வகுப்பறை வசந்தம்!
திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் பேரூராட்சி நடுநிலைப் பள்ளியில், 1971ல், 6ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியர் எஸ்.பால்ராஜ் ஆங்கில பாடமும் நடத்துவார். தெளிவாக, புரியும்படி கற்றுக் கொடுப்பார். இலக்கணத்தில், ஆக்டிவ், பேஸிவ் வாய்ஸ் பகுதியை தெளிவாக்கி, தக்க உதாரணங்களுடன் விளக்கினார். கருத்துான்றி கற்று, ஆண்டு இறுதி தேர்வில் முதன்மை மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். அந்த நேரத்தில், என் மூத்த சகோதரர் வடமதுரை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். ஒருநாள், வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது, ஆங்கில இலக்கணத்தில் அவர் கடுமையாக தள்ளாடுவதை கவனித்தேன். தக்கவிதமாக விளக்கம் சொல்லி அவரை தெளிவுப்படுத்தினேன். இதைக்கண்டு மிகவும் வியந்து பாராட்டினார் என் தந்தை.எனக்கு, 66 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியரிடம் கற்ற கல்வி வாழ்வின் உயர்வுக்கு சிறப்பாக உதவுகிறது. பள்ளியில் கல்வியை முடித்து, 50 ஆண்டுகளுக்கு பின்னும், வகுப்பறை நினைவு மனதை விட்டு அகல மறுக்கிறது!- மு.பெரியசாமி, திருவள்ளூர்.தொடர்புக்கு: 99620 70565