. வகுப்பறையில் ஒருநாள், 'யானை ஒரு லிவ்விங் பாசில். போகிற போக்கை பாத்தால், உங்க பேரக் குழந்தைகள் எல்லாம் உயிருடன் யானையை பார்க்க மாட்டர். யானை இல்லாத உலகம் உருவாகிறது...' என்றார் உயிரியல் ஆசிரியர். எனக்கு அது தெளிவாக புரியவில்லை. ஆசிரியர் கூறியபடி, 'லிவ்விங் பாசில்' என்றால் என்ன... அது அழிந்து போன உயிரினங்களைப் பற்றியது தானே... உலகில் யானை மட்டும் தான் அழிந்து வருகிறதா... வேறு விலங்கு வகைகளும் அழிகின்றனவா... உயிரினங்களின் அழிவு பற்றி தெளிவாக விளக்குங்கள்.இப்படிக்கு,சந்திரா குணநேசன்.அன்பு மகளே...பூமியில், 21.6 லட்சம் வகை உயிரினங்கள் வாழ்வதாக இயற்கை பாதுகாப்பு சங்க புள்ளி விபரம் தெரிவிக்கிறது. சில உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான தட்ப வெப்பம், உணவு, இனப்பெருக்க வாய்ப்பு இல்லாமல் படிப்படியாக எண்ணிக்கை குறைந்து, ஒரு கட்டத்தில் இல்லாமல் போய் விடும்.மனிதர்களுக்கு, மற்ற விலங்குகள் இரையாவதும், குறிப்பிட்ட உயிரினம் மறைந்து போக முக்கிய காரணமாக உள்ளது.ஆப்ரிக்காவில், 500 ஆண்டுகளுக்கு முன், பல கோடி யானைகள் இருந்தன. அது, 1979ல், 13 லட்சமாக குறுகியது. இப்போது, பூமியில் இருக்கும் யானைகள் எண்ணிக்கை, 4.5 லட்சம்; இந்தியாவில் வெறும், 17 ஆயிரம் தான் இருக்கிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்து, பாறை போல் மாறியுள்ள விலங்கு அல்லது தாவரத்தை, 'புதைபடிவம்' என கூறுகின்றனர் அறிஞர்கள். வண்டல் படிவுகளில், மணலில், சகதியில், புராதன கடல், குளம், ஆறுகளில் இந்த புதைபடிவங்கள் கிடைக்கின்றன. மேலும், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதைத் தான் புதைபடிவம் என, பழங்கால பொருட்கள் பற்றிய ஆய்வுத்துறையான, 'பாலியன்டாலஜி' ஏற்றுக் கொள்கிறது. உலகில் கிடைத்துள்ள தொல்லுயிர் எச்சங்களில்...சிலந்தி, அந்து பூச்சி, ஈல் போன்ற ஹாக்மீன், குதிரை லாட நண்டு, சீலாகாந்த் மீன், நாட்டிலிடே நத்தை, பிடரிக்கோடன், ஆப்ரிக்க எறும்புத்தின்னி, பூதம் சுறா, சிவப்பு பாண்டா கரடி, அமாமி முயல், முதலை, அரச நண்டு, சுறா, முதலையை முறியடிக்கும் ஆமை, வாயின் இருபுறமும் கை போன்ற அமைப்புடைய சிப்பி, மடுப்பனை, யானை மூஞ்சூறு போன்றவையும் கிடைத்துள்ளன.அழிந்து போன இனத்துக்கும், வாழும் இனத்துக்கும் இடையே ஒற்றுமையை பெரும்பாலும், புதை படிவங்களில் இருந்து கற்கலாம்.யானை இனம் அழியாமல் தடுக்க, வழிவகைகள் இருக்கின்றன.அவை... * தந்தத்திற்காக, யானைகளை கொல்லும் கயவர்களை கடுமையாக தண்டித்தல்* காடுகளை அழிக்காமல் பெருக்குதல்.இதுபோன்ற நடவடிக்கைகள் யானைகளை காக்கும். யானைகளின் இனப்பெருக்க வாய்ப்பு அதிகரிக்கும். காட்டை ஒட்டிய விளைநிலங்களில் மின்வேலி அமைக்காமல் இருப்பது மிகவும் அவசியம். அதை தடுக்கும் வகையில் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். யானை போன்ற உயிரினங்களின் எண்ணிக்கை உயர்ந்தால், உலகம் சிறப்புறும். மனித வாழ்வு வளம்பெறும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !