உள்ளூர் செய்திகள்

எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை (25)

கடந்த 1979ல் கல்கண்டு இதழில் வெளிவந்த ராதாவின் இறுதிப் பேட்டி:* இப்போதெல்லாம் நீங்கள் நாடகம் போடுவதில்லையே... ஏன்?எழுபது வயசாயிருச்சு; உடம்பு முன்ன மாதிரி இல்ல. இந்த மிஷின் அடிக்கடி ரிப்பேர் ஆகுது. வெளியூர்களுக்கு கார்ல பயணம் செய்ய முடியல. உள்ளூர் சபாக்காரர்கள் ஏற்பாடு செய்ற நாடகத்தில நடிச்சிக்கிட்டு தான் இருக்கேன். நாடகத்தில நடிக்கலன்னா, எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும்.படவுலக வாய்ப்பு எப்படி இருக்கு?நான் அன்னன்னைக்கு வந்து போகிற நடிகனல்ல; எனக்கு சாகிற வரைக்கும் மார்க்கெட் இருக்கும். நான் பீல்டை விட்டு விலகப் போறதில்ல; அதே நேரத்தில சினிமாக்காரங்க மூஞ்சியிலயும் முழிக்கிறதில்ல. என்னைப் போட்டா, ஏதாவது நன்மை இருக்கும்ன்னு அவங்களுக்கு தெரியும். ஏன்னா, என்னை ஊரே புகழ்ந்தாச்சு. பாராட்டாத பத்திரிகை இல்ல. இனிமேல் குறை சொல்லி எழுதினா, வேணும்ன்னு எழுதுறாங்கன்னு, அவங்களுக்குத் தான் மக்களிடம் கெட்ட பேர் வரும். பொதுவா, படங்களில் நடிக்கிறதுக்கு முன், என் கருத்தோட என் பாணி சேருமான்னு பாப்பேன். இதெல்லாம் சேர்ந்தாத்தான் நடிப்பேன். இல்லன்னா நடிக்கணும்ங்கிற தேவையே இல்ல.வயதான நடிகர்கள் ரிட்டயர் ஆவது நல்லதா?நீந்துறதுக்கு மீனுக்கு வயசா வேணும்? சாகிற வரைக்கும் நீந்துறது தான் அதோட இயல்பு. நானும் அதுமாதிரி தான் சாகிற வரைக்கும் நடிப்பேன். நடிப்புத் துறையில நீடித்து இருக்கணுங்கிறது அவங்கவங்க இஷ்டம். வயித்துப் பொழப்புக்காகவும், தங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கணுங்கிறதுக்காகவும் சிலர், வயதானவங்க எல்லாம் ஓய்வு பெறணும்ன்னு சொல்றாங்க. நாங்க வயித்துப் பொழப்புக்காக இங்க இருக்கல. நாங்க கீழே இருந்து இந்த நிலைக்கு வந்தவங்கன்னு மக்களுக்கு நல்லா தெரியும். அதனால, மக்களுக்கு, எங்க மேல நீங்காத பாசம் ஏற்பட்டுப் போச்சு; அதை மாற்ற முடியாது.நீண்ட இடைவெளிக்குப் பின், படவுலகில் நுழைந்திருக்கும் நீங்கள், தற்போதைய சினிமாவில் என்னென்ன மாற்றங்களைக் காண்கிறீர்கள்?ரிவால்வர் சண்டை நடந்ததே... அப்போ சுட்டுட்டு ஜெயிலுக்குப் போனவன், வெளியே வந்தேன். மறுபடியும் நடிச்சேன். மறுபடியும் மிசானால உள்ள போயிட்டேன். இந்த இடைவெளியில கிட்டதட்ட நாலு வருஷங்க ஓடிப் போச்சு. இதுக்குள்ளே சினிமா இண்டஸ்ட்ரில அப்படியொண்ணும் பெரிசா மாறிட்டதா தெரியல. ஆனா, நல்ல படத்தைத்தான் பாக்கணும்ங்கிற நிலைமை மாறி, பொழுது போவதற்கு எதையாவது பாத்தா போதும்ன்னு நினைக்கிற நிலைமை வந்திடுச்சு. அதனால, எல்லா சினிமா தியேட்டரும், 'புல்!'கருத்து இருக்கோ இல்லயோ எல்லாத்தையும் மக்கள் பாக்கறாங்க... அதனால, சினிமா, 'இம்புருவ்' ஆயிடுச்சின்னு நினைக்கக் கூடாது. சினிமா, 'இம்புருவ்' ஆகல. பெரும் பணம் வாங்கியும், யாரும் நடிச்சிடல. பெரும் பணம் வாங்கினவனெல்லாம் அவனவனே படம் எடுக்கிறான். புதுமாதிரியா எடுக்கிறதாச் சொல்றாங்க. யார் எடுக்கிறாங்க? திறமை எங்கேயிருந்து திடீர்ன்னு உற்பத்தி ஆகும்? சினிமா உலகம் நல்லபடியா வரும்ங்கிற நம்பிக்கையே எனக்கு இல்ல.நீங்கள் எம்.ஜி.ஆர்., சப்போர்ட்டரா, கருணாநிதி சப்போர்ட்டா?நான் யார் சப்போர்ட்டரும் இல்ல; எம்.ஜி.ஆரை எனக்கு நண்பராகத் தான் தெரியும். அவர் அப்போதெல்லாம், அந்த மாதிரி வேலைக்கே போகாதவர். அரசியல்ல, கருணாநிதி தான் தேர்ச்சி பெற்றவர்ங்கிறது நல்லாத் தெரியும். அரசியலில் நல்லா ஊறினவரும் கருணாநிதி தான். அரசியலில் கருணாநிதியைத் தான் கெட்டிக்காரர்ன்னு சொல்ல முடியும்; எம்.ஜி.ஆரை அப்படிச் சொல்ல முடியாது. இப்போதைய அரசியல் நல்லா இல்ல; நல்லா இருந்தாத்தானே, நான் ஒரு, 'ஸ்டாண்ட்' எடுக்க முடியும். அரசியல் நல்லதா, தனிப்பட்ட அரசியல் தலைவர்கள் நல்லவர்களா என்று முன்னே கேள்வி எழுந்தது. தலைவர்கள் நல்லவங்களா இருந்தாங்க, அதனால, அவர்களது அரசியலை ஏத்துக்கிட்டோம். இப்போ அரசியலும் சரியில்ல; அரசியல்வாதிகளும் சரியில்ல. அதனால, எதை நம்பி யாரை சப்போர்ட் செய்வது? ஈ.வெ.ரா., காலத்தில் கூட, எனக்கு அவருடைய கொள்கை பிடிக்குமே தவிர, கட்சி பிடிக்காது. நான் தி.க., அங்கத்தினரா இருந்ததும் கிடையாது. தி.க., சுயமரியாதைக் கட்சி அப்படி இப்படின்னு ஏழெட்டுக் கடைகளை வைத்திருந்தார் ஈ.வெ.ரா., நான் ஒரு கடையில் கூட அங்கத்தினர் இல்ல.முதல்வர் நடிப்பது என்பது உங்களுக்கு சரியாகப்படுகிறதா?ஏன் நடிச்சா என்ன தப்பு? அப்புறம் முதல்வர் கல்யாணம் செய்துக்கிறது நல்லதா, குழந்தை பெத்துக்கிறது நல்லதான்னும் கேப்பீங்க. அதெல்லாம் அவங்கவங்க விருப்பத்தைப் பொறுத்தது. அவருடைய உரிமையைப் பறிப்பதில் என்ன நியாயம் இருக்கு? மனிதனுக்கு அடிப்படை தேவைங்கிறது படிப்பு; அதுவே, முதல்வர் பதவிக்கு வேணாம்ன்னு ஆயிட்டபோது, மற்றது எப்படி இருந்தால் என்ன?கலைஞர்களுக்கு, எம்.ஜி.ஆர்., ஆட்சியில் பதவி, பட்டம் கொடுக்கப்படுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அது அவர் இஷ்டம்; அவர் யாருக்கு வேணும்ன்னாலும் கொடுக்கலாம். பரிசு பெற்ற கலைஞர்கள், எனக்குப் பழக்கம் கிடையாது. அவங்க எல்லாம் கலைஞர்களா அப்படீங்கிறதே எனக்குத் தெரியாது. ஆனா, உதவிங்கிறது யாருக்குச் செய்யப் பட்டாலும், எனக்குச் சம்மதம் தான்.தனக்கு வேண்டியவர்களுக்குக் கொடுத்தாரா, மக்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுத்தாரா, என்ன நோக்கத்தில் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியாது. கலைஞர்கள் என்ற பார்வையில் கொடுத்திருந்தால், எனக்குக் கிடைக்கவில்லையே... நான் என்ன கலைஞனில்லாமல் வியாபாரியா... அப்படின்னா, என்னோட கலையால், மக்கள் திருந்தியிருக்கிறாங்கன்னு சொன்ன தலைவர்கள் எல்லாம் மடையர்களா... எனக்குப் பரிசு கொடுக்கணுங்கிறதுக்காக இதைச் சொல்லல; பரிசு கொடுத்திட்டு வர்றாரு; இன்னும் கொடுப்பாரு.எம்.ஜி.ஆரின் தீவிர மதுவிலக்கு கொள்கை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?உலகமே ஆதரிக்கப் போறதில்ல; நானும் தான். புகழுக்காக இதை எல்லாம் செய்யலாமே தவிர, பலன் எதுவும் கிடைக்காது.தி.க., கொள்கையை கொண்ட நீங்கள், பக்தி படங்களில் நடிக்க எவ்வாறு முன் வந்தீர்கள்?பக்தி வேஷம் போடாதேன்னு ஈ.வெ.ரா., சொன்னாரா? அந்தப் படத்த (கந்தரலங்காரம்) நீங்க பார்க்கணும். நான் பேசும் வார்த்தைகள், அர்த்தங்கள், யாரை சாடுகிறதுங்கிறத சிந்திச்சுப் பாக்கணும்.ஈ.வெ.ரா.,வுடைய எல்லாக் கொள்கைகளுமே உங்களுக்கு உடன்பாடு தானா?எல்லாமே சம்மதம்ன்னு சொல்ல முடியாது; அவருடைய பல கருத்துக்களை எதிர்த்திருக்கேன். பிராமணன் ஓட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்வாரு. அதை நான் எதிர்த்திருக்கேன். அவருடைய நண்பர் ஒருவர் பிராமின்; மஞ்சள் வியாபாரி. அவரை ஆதரிச்சு ஓட்டுப் போடணும்ன்னு சொன்னார். அதை எதிர்த்து, 'கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுப் போடு'ன்னு பிரசாரம் செய்திருக்கேன். மக்கள் பல்வேறு கடவுளைச் சொல்றாங்க. கடவுளே இல்லங்கிறார் ஈ.வெ.ரா., ஒரே ஒரு கடவுள் இருக்குங்கிறார் அண்ணாதுரை. கடைசில, அண்ணாதுரை கருத்தை ஆதரிச்சார் ஈ.வெ.ரா., ஆனா, நான் அதையும் ஏத்துக்கல.படத்தில் நடிக்காத காலத்திலும் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியுமா?நல்லாவே இருக்க முடியும். சினிமா உலகத்திலே இருந்துக்கிட்டு, சினிமாவத் திட்டிக்கிட்டு இருக்கேனே... வேறு யாராலயும் செய்ய முடியாத சேவை இது. மத்தவன் இதைச் செஞ்சான்னா, அவனுக்கு மார்க்கெட் போயிடும்.தங்களது கட்சி தான் உண்மையான தி.க., என்று திருவாரூர் தங்கராசுவும், கி.வீரமணியும் சொல்கின்றனரே...இருவருமே நம்ம ஆளுங்கதான். அதனால, இதப்பத்தி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆனா, ஒண்ணு... கட்சியில பணம்ன்னு இருந்தா சண்டை வரத்தான் செய்யும். சண்டை வேணாம்ன்னு நினைக்கிற ஆட்கள் எல்லாம், இனிமே பணமே சேர்க்கக் கூடாது. அப்படி இல்லாம பணத்த சேர்த்துக் கிட்டேயிருந்தா அடிச்சிக்கிட்டு சாக வேண்டியது தான்!— முற்றும் —நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு: தமிழில் முக்கியமான சரித்திர நூல்களை எழுதி வருபவர் எழுத்தாளர் முகில். சினிமா, 'டிவி' மற்றும் புத்தகம் என்று பல்வேறு தளங்களில் இயங்கி வரும் இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி; வசிப்பது சென்னை. சந்திரபாபு, எம்.ஆர்.ராதா, யூதர்கள், முகலாயர்கள், அகம்புறம் அந்தப்புரம், செங்கிஸ்கான், ஹிட்லர், கிளியோபாட்ரா, உணவு சரித்திரம், வெளிச்சத்தின் நிறம் கறுப்பு மற்றும் அண்டார்டிகா போன்றவை இவர் எழுதியுள்ள முக்கியமான நூல்கள். மொபைல் எண்: 94442 02643- முகில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !