உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ராம.சுப்பு, விருதுநகர்: 'டாஸ்மாக்' கடைகள் செயல்படும் நேரத்தை, மதியம், 2:00 மணியிலிருந்து, இரவு, 8:00 மணியாக குறைப்பது குறித்து, தமிழக அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க... மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதே...
உ.பா., பிரியர்களை கட்டுப்படுத்தவே முடியாது... நேரம் குறைத்தாலும், அவர்கள் முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்வர்!
த. மலர்பித்தன், சென்னை: 'தி.மு.க., ஆட்சி, ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...
அவரது கட்சிக்காரர்கள், ஆன்மிகத்துக்கு எதிராக தினமும் பேசி வருகின்றனரே... இது, ஆன்மிகவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால், 'துாக்கமும் வரமாட்டேன் என்கிறது...' என்று புலம்பியுள்ளாரே... அதனால் தான் இந்த கூற்று!
* கே.எல். காந்தரூபி, சென்னை: 'பாகிஸ்தானுடன், இனி பேச்சு வார்த்தை இல்லை...' என்கிறாரே, மத்திய அமைச்சர் அமித்ஷா?
இனி, பேசி பயன் இல்லை என்பதை புரிந்து கொண்டு, போர் தான் நிரந்தர தீர்வை கொண்டு வரும் என, முடிவு செய்து விட்டார் போலும்!
வீ. முருகன், துாத்துக்குடி: 'மன்னர், ராஜராஜ சோழன், ஹிந்து இல்லை...' என்கிறாரே, திரைப்பட இயக்குனர், வெற்றி மாறன்...
ஆமாம்... அவர், ஹிந்து இல்லை... அதனால் தான், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், அவர் ஆண்ட தஞ்சாவூரில், விஞ்ஞானப்பூர்வமான, சிவன் கோவிலை கட்டி விட்டார்! வெற்றி மாறன் போன்றோரின் அறிக்கைகளை படித்து, நேரத்தை வீணடிக்காதீர்கள்!
* ஜி. ஜெயபாலன், மதுரை: சரளமாக ஆங்கிலப் பேச்சு வரவில்லை என்பது, முன்னேற்றத்திற்கு தடையாகுமா?
தமிழக, காங்., முன்னாள் முதல்வர் காமராஜருக்கு, ஆங்கிலம் வராதே... இருந்தும், அகில இந்திய அளவில், காங்கிரசில் மாற்றங்களை கொண்டு வந்தாரே... எனவே, நீங்கள் நினைப்பது, தடையல்ல!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !