உள்ளூர் செய்திகள்

மொழி புத்துணர்வு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், எஸ்.எல்.பி. உயர்நிலைப் பள்ளியில், 1954ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நடந்த சம்பவம்....கட்டாய பாடமாக இருந்தது ஹிந்தி. பொதுதேர்வில், 35 சதவீதம் மதிப்பெண் எடுத்தாக வேண்டும். எல்லா பாடங்களிலும், அதிக மதிப்பெண் எடுத்து வந்த எனக்கு, 'ஹிந்தி பாடத்தில் தேர்ச்சி பெற இயலுமா' என்ற சந்தேகம் ஏற்பட்டது.இது தந்தைக்கு தெரிய வர, என் ஆசிரியர் பாஸ்கரை சந்தித்து, 'டியூஷன் கற்றுக் கொடுக்க முடியுமா...' என்று கேட்டுள்ளார். உடனடியாக மறுத்து, 'இதுபோல் வகுப்புக்கு வெளியே கற்பிப்பது தவறு. கொள்கைக்கும் மாறானது...' என தெளிவுபடுத்தி, 'ஹிந்தி பாடத்தில் சந்தேக வினாக்களுக்கு, விடை எழுதி கொடுக்க சொல்லுங்கள். நான் திருத்தி கொடுப்பதை படித்தால் போதுமானது...' என வழிகாட்டியிருந்தார். அதை பின்பற்றி கடுமையாக உழைத்து, 80 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். பின், பொறியியல் கல்லுாரியில் சேர்ந்து பட்டம் பெற்றேன்.தற்போது, என் வயது, 87; அரசு நிறுவனத்தில், பொது மேலாளாராக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில், என் ஹிந்தி மொழிப் புலமையை அறிந்த நிறுவன தலைமை, வட மாநிலங்களில் வரும் பணிகளை முடிக்க என்னையே அனுப்பியது. தடையின்றி நிறைவேற்றி நற்பெயர் பெற்றேன்.தற்போது, 'ஹிந்தியில் எளிதாக பேசலாம்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வருகிறேன். இவற்றுக்கு வித்திட்ட அந்த ஆசானை நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன். என்.சுப்ரமணியம், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !