அந்துமணி பதில்கள்
என்.புனிதவதி, சிந்தாதிரிபேட்டை: கருப்பான உதடுகளைப் பெற்றிருக்கிறேன்; தோழிகள் கேலி செய்கின்றனர். அவர்கள் கேலிப் பேச்சைக் கேட்டு என் மனம் புண்பட்டதற்கு அளவே இல்லை. ரோஜா நிற உதடுகளை பெற என்ன வழி...ரோஜா நிற உதடுகள் மட்டும் தான் அழகு, கவர்ச்சி என்ற எண்ணம், எப்படி உங்களிடம் ஏற்பட்டது அல்லது எவர் கூறியது? கறுப்பு நிற உதடுகளின் கவர்ச்சியே தனி... அந்த உதடுகளில் கொஞ்சம், 'கிளாஸ்' - பளபளப்பு எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கே கறுப்பு உதடுகளின் மகிமை புரிய ஆரம்பிக்கும்!ஆர்.லலிதா சங்கரன், பெரியமாத்தூர்: நான் படித்து முடித்து, வீட்டில் இருப்பவள்; எனக்கு அடிக்கடி ஒரு மொட்டை கடிதம் வருகிறது. அதில், நான் அவரை காதலித்ததாக அவர் நினைத்ததாகவும், இப்போதுதான், தான் ஒரு தலைப் பட்சமாக காதலித்து விட்டதாக தெரிந்ததாகவும் புலம்பி, வாரம் ஒரு முறை கடிதம் எழுதுகிறார். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு இடத்தில் இருந்து, கடிதத்தை போஸ்ட் செய்வதால், தபால் முத்திரையை வைத்தும் அடையாளம் காண முடியவில்லை. ப்ளீஸ்... இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி கூறுங்களேன்...யார் என்று தெரியவில்லை என்கிறீர்கள்... வேறு என்ன செய்ய முடியும்... முகவரியில், 'மொட்டை'யின் கையெழுத்தைப் பார்த்ததுமே கடிதத்தை கிழித்து, 'இக்னோர்' செய்வது தான் மன நிம்மதிக்கு சிறந்த வழி!எஸ்.சுமதி, முகவூர்: உலகிலேயே மிக அதிசயமாக நீங்கள் கருதுவது எது?ல்லிக்காசு வருமானம் இல்லாதவர்களும் வாழ்வது!ச.சோமசுந்தரம், திருப்பூர்: மழை பெய்யவில்லையே என ஏங்குகிறோம்; ஆனால், கொட்டிய மழை நீர் எல்லாம் கடலுக்குத் தானே போகிறது. இதைத் தடுக்க என்ன வழி?ஏராளமான தடுப்பணைகள் கட்ட வேண்டும்; மேடிட்டுப் போயுள்ள குளம், குட்டைகளை ஆழப்படுத்த வேண்டும். மழையில் உடைந்து போன குளம், குட்டைகளை மராமத்து பார்த்ததாக கணக்கு எழுதும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், கான்ட்ராக்டர்களின் கைகளில், 'காப்பு' போட்டு, கம்பி எண்ண வைக்க வேண்டும்!மு.ஜான்ஆப்ரகாம், துடியலூர்: கவலை, அளவுக்கு மீறி போகும் போது என்ன செய்வீர்?நான் இருக்கும் ஊரில், எப்படியும் கடல் இருக்கும் அல்லது மலை இருக்கும் அல்லது வனம் இருக்கும். 'அக்கடா' என்று அங்கு சென்று நல்ல இடத்தைத் தேடி அமர்ந்து விடுவேன். சிந்தனையை வேறு பக்கம் திருப்ப, இனிமையான, பிடித்த பாடகர்களின் பாடல்களை, கேட்பேன். இரண்டு மணி நேரத்திற்கு பிறகோ, அடுத்த நாள் காலையோ, 'இதற்கா கவலைப்பட்டோம்...' எனத் தோன்றிவிடும்!வி.சம்பத்குமார், அண்ணாநகர்: எந்த துறை வேலையாயிருந்தாலும், கிராமப் பெண்கள் ஆர்வத்தோடு முன் வருகின்றனரே... நகரப் பெண்கள் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டாதது ஏன்?கிராம பெண்களிடம் உள்ள, 'முன்னேற வேண்டும்' என்ற வேகமும், ஆர்வமும் நகரப் பெண்களிடம் இல்லை. அவர்களுக்கு பிரச்னையே இல்லாத, 9:00 - 5:00 மணி வேலை - அதுவும், பேன் காற்றுடன் அல்லது 'ஏசி' வசதியுடன் கிடைத்தால் போதும், திருப்தி அடைந்து விடுவர். இன்று சினிமா துவங்கி, ஒவ்வொரு துறையிலும் முன்னேறிய, புகழ் பெற்ற - பெற்று வரும் பெண்களின் லிஸ்ட் ஒன்றைப் போடுங்கள்... கிராமப்புற பெண்கள் தான், 'டாப் ஸ்கோரர்' ஆக இருப்பர்!வி.நீலகண்டன், கூட்டேரிப்பட்டு: வெளிநாடுகளில் கல்வி கற்க அதிகம் செலவாகுமா?ஆம். இந்தியாவில் உள்ள, 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்' என்ற உயரிய கல்வி கூடத்தில், இரண்டு ஆண்டுகள் எம்.பி.ஏ., படிப்பு முடிக்க, 3 லட்சம் ரூபாய்தான் செலவு; இதுவே, இங்கிலாந்து ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் படிக்க, 47 லட்சம் ரூபாய் செலவாகும்ன்னா பார்த்துக்கங்களேன்!