உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா-கேஎனக்கும், லென்ஸ் மாமாவுக்கும் அறிமுகமான மத்திய அரசு உயரதிகாரி ஒருவர், கடந்த வாரம், பணி ஓய்வு பெற்றார். அதை, கொண்டாட எங்களுக்கு, 'பார்ட்டி' கொடுக்க அழைத்திருந்தார்.'நான் எதுக்கு மாமா... நீங்க பூப்போட்ட கிளாசும், வறுவல் - குறுவலுடன் இருப்பீங்க...' என்று, தட்டிக்கழிக்க பார்த்தேன். மாமா விடவில்லை. நச்சரித்து, புறநகரில் இருக்கும், 'கெஸ்ட் ஹவுசு'க்கு அழைத்துச் சென்றார்.நண்பர் குடியிருப்பது, சென்னை, அண்ணாநகரில். 'பார்ட்டி' என்றால் மட்டுமே இங்கு.நண்பரை பற்றி ஒரு சின்ன அறிமுகம்...பணியில் இருக்கும்போது, சம்பளத்தை விட, கிம்பளம் அதிகம் கறந்தவர். கொஞ்சம் மனசாட்சி உள்ளவர் ஆதலால், வசதியானவர்களிடம் இருந்து தான் வசூல் செய்வார். வறியவர்களிடம், ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டார்; அவர்களது நியாயமான கோரிக்கையை எப்பாடுபட்டாவது முடித்து கொடுத்த பின்தான், மறு வேலை பார்ப்பார்.நண்பரின் அம்மாவுக்கு, 78 வயது. பிரமாதமாக சமைப்பார். வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், தவறாமல் அவரிடமிருந்து, 'டிபன் கேரியர்' எனக்கும், மாமாவுக்கும் வந்து விடும். நண்பரும் சைவம் - அசைவம் இரண்டையும் அருமையாக சமைப்பார்.கம்மிங் பேக் டுத பாயின்ட்.நண்பரின், 'கெஸ்ட் ஹவுஸ்' சிறியதாக அழகாக இருந்தது. சுற்றிலும் மரம், செடிகள் பசுமையாக காட்சியளித்தது.வீட்டு வாசலியே நின்றிருந்தார், நண்பர். எங்களை பார்த்ததும், ஆரவாரமாக வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே சென்று அமர்ந்ததும், அவரே தயார் செய்த நன்னாரி சர்பத் கொடுத்து, உபசரித்தார். வெயிலுக்கு இதமாக இருந்தது.மாமா, தான் கொண்டு வந்திருந்த, 'பொக்கே'யை நண்பரிடம் கொடுத்து, 'ஹேப்பி ரிட்டையர்மென்ட் லைப்' என்று, வாழ்த்தினார்.'மணி... உனக்கு பிடித்த உணவு வகைகளை என் அம்மா செய்து, டிரைவரிடம் கொடுத்து அனுப்புவதாக கூறியுள்ளார். முற்றிலும் சைவம் மட்டும் தான். கவலைப்படாதே...' என்றார்.'வயதானவரை ஏன் சிரமப்படுத்தறீங்க...' என்றேன்.'அதெல்லாம் ஒரு சிரமமுமில்லை. சமைப்பது, அம்மாவுக்கு பொழுதுபோக்கு. வீட்டில், சொந்தக்காரங்க வந்திருக்காங்க. அதனால், சமையற்கட்டை குத்தகை எடுத்திருப்பார்...' என்றவர், தொடர்ந்து, 'ஓய் லென்சு... உமக்கு பிடிக்குமேன்னு பனீர் டிக்கா, மட்டன் சாப்ஸ் மற்றும் சுக்கா செய்துடறேன். மதியத்துக்கு, ப்ரைட் ரைசும், கோளா உருண்டை குழம்பும் தயாராகிட்டு இருக்கு. அம்மா அனுப்புவதுடன் சேர்த்து சாப்பிடலாம். போதும்தானே...' என்றார்.'அம்மாடியோவ், இதுவே யதேஷ்டம்...' என்றார், மாமா.அதன்பின், இருவரும், 'பிசி'யாகி விட்டனர். கொஞ்ச நேரம் சமையலில் ஈடுபடுவதும், திரும்ப வந்து, பூப்போட்ட கிளாசை நிரப்புவதும், காலி செய்வதுமாக, இடையிடையே சுடச்சுட, 'சைடு' ஐட்டங்களை, 'ஸ்வாகா' செய்தபடியும் இருந்தனர்.எனக்கு ஒரு கிண்ணம் நிறைய பழ துண்டுகள் கொடுத்தார், நண்பர்.புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ளவர், நண்பர். ஆதலால், வரவேற்பு அறை முழுவதும், பெரிய பெரிய அலமாரியில், தமிழ் - ஆங்கில புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. மேஜை மீது இருந்த ஒரு ஆங்கில இதழை எடுத்து, புரட்ட ஆரம்பித்தேன்.ஒரு பக்கம் முழுக்க சரக்கு பாட்டில்களும், ஏதோ சதவீத கணக்குகளும் இருப்பதை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன்.என் கையில் இருந்த இதழை வாங்கி, படித்து, விளக்க ஆரம்பித்தார், நண்பர்.அது...சமீபத்தில், டில்லியில், மது அருந்தும் வயது, 25லிருந்து, 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது.பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிராவில், 25 வயது தான் குடிக்க அனுமதி. 21 வயதிலிருந்து, மென்மையான பீர் குடித்துக் கொள்ளலாம்.கேரளா - 23 வயது, கர்நாடகா - 21 வயது. ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், புதுச்சேரி, சிக்கிம், ஆந்திரா மற்றும் மிசோரமில், 18 வயது நிரம்பியவர்கள், மது அருந்தலாம்.பீகார், குஜராத், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவு (பங்காரம் தீவு விதிவிலக்கு) ஆகியவற்றில், முழு மதுவிலக்கு அமலில் உள்ளது.பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், மது கடைகள், மது விற்கும் உணவகங்களில், பெண்களை நியமிக்க தடை உள்ளது. மீறி நியமிப்பது, சட்ட விரோதம்.மகாராஷ்டிராவில், மாவட்டங்களே தங்கள் பகுதிகளில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தலாம்.இனி, உலக மது விஷயங்களை பார்ப்போம்:* அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் லெபோஸ் நகரத்தில், ஒரு நுாதன சட்டம் அமலில் உள்ளது. இங்கு, இரண்டு முறை நின்றபடியும், மூன்றாவது முறை அமர்ந்தும் மது அருந்தினால் தவறில்லை. மூன்று முறை நின்றபடி மது அருந்த தடை உள்ளது* முன் காலத்தில் பிரிட்டனில், வண்டி, குதிரை அல்லது ஸ்டீம் இஞ்சின் ஓட்டும்போது, மது அருந்தி, அது கண்டுபிடிக்கப்பட்டால், 180 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மாதம் சிறை தண்டனை. மேலும், மதுக்கடை மற்றும் பொது இடங்களில் போதையில் இருந்தால், அவருக்கு மேலும் மது விற்பனை செய்வது, சட்டப்படி குற்றமாக கருதப்படும்* ஜெர்மனியில், போதையில் சைக்கிள் ஓட்டினால் அபராதம் உண்டு. சைக்கிள் ஓட்ட லைசென்ஸ் கிடையாது. ஆனாலும், போதையில் சைக்கிள் ஓட்டிய ஆசாமி பிடிபட்டால், 15 ஆண்டுகளுக்கு சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்படும்* ஆஸ்திரேலியாவில், மார்பகங்களுக்கிடையே பீர் கேன்களை அழுத்தி, திறக்க தடை உள்ளது. இப்படி செய்வதால், பீர் கேனின் கூரான பகுதி, மார்பகங்களை கிழித்து விடக்கூடும் என்ற கவலை தான்.மேலும், சில மதுக்கடைகள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் பெண்களின் மார்பகங்களுக்கிடையே பீர் கேனை வைத்து திறக்க வைக்கும் குறும்பு போட்டிகளும் முன்பு நடக்குமாம். அதற்கும், தடை விதித்துள்ளனர்* தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகரம், லாபாஸ். இங்கு, திருமணமான பெண்கள், அதிகபட்சமாக ஒரு கிளாஸ் ஒயின் மட்டும் குடிக்க வேண்டும். மீறி, அதிகம் குடித்து பிடிபடும்போது, எழும் சிக்கலே அலாதி.ஆம்... அவருடைய கணவர், அதைக் காட்டியே மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி விண்ணப்பிக்கலாம். இதற்காகவே, பல கணவன்மார்கள், தங்கள் மனைவிக்கு அதிகமாக ஒயின் கொடுத்த தகவலும் வெளியாகியுள்ளது* உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகில், சுமார், 65 சதவீத நாடுகளில், 18 வயதுக்கு மேற்பட்டோர் குடிக்க அனுமதியுண்டு. இவர்கள், மதுக்கடை அல்லது உணவகங்களில் அமர்ந்து மது அருந்தலாம். இதேபோல், 55 சதவீத நாடுகளில், 18 வயதுக்காரர்கள், மற்றவர்களுக்காக மது வாங்கித் தரவும் அனுமதி உண்டு* கரீபியன் கடல்தீவு நாடுகளான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில், 15 வயதிலிருந்தே குடிக்க உரிமை உண்டு. லக்சம்பர்க், கயானா மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளில், 15 வயது நிரம்பியவர்கள், மது அருந்தலாம். ஆனால், முழு நேர குடிகாரர்களாக மாறாமல் தடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.நண்பர் சொல்லி முடிக்கவும், அவர் வீட்டிலிருந்து, பெரிய டிபன் கேரியரில் சாப்பாடு வரவும் சரியாக இருந்தது.கேரியரை திறந்ததும், வாசனை கமகமத்தது. சாப்பிட்டு, ஒரு துாக்கம் போட்டு, வீடு திரும்பினோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !