உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

எஸ்.ரவிச்சந்திரன், விளாமரத்துப்பட்டி: பட்டிமன்றம், வழக்காடு மன்றம் எல்லாம், 'கிரிமினல் வேஸ்ட்' என, முன்பு பதில் அளித்துள்ளீரே... என்ன தைரியம் உமக்கு? 'மகாபாரதப் போரில் கிருஷ்ணன் செய்தது சரியா, தவறா?' - 'திருக்குறள் கருத்துகள் எல்லா காலத்திற்கும் பொருந்துமா?' - 'இல்லறத்தில் பெரும் பங்கு வகிப்பது ஆண்களா, பெண்களா...' - இவை எல்லாம் எவ்வளவு பயனுள்ள சப்ஜெக்ட்ஸ் தெரியுமா? இதப்போய்...உங்களுடைய இந்த, 'ஸ்டேட்மென்ட்'டுக்கு வாசகர் ஒருவரின் கடிதத்தை பதிலாக தருகிறேன்... 'நாட்டில் நிலவும் பல பொதுப் பிரச்னைகள் குறித்து வழக்காடு மன்றங்கள் - பட்டி மன்றங்கள் நடத்தலாம். உதாரணத்திற்கு, நிலம் கையகப் படுத்தும் மசோதா கொண்டு வரலாமா, வேண்டாமா? என்பது போல!'- இது வாசகரின் கடிதம். அவரது கருத்துக்கு ஒத்துப் போகிறேன். நீங்கள் குறிப்பிடும், 'சப்ஜெக்ட்' எல்லாம் நேரத்தை வீணடிக்கும் அனாவசியங்கள் தான்!ம.காருண்யா, அரசமங்கலம்: பணம் கடன் கொடுத்தால் தான் திரும்பி வராது; புத்தகங்கள் கடன் கொடுத்தாலும் திரும்பி வருவது இல்லையே...கடன் கொடுக்கக் கூடாதவை மூன்று! அவை, பணம், புத்தகம், இசை, 'சிடி'கள்! தட்ட முடியாது எனும் பட்சத்தில், 'அன்பளிப்பாக' கொடுங்கள். திரும்ப எதிர் பார்த்து, மனக்கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்!கே.சசிரேகா, பெரியகுறிச்சி: கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்த கணவன் - மனைவி யாருக்கு பொறுப்பு வேண்டும்?சம்பாத்தியம் முழுவதையும் மனைவியிடம் கொடுத்து, செலவு பொறுப்பையும் அவ்விடமே கொடுக்கும் ஆசாமிகளின் மனைவியருக்கு கண்டிப்பாக அதிக பொறுப்பு தேவை. அவ்விடம் பொறுப்பு சற்று கம்மி என்றால், சம்பாதிப்பவரே லகானை பிடித்துக் கொள்வது உத்தமம்!என்.மதுமிதா, திண்டிவனம்: பெருகி வரும், 'கம்ப்யூட்டர் ஆதிக்கம்' குறித்து என்ன சொல்கிறீர்கள்?முன்னேற்ற பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல, மற்றொரு படிக்கல்!வி.எஸ்.கோவிந்தராஜ், வல்லம்: ஆண்களிடம், பெண்களுக்கு ஒரு பயபக்தி இல்லாமல் போய்விட்டதே...அப்போ, பெண்களுக்கு சம உரிமை வேகமாக கிடைச்சுக்கிட்டே இருக்குன்னு சொல்லுங்க!கே.மலர்விழி, அணைக்கரைபட்டி: சில சமயங்களில் நம்மை அறியாமலேயே மற்றவர் மனதை வார்த்தைகளால் புண்படுத்தி விடுகிறோம். இதற்கு என்ன தண்டனை?புண்படுத்தி விட்டதை உணர்ந்து வருந்துவதே தண்டனை தான். இப்படிப்பட்ட மனம் இருக்கும் போது, புண்பட்டவரிடம் நேரடியாக மன்னிப்பு கோருவது சிறந்த மருந்தாக அமையும்!ரா.கண்ணன், வில்லாபுரம்: ஒரு இதழ் நிராகரித்த சிறுகதையை, மாற்றம் செய்து, அதே இதழுக்கு அனுப்பினால், பரிசீலிப்பார்களா?'சர்குலேஷன்' அதிகம் இல்லாத வார இதழ்களில் சிறுகதை பரிசீலனை செய்பவர் ஒருவராகத்தான் இருப்பார். எனவே, இது போன்ற இதழ்களில், ஏற்கனவே, பரிசீலனைக்கு வந்த கதை இது என்பதை, ஓரிரு வரிகளைப் படித்ததுமே அறிந்து கொள்வர் சம்பந்தப்பட்டவர். எனவே, மேற்கொண்டு படிக்காமல் உடனே, 'ரிஜக்ட்' செய்ய வாய்ப்பு அதிகம்.பெரிய இதழ்களில் சிறு கதைகள் பிரிக்கப்பட்டு பலரிடம் பரிசீலனைக்கு செல்லும். அப்படிப் பட்ட இடங்களில், ஏற்கனவே பரிசீலித்த நபரிடம் தான், அதே சிறுகதை செல்லும் என்ற நியதி இல்லாததால், மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு, 'பைனல் அப்ரூவலுக்கு' பொ.ஆ.,விடம் செல்ல வாய்ப்புகள் அதிகம்!எஸ்.சுரேஷ்குமார், மந்தவெளி: அழகான, அறிவில்லா பெண், அறிவான, அழகு குறைவான பெண் - உங்களைக் கவர்பவர் யார்?ஏன்... இரண்டும் சேர்ந்து இருக்காது என நம்புகிறீர்? இருப்பினும், என் ஓட்டு இரண்டாவது ரகத்துக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !