உடலை உறுதி செய்!
நாமக்கல், ஆசிரியப்பயிற்சி பெண்கள் நடுநிலைப் பள்ளியில், 1953ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது...உடற்பயிற்சி ஆசிரியை ஸ்டெல்லாமேரி மிகவும் அன்பானவர். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை உடையவர். வாரத்தில், மூன்று பாட வேளை உடற்பயிற்சி வகுப்புகள் இருக்கும். அதில், விளையாட்டு கருவிகளை பயன்படுத்தலாம். விரும்பியதை எடுத்து விளையாடலாம். எனக்கு கயிறாட்டம் வராது; எப்போதும் கயிறு பக்கம் போக மாட்டேன். இதை கவனித்து தனியே அழைத்து, 'ஏன் ஆடுவதில்லை...' என கேட்டார் ஆசிரியை. பயத்துடன், 'எவ்வளவு முயன்றும் ஆட இயலவில்லை...' என்றேன்.மென்மையான குரலில், 'அதற்காக அந்த விளையாட்டை புறக்கணிக்கலாமா... வா, கற்றுத் தருகிறேன்...' என, அச்சம் போக்கி, 'பெண்களுக்கு எப்போதும், உடற்பயிற்சி முக்கியம். அதிலும், கயிறாட்டம் ரொம்ப வசதியானது; பெரிய செலவு வைக்காது. வீட்டிலே எளிதாக ஆடலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும். மறக்காமல் தினமும் கடைப்பிடி...' என அறிவுறுத்தினார். கவனமுடன் அதைக் கற்றேன்.தற்போது, என் வயது, 81; இல்லத்தரசியாக இருக்கிறேன். கயிறாடும் பயிற்சியை தவறாமல் கடைபிடித்து நலமுடன் வாழ்கிறேன். இதற்கு வழிகாட்டிய ஆசிரியையை நன்றியுடன் மதித்து போற்றுகிறேன்!- ஜி.பிரேமா குரு, சென்னை.தொடர்புக்கு: 96004 04935