உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* கே.தவமணி, கோவை: அமெரிக்கர்களின் ஆர்வம் இப்போது எதன் மீது திரும்பி உள்ளது?தம் மூதாதையர் யார் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன், கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். நம்மில் பலருக்கு தாத்தா, பாட்டி யார் என்றே தெரியாத நிலை அல்லவா இருக்கிறது... ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் தம் குடும்பத்து ஏழு தலைமுறையினரையாவது தெரிந்து கொள்ள வேண்டும்; இப்போதே இந்த ஆராய்ச்சியில் இறங்குங்கள்... பல அரிய தகவல்கள் கிடைக்கலாம்.கி.சீனிவாசன், விருதுநகர்: 'முணுக்' என்றால் எனக்கு மூக்கின் மீது கோபம் வருகிறது; இதை அடக்குவது எப்படி?அடக்கப் பழகுங்கள் அல்லது எவருடைய சொல்லுக்காவது அடங்கிப் போக முயலுங்கள்!ஏ.குருமூர்த்தி, திருப்பூர்: தினமும் காலையில் நாளிதழை கையில் எடுத்தால், ஒரே சாலை விபத்து செய்தியாக இருக்கிறதே... நம் நாட்டில் சாலை விபத்துகள் அளவுக்கதிகமாகி விட்டதா?ஆம்; தேசிய நெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும், ஒரு விபத்து நடக்கிறது. 100 சாலை விபத்துகளில், 37, தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கிறது; இவற்றில் பெரும்பாலானவை மரணத்தில் முடிகிறது!செ.கோபால், மதுரை: 'தான் இறந்த பின், தன் கணவன் இறக்க வேண்டும்...' என்று நினைக்கும் மனைவி; 'கணவன் இறந்தபின், தான் இறக்க வேண்டும்...' என, நினைக்கும் மனைவி... இவர்களில் கணவனிடம் உண்மையான பாசம் வைத்திருப்பவர் யார்?இருவருமே கணவனிடம் உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் தான்! முதல், 'கேட்டகிரி' மனைவி, வயதான காலத்தில், தனக்கு கண் தெரியாமல், காது கேளாமல், வயதான கணவருக்கு பாரமாக இருந்துவிடக் கூடாதே... அதற்கு முன் போய்விட வேண்டுமே என்ற நல்லெண்ணம் கொண்டவர்.இரண்டாவது, 'கேட்டகிரி' மனைவி, வயதான காலத்தில், யார் கையையும் கணவர் எதிர்பார்த்து நிற்கக் கூடாது; அவருக்கு பணிவிடைகளை செய்து, அவரது மனம் குளிர வைக்க வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்.இங்கே உண்மையான பாசம் யாருடையது என்பதை, எப்படி வேறுபடுத்த முடியும்!ஆர்.தனசேகர், காரைக்குடி: என் கனவில், அடிக்கடி சினிமா நடிகைகள் புகுந்து, தூக்கத்தை கெடுக்கின்றனரே...இன்று தூக்கத்தை கெடுப்பர்; நாளை துக்கத்தில் தள்ளி விடுவர். சினிமா பார்ப்பது, சினிமா செய்திகள் படிப்பது, தெருவில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகைகளின் போஸ்டரை நோட்டம் விடுவது ஆகியவற்றை, இன்னும் சில ஆண்டுகளுக்கு மூட்டை கட்டி வையுங்கள். தூக்கம் கெடாது; துக்கம் வராது! * எஸ்..ஜெயக்குமார், கம்பம்: வீட்டு வேலைக்கும், வயல் வேலைகளுக்கும் பெண்கள் கிடைப்பது அரிதாகி வருகிறதே...உண்மைதான்; பெண்களிடையே கல்வி அறிவு பெருகி வருவதும், அதிக வருமானம் மற்றும் அதிக உடல் உழைப்பு தேவைப்படாத மற்ற தொழில்களின் பெருக்கமும் தான் இதற்கு காரணம். 90களில், 100க்கு, 30 என்ற கணக்கில், தொழிலாளர் இருந்தனர். இன்றோ, 100க்கு, 15 பேர் தான் பெண் தொழிலாளர் இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !