உள்ளூர் செய்திகள்

மிகைபடச் சொல்லேல்!

வேலுார், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், 1971-ல், 10ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியராக இருந்தார் கதிர்வேல் முதலியார். அன்றைய வகுப்பில், 'நான் வசிக்கும் பகுதியில் இருந்து யாராவது வருகிறீர்களா...' என்று கேட்டார். சிலருடன் நானும் எழுந்து நின்றேன். உடனே, 'சைக்கிள் வைத்திருப்போர் மட்டும் வகுப்பு முடிந்த பின், மாலை என்னை சந்திக்கவும்...' என்றார்.உடனிருந்த நண்பன் சைக்கிள் வைத்திருந்தான். மாலையில் ஆசிரியரைப் பார்க்க என்னையும் அழைத்தான். உற்சாகமின்றி, 'என்னிடம் சைக்கிள் இல்லையே... நீ போய் பார்...' என கூறி மறுத்து விட்டேன். என் செயலை தவறாக சித்தரித்து தமிழாசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.மறுநாள் வகுப்பில், 'நீ ஏன் என்னைப் பார்க்க வரவில்லை...' என்று கேட்டார் தமிழாசிரியர். காரணத்தை சொல்லும் முன், பிரம்பால் அடி விழுந்தது. அழுதபடியே பதில் சொல்லமுடியாமல் வலியுடன் தண்டனையை எதிர்கொண்டேன்.அத்துடன் அதை மறந்து விடடார். பின், பாடங்களில் சந்தேகம் கேட்கும்போதெல்லாம் கோபமின்றி தெளிவு ஏற்படுத்துவார் தமிழாசிரியர். என் திறமையை மெச்சி மதிப்பெண் வழங்குவார். அடுத்த வகுப்பிலும் அவரே தமிழ் கற்பித்தார். நன்றாக படித்து சிறப்பு மதிப்பெண்களுடன் முதன்மையிடம் பெற்றேன்.எனக்கு 68 வயதாகிறது. வங்கி மற்றும் மென்பொருள் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றேன். வகுப்பில் அறம் பிறழாது செயல்பட்ட தமிழாசிரியர் கதிர்வேல் முதலியாரை போற்றுகிறேன்.- கே.குமார், சென்னை.தொடர்புக்கு: 90032 87396


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !