உள்ளூர் செய்திகள்

முற்றுப்புள்ளி!

சென்னை, மேற்கு மாம்பலம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1999ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியை உமா கண்டிப்பு மிக்கவர். வித்தியாசமான ரசனையுடையவர். மாணவர்களை எப்போதும் கண்காணித்தபடி இருப்பார்.பள்ளிக்கு வெளியே, தள்ளு வண்டியில், பட்டாணி, வேர்க்கடலை, மாங்காய் கீற்று, இலந்தைபழம் போன்ற தின்பண்டங்கள் விற்பர். வகுப்பு இடைவேளையில் நண்பர்களை அழைத்து சென்று வாங்கி கொடுத்து தின்பேன்.பிடிக்காத சிலர் இதை போட்டு கொடுக்க, 'ஏது உனக்கு இவ்வளவு காசு... எப்படி எல்லாருக்கும் வாங்கி தர முடிகிறது. பெற்றோரை அழைத்து வா...' என கண்டிப்பை காட்டினார் வகுப்பாசிரியை.கண்ணீருடன், 'மளிகை டப்பாவில் குடும்ப செலவுக்கு அம்மா போட்டிருக்கும் காசை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து செலவு செய்கிறேன்...' என உண்மையைக் கூறி மன்னிக்க மன்றாடினேன்.சற்று தணிந்தவர், 'இது, பெரிய கெட்ட பழக்கம். வாழ்க்கையில் உயர்வதற்கு உதவாது... இனி, இதுபோல் செய்யக் கூடாது...' என அறிவுரைத்தார். அதை, வேத வாக்காக எண்ணி வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன்.என் வயது, 34; தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும், அந்த ஆசிரியையை சந்தித்து, ஆசி பெறுவதை தவறாமல் பின்பற்றி வருகிறேன். அவர் பணியில் இருந்து, 2023ல் ஓய்வு பெற்றார். அந்த நிகழ்வில் குடும்பத்துடன் பங்கேற்று வாழ்த்தினேன். திருடும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியவரை நன்றியுடன் வணங்குகிறேன்.- வி.விக்னேஷ், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !