உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

'டைம் மானேஜ்மென்ட்'- நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவு செய்வது என்ற கருத்தரங்கம் சமீபத்தில், சென்னையில் நடைபெற்றது. அதற்கு நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம். அங்கு கல்லூரி பேராசிரியர் ஒருவர், அருமையாக உரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து:நேரமே போத மாட்டேங்குது; 'அந்த வேலையை முடிக்க முடியலே... அங்க போக முடியலே... இங்கே போக முடியலே...' என்று நம்மில் பலர் கூறுவது எல்லாம் வெறும், 'ஹம்பக்!'அவ்வேலைகளைச் செய்வதற்கும், அவ்விடங்களுக்கு செல்வதற்கும் மனது வைக்கவில்லை என்பதுதான் உண்மையான காரணம். ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என, உளப்பூர்வமாக நினைத்தால், அதற்கு கண்டிப்பாக நேரம் கிடைக்கும்.ஒரே நேரத்தில், இரண்டு செயல்களைச் செய்ய முடியும்; சிலர் ஒரே நேரத்தில் மூன்று, - நான்கு செயல்களைக் கூட செய்கின்றனர். உதாரணமாக, பாட்டுக் கேட்டபடி தோட்ட வேலை செய்யலாம், 'டிவி' பார்த்தபடி சலவை செய்த துணிகளை மடித்து வைக்கலாம்.'சனி, ஞாயிற்றுக் கிழமை வரட்டும் இல்ல ஆயுதபூஜை லீவு வரட்டும்... குப்பையாகக் கிடக்கிற இந்த, 'பீரோ'வை சரி செய்து விடுகிறேன். ஒருநாள் முழுக்க இந்த வேலைக்காக ஒதுக்கப் போகிறேன்...' என்றெல்லாம் சபதம் எடுப்பர், சிலர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் வரும்; இவர்கள் எதிர்பார்த்தது போல அரசு விடுமுறை நாளும் வந்து போகும்; ஆனால், கலைந்து கிடக்கும், 'பீரோ'வை சரி செய்ய முடியாமல் வேறு ஏதாவது வேலை வந்து இருக்கும். கலைந்து கிடக்கும், 'பீரோ'வோ, மேஜையோ அதே நிலையில் தான் இருக்கும்.ஒவ்வொரு நாளும், பத்து அல்லது 15 நிமிடங்களை ஒதுக்குங்கள்; ஒவ்வொரு தட்டாக பீரோவை சரி செய்யுங்கள். சுலபமாக வேலைகளை முடிக்கலாம்!உங்கள் நேரடி பார்வையோ, உதவியோ, ஆலோசனையோ தேவையில்லாத - மற்றவர்களால் முடிக்கக் கூடிய வேலையில் உங்களை ஈடுபடுத்தி, நேரத்தை வீணாக்காதீர்கள். சென்னையில் உள்ள மிகப்பெரிய புத்தக வெளியீட்டாளர் ஒருவரை சந்திக்க நான் சென்றிருந்தபோது, வெளியூருக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களை அவரே, 'பண்டல்' செய்து கொண்டிருந்தார்.'என்ன சார்... இந்த வேலையைப் போய் நீங்கள் செய்கிறீர்கள்?' எனக் கேட்டதும், கடும் கோபம் கொண்ட அவர், 'வேலையில் உயர்வு, தாழ்வு பார்க்காதவன் நான்... பண்டல் போடுவதில் என்ன இழிவு வந்து விட்டது...' என, உரத்த குரலில், 'ஆச்சா... போச்சா' எனக் கத்த ஆரம்பித்து விட்டார்.'ஐயா... அந்தப் பொருளில் நான் சொல்லவில்லை; பண்டல் போடுவதில் செலவிடும் இந்த நேரத்தில், அடுத்த புத்தகத்திற்கான, 'சப்ஜெக்டை' யோசனை செய்யலாம். அந்தப் புத்தகங்களை எழுத உள்ள ஆசிரியர்களிடம் விவாதித்து, 'சப்ஜெக்டுக்கு' இன்னும் மெருகு ஏற்றலாம். பண்டல் செய்வதற்கு சாதாரண ஆபீஸ் பையன் போதுமே என்று தான் குறிப்பிட்டேன்...' எனக் கூறவும், தன் தவறை புரிந்து கொண்டார்.அறுவை ஆசாமிகள் பலர், நம் நேரத்தை களவாட வருவர். அவர்கள் மனமும் புண்படக் கூடாது; அவர்களிடமிருந்து தப்பிக்கவும் வேண்டும். இதற்கான வழிமுறைகளை கற்றுக் கொண்டால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்!ஒரு அறுவை ஆசாமி உங்களைத் தேடி, அலுவலகத்திற்கு வந்து விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம், 'இன்னும் பத்து நிமிடம் தாமதமாக வந்திருந்தால், என்னை, நீங்கள் பார்த்திருக்க முடியாது. அவசர வேலையாக வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறேன்...' எனக் கூறலாம். இதன் மூலம், 'பத்து நிமிடத்திற்கு மேல் உனக்காக என்னால் நேரம் ஒதுக்க முடியாது...' என்பதை, நாசூக்காக புரிய வைத்து விட முடியும். ஆசாமி அதையும் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒன்பதாவது நிமிடமே, நீங்கள் கிளம்புவதற்கான அறிகுறிகளை காட்டி, ஆசாமியிடம், 'அப்போ... பார்க்கலாம்...' எனக் கூறி, அனுப்பி வையுங்கள்!இதேபோல் டெலிபோனில் வரும் அறுவையை சமாளிக்க, அவர்கள் கூப்பிடும் போது, மற்றவரை விட்டு, 'ஐயா பாத்ரூமில் இருக்கிறார்; 'வாக்கிங்' சென்றுள்ளார்; ஐயா வந்ததும் போன் செய்யச் சொல்றேன்...' என்று கூறச் சொல்லுங்கள். ஐந்து நிமிடம் சென்ற பின், அறுவை ஆசாமிக்கு நீங்களே போன் செய்யுங்கள்; நீங்களே போன் செய்வதால், பேச்சைக் குறைத்து, நீங்கள் விரும்பும் போது போனை வைத்து விடலாம்!— இது போன்ற பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்து, நேரத்தை சிக்கனம் செய்து, அதை எப்படி பயனுள்ளதாக்கிக் கொள்வது என்பது பற்றிப் பேசினார். இடையிடையே குட்டிக்கதைகள் மற்றும் தமாஷுகளை அள்ளித் தெளித்து, கரகோஷத்தையும் பெற்றார்.இதையெல்லாம் கேட்ட லென்ஸ் மாமா, தான் தனித்தனியே செய்து கொண்டிருந்த வெற்றிலை போடுதல், வெண்குழல் வத்தி பிடித்தல், உற்சாக பானம் அருந்துதல் ஆகியவற்றை இப்போது ஒரே நேரத்தில் செய்கிறார். கேட்டால், 'நேரத்தை மிச்சம் பிடிக்கிறேன்...' என்கிறார்.ஆக., 20, 2017 வாரமலர் இதழில், பழைய, 'கல்கண்டு' இதழில் வெளியான, தமிழ்வாணனின் கேள்வி - பதில் பகுதியிலிருந்து சிறு பகுதியை எடுத்து, எழுதியிருந்தேன். அதைப்படித்த, மதுரையைச் சேர்ந்த, வங்கி பணியிலிருந்து ஓய்வு பெற்ற, அந்துமணி வாசகர், கே.பி.எச். ஷேக் மதார், 'கல்கண்டு' கேள்வி - பதில் பகுதியை தானும் விரும்பி படித்து வந்ததாகவும், இன்று வரை தன் நினைவில் பசுமையாக இருக்கும் சில கேள்வி - பதில்களை எனக்கு எழுதி அனுப்பியுள்ளார்.அவை:கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், கேள்வி - பதில் பகுதி மூலம் பிரபலமானவர்கள் இருவர். ஒருவர், 'கல்கண்டு' இதழ் ஆசிரியர் தமிழ்வாணன்; இன்னொருவர், 'மதர் இந்தியா' என்ற ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர் பாபு ராவ் பட்டேல்.அந்தக் காலத்தில், 'கல்கண்டு' இதழில் வந்த கேள்வி - பதில்கள், 50 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், இன்றும் பசு மரத்தாணி போல், என் நினைவில் உள்ள சில கேள்வி - பதில்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...ஈ.வெ.ராமசாமியின் கஞ்சத்தனம் பற்றி...பகுத்தறிவு இயக்கத்தின் அன்புக்கு உரியவர், பட்டுக்கோட்டை அழகிரிசாமி. அவரது ஒருநாள் சொற்பொழிவை கேட்டவர்கள், இன்று, கழகத்தில் அரும்பெரும் தலைவர்களாக திகழ்கின்றனர். பட்டுகோட்டை அழகிரிசாமி, காசநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஈ.வெ.ரா., தன் மனதை திறந்து காட்டினாரே ஒழிய, தன் மணிபர்சை திறந்து காட்டவில்லை.சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் பலம் வருமா?வரும்; சிட்டுக்குருவியின் பலம்!என் தம்பி ரொம்பவும் பொய் சொல்கிறான்...தமிழகத்திற்கு சிறந்த அரசியல்வாதி கிடைத்து விட்டார் என்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைகிறேன்.கண்ணதாசனும், நடிகை சரோஜாதேவியும், எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டனராமே...கண்ணதாசனிடம் செல்வாக்கும், சரோஜாதேவியிடம் செல்வமும் இருக்கிறது. செல்வம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் பிறரிடம் மண்டியிட தேவை இல்லை.உங்களை, தமிழ், 'வீணன்' என்று கூறுகின்றனரே?வீணன் என்றால் வீணையை மீட்டுகிறவன் என்று பொருள். தமிழ்வீணன் என்றால், தமிழ் என்கிற வீணையை மீட்டுகிறவன் என்று அர்த்தம்!உங்களை, பத்திரிகை ஆசிரியன் என்று சொல்கின்றனரே...ஆலமரத்தின் சிறிய விதைக்குள், பல பிரமாண்டமான ஆலமரங்கள் அடங்கி இருப்பதை, அறியாதவர்களா இவர்கள்!— எவ்ளோ பெரிய அறிஞர் தமிழ்வாணன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !