அந்துமணி பதில்கள் !
*எம்.எட்வர்ட், கள்ளக்குறிச்சி: உற்றார், உறவினர்களை வெறுத்து, ஒதுக்கி யார் வாழ்கிறாரோ, அவருக்கு கடைசி காலம் வரை பணத் தொல்லை என்பதே இருக்காதென்பது என் அபிப்ராயம்... உங்கள் கருத்து என்ன?உண்மைதான்... ஆனால், வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை! ஒரு, 'சேப் - டிஸ்டன்ஸ் மெயின்டெயின்' செய்தாலே போதுமே!**எஸ்.வரலட்சுமி, விருத்தாசலம்: தங்கள் பிரச்னைகளையே எப்போதும் பெரிதுபடுத்திப் பேசி வருபவர்களைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?அவர்கள் ஒத்துக் கொள்ளா விட்டாலும் சொல்கிறேன். கொஞ்சம் - ரொம்ப கொஞ்சமாக மனநோய் உள்ளவர்கள் இவர்கள். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லும் பழக்கமும் இவர்களிடம் இருக்கும். அடுத்தவர் பேசும் போது, பொறுமையாக கேட்காமல், குறுக்கே பேசும் சுபாவமும் உண்டு இவர்களிடம். இந்த குறைகளினாலேயே மற்றவர்களால் ஒதுக்கப்படுபவர்கள். இப்படிப்பட்டவர்கள் மீது அனுதாபம் கொள்ளுங்கள்; அவர்களது பிரச்னைகளைக் கேட்டு, ஆதரவாகப் பேசுங்கள் - இது தான் நம்மால் செய்ய முடியும்!*எஸ்.ஜெயலட்சுமி, திருத்தங்கல்: ஆண் துணையின்றி வாழ வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்ட வேலைக்கு போகும் பெண்கள், எவ்வளவு ஒழுக்கத்துடன் வாழ்ந்தாலும், பெண்களே நம்புவதில்லை. ஆண்களோ, தரமற்றவன் கூட, வயோதிகன் உட்பட மிக மலிவாக கருதுகின்றனர். இதை காணும் போது ஆத்திரம் வருகிறது. வந்து என்ன செய்ய?உங்கள் கேள்வியின் கடைசி வரியிலேயே பதிலும் இருக்கிறது. 'ஆத்திரம் வந்து என்ன செய்ய?' - வெட்டிக் குத்திக் கொல்லவா முடியும்? உங்கள் மனதிற்கு நீங்கள் நேர்மையாக இருக்கும் வரை, இந்த ஜனங்கள் பற்றி கவலையே படாதீர்கள்; நாக்கு இருக்கும் வரை பேசிக் கொண்டே தான் இருப்பர்!** ஜி.விதுபாலா, அஸ்தினாபுரம்: நேர்மையாக, குழையாமல் ஓர் ஆண் பேசினால், 'ரொம்ப கண்டிப்பான ஆசாமி!' என்று சொல்கின்றனர். அதையே ஒரு பெண் செய்தால், 'அடங்காபிடாரி, திமிர்...' எனக் கூறும் இந்த சமூகத்தினரைப் பற்றி...நம் ஜனங்களின், 'நவ துவாரமும்' பேசும் - இதுக்கு கவலைப்படுவது புத்திசாலித்தனமல்ல - 'நியாயமாக, நேர்மையாக இருக்கிறோம்!' என்ற உணர்வு உங்களுக்குள் இருந்தாலே போதும்! இருந்தாலும், அமுக்கி வாசிப்பது அதிக புத்திசாலித்தனமல்லவா?*ஆ.தீபா ராணி, ராஜபாளையம்: திருமணமான பின்னும் பெண்கள் வேலைக்குச் செல்வது சரியா?தன் காலில் தானே நிற்கும், 'பினான்ஷியல் இண்டிபென்டன்ஸ்' பெண்களுக்கு எப்போதும் வேண்டும்! கல்யாணமான பின்னும் - ஏன், 'ரிட்டையர்' ஆகும் வரையிலும் கூட பெண்கள் வேலைக்குச் செல்வது அவர்களது சுதந்திரத்திற்கு நலம்! ****இ.பிரவின், உடுமலைப் பேட்டை: வேலையில் இருப்பவர்களுக்கு மீண்டும், மீண்டும் ஊதிய உயர்வு வழங்குவதை விட, வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு அரசு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரலாமே!'அரசு வேலை' எனக் கேட்காமல், 'வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரலாமே!' எனக் கேட்டதில் சந்தோஷமே எனக்கு. ஆனால், விஷம் போல் ஏறி வரும் விலைவாசியில் எப்போதோ நிர்ணயித்த ஊதியத்தில் எப்படி காலந்தள்ள முடியும் என யோசித்துப் பாருங்கள்!*எம்.ஆர்.ராமமூர்த்தி, ஆண்டிப்பட்டி: ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருந்தால் எப்படி இருக்கும்?எட்டு முறை காபி, ஆறு முறை சாப்பாடு சாப்பிட வேண்டியிருக்கும்! ***