வாய்ச்சொல்!
வகுப்பாசிரியையிடம் அன்று வசமாக சிக்கினான் கார்த்திக்.''நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை...'' பதில் கூற முடியாமல் திண்டாடினான். சமயத்திற்கு பொய் கூற தீர்மானம் செய்தான்.''குளிக்கும் அறையில் வழுக்கி விழுந்து விட்டார் தாத்தா. வீடே அமளிதுமளி ஆகிவிட்டது. அதனால் தான் வர முடியாமல் போய் விட்டது...''அந்த பதில் நம்பும் விதத்தில் இருந்தது.''சரி... இனி, விடுப்பு எடுத்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்...''அறிவுரைத்து அடுத்த வேலையில் ஈடுப்பட்டார் ஆசிரியை.தாத்தா மிகவும் நல்லவர். அளவு கடந்த பாசத்தைப் பொழிபவர். தேவையில்லாமல் அவரை பற்றி பொய் சொல்லி விட்டோமே என வருந்தினான் கார்த்திக்.பள்ளி நேரம் முடிந்து, வேனில் வீடு திரும்பினான் கார்த்திக்.வீட்டில் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. காலில் கட்டுப் போட்டபடி, சோபாவில் படுத்திருந்தார் தாத்தா.''ஐயோ என்ன நடந்தது...''வேதனையில் பதற்றத்துடன் கேட்டான் கார்த்திக்.''தொந்தரவு செய்யாதே... காலையில், குளியலறையில் வழுக்கி விழுந்திட்டார் தாத்தா. காலில் பலத்த அடி பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மாவுக்கட்டு போட்டு தக்க சிகிச்சை தரப்பட்டுள்ளது...''வருத்தமுடன் சொன்னார் அம்மா. கண்கள் கலங்க தாத்தாவை ஆதரவாய் பார்த்த கார்த்திக், ''ரெம்ப வலிக்குதா...'' என்றான். ''காலையில் வலித்தது செல்லம். இப்போ பரவாயில்லை. மருத்துவர் ஊசி போட்டு மருந்து தந்து இருக்கிறார்...''தாத்தா கூற, கண்ணீரை சொறிந்தான்.'என்னோட வாய்ச்சொல் தலைச் சுமையாய் ஆகிவிட்டதே'குற்ற உணர்வு கார்த்திக்கை வாட்ட ஆரம்பித்தது. பொய் சொல்லக் கூடாது என்ற வைராக்கியம் மனதில் ஆழமாக வேரூன்றியது.பட்டூஸ்... எந்த சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே உரைக்க வேண்டும்!- எம்.கே. சுப்பிரமணியன்