நிதானமே வாழ்வு!
தேனி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில், 1979ல், ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய போது நடந்த சம்பவம்...அன்று, மதிய உணவு இடைவேளைக்குப் பின், வகுப்பு துவங்கவிருந்தது. அதற்காக, அவசரமாக சென்று கொண்டிருந்தேன்; அப்போது, விரைந்து வந்து வழிமறித்த பெரியவர், 'ஐயா... இந்த கடிதத்தை படித்து கூறுங்கள்...' என்று கேட்டார்.ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் போல என்ற எண்ணத்துடன் வாங்கிப் பார்த்தேன். அது, ஹிந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்த மொழி தெரியாது; பள்ளியில் பணியாற்றிய ஒரே ஹிந்தி பண்டிட்டும் ஓய்வு பெற்று விட்டார். சற்று நிதானமாக சிந்தித்த போது, நல்ல யோசனை ஒன்று உதித்தது.என் வகுப்பில் மாணவன் மணிகண்டன், ஹிந்தி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். சற்று காத்திருக்க சொல்லி, உதவிக்கு அவனை அனுப்பினேன்.சிறிது நேரத்துக்கு பின், வகுப்பறைக்கு வந்தவர், 'ஐயா... பல அலுவல்களுக்கு இடையிலும், மாணவனை அனுப்பி உதவி செய்தீர். மீண்டும் நன்றி...' என்று கூறி புறப்பட்டார். உதவிய மாணவனை வகுப்பறையில் பாராட்டினேன்.எனக்கு, 72 வயதாகிறது; ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறேன். பள்ளியில் நடந்த அந்த சம்பவம் இன்றும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!- மு.கருப்பையா, தேனி.