உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் தமிழர் அவர். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், சென்னை வந்திருந்தபோது, அலுவலகத்தில் என்னை சந்தித்தார். பரஸ்பர நலன் விசாரிப்புக்கு பின், 'லண்டன் வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்றேன்.'முன்பு போல் இல்ல மணி... ரொம்பவே மாறிவிட்டது; சென்னை கூட அடியோடு மாறி விட்டிருக்கிறதே...' என்றார், நண்பர்.எங்கள் பேச்சின் இடையில் புகுந்த மூத்த செய்தியாளர், லண்டனிலிருந்து வெளியாகும் ஒரு ஆங்கில பத்திரிகையை விரித்து, 'ஆட்கள் தேவை' என்ற ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி, 'இதில் கையால் தான் விண்ணப்பத்தை எழுதி அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனரே... இப்ப எல்லாம் யார் கையால் எழுதுகின்றனர். இப்படி குறிப்பிடுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?' என்று கேட்டார்.அப்போது உள்ளே வந்த லென்ஸ் மாமா, 'ஒருத்தன் எழுதற எழுத்தைப் பார்த்துட்டு, அந்த ஆள் எப்படிப்பட்டவன் என்பதை கண்டுபிடிக்கலாம் என்று படித்துள்ளேன்...' என்றார். 'மாமா சொல்வது சரிதான். இப்பவும், மேலை நாடுகள்ல, 'வேலைக்கு ஆள் தேவை' என்ற பத்திரிகை விளம்பரங்களில், 'இந்த வேலைக்கு விண்ணப்பம் போடுறவங்க, தங்களுடைய சொந்த கையெழுத்துல மனுவை எழுதி அனுப்பணும்'ன்னு குறிப்பிடுவது வழக்கம் தான்.'இன்றைக்கும் லண்டன்ல உள்ள பல பெரிய கம்பெனிகள், வேலைக்கு ஆள் எடுக்கறதுக்கு முன், சாஸ்திர நிபுணர்களைக் கூப்பிட்டு மனுதாரர்களுடைய கையெழுத்தைக் காட்டி, எழுத்துக்கு மதிப்பெண் போடச் சொல்வாங்க.'நிறைய விண்ணப்பம் வர்றப்போ, அதை வடிகட்டறதுக்கும் இந்த முறையை உபயோகப்படுத்தறது உண்டாம்.'பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில், இந்த கலையில தேர்ச்சி பெற்ற நிபுணர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. கையெழுத்து சாஸ்திரம் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.'ஒரு ஊழியர் நேர்மையானவரா, இல்லையா, பணம் புழங்கற இடத்துல அவருக்கு வேலை கொடுக்கலாமா, கூடாதா, விசுவாசமான ஊழியரா, பொய் சொல்வாரா என்கிறதெல்லாம், எழுத்தைப் பார்த்து முடிவு பண்ணிக்கிறாங்களாம்!'இத்தாலியில், 17ம் நுாற்றாண்டில், இந்த கலை ஆரம்பமானது. 1871 வரைக்கும், பிரபலமாகாமல் இருந்தது. பிரெஞ்சு பாதிரியாரான, ஹிபோலைட் மிஷாந்த் என்பவர், முதன்முதலாக, 1871ல் பிரெஞ்சு எழுத்து சாஸ்திர சங்கத்தை நிறுவினார். அதுக்கப்புறம் இது கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சிருக்கு.'இன்றைக்கு உலகத்துலயே மிகப்பெரிய எழுத்து கலை கழகம், இஸ்ரேல் தலைநகரான, டெல் அவீவ் நகரத்தில் இருக்கு. அதோட கிளை லண்டன்ல இருக்கிறது.'இஸ்ரேல்ல சிலசமயம், நீதிமன்றங்கள் கூட, எழுத்து சாஸ்திர அறிஞர்களின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதுண்டு. குற்றவாளிகள், உண்மையிலயே, குற்றம் இழைக்கக் கூடியவரா என்பதை, அவர் எழுதின எழுத்தின் வடிவத்தை வச்சு கண்டுபிடிச்சுடுவாங்களாம்.'எழுத்து சாஸ்திரம் சம்பந்தமா, கடந்த, 200 ஆண்டுகளில் ஏராளமான நுால்கள் வந்திருக்கு. சில பல்கலைக் கழகங்கள், இதை பாடமா கூட வச்சிருக்குன்னா பார்த்துக்கோங்க. இந்தக் கலையை, நுாற்றுக்கு நுாறு துல்லியமானதுன்னு சொல்ல முடியாது.'இதை விஞ்ஞான ரீதியில நிரூபிக்க, முறையான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படல. ஆனாலும், ஒருத்தர் எழுதற எழுத்தின் வடிவத்தை வச்சு, அவரோட மனநிலையை ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடியும்ன்னு உளவியல் நிபுணர்கள் ஒத்துக்கிறாங்க.'ஒருத்தருடைய பர்சனாலிட்டியை கண்டுபிடிக்க, இது ரொம்ப உதவி செய்யும் என்கின்றனர். கோடு போடாத வெள்ளை தாள்ல, பால்பாயின்ட் பேனாவால, 20 வரி எழுதிக் கொடுத்தா போதும். நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்ற நிபுணர்கள் பல பேர் இருக்காங்க.'ஆங்கில எழுத்துக்களை அடிப்படையா வச்சு விளக்கம் கொடுப்பாங்க. இருந்தாலும், பிற மொழிகள்ல எழுதுறவங்களின் குண நலனை கண்டுபிடிக்கிறதுக்கும் பொதுவான விதிமுறைகள் இருக்காம்.'ஒருத்தர் பெரிசா இடைவெளி விட்டு எழுதினா, அவர் பரந்த நோக்கம் உள்ளவர். சின்னதா நெருக்கமா எழுதினா, ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவர்.'ஒரு தாள்ல இருபக்கமும், 'மார்ஜின்' விட்டு எழுதறவங்க, கலை நோக்கு உள்ளவங்களாகவும், எதிலயும் பட்டும் படாமலும் இருக்கற சுபாவம் உள்ளவங்களாகவும் இருப்பாங்களாம்.'ஆங்கில எழுத்துக்களில்,I, t, f மாதிரியான எழுத்துக்களை அளவுக்கு அதிகமா மேல்புறம் நீட்டி எழுதறவங்க, குறிக்கோள் உள்ளவங்களாம். g, y, p இது மாதிரியான எழுத்துக்களை அளவுக்கு அதிகமா கீழ் நோக்கி எழுதறவங்க, செக்சில் அதிக ஆர்வம் உள்ளவங்களாம்.'குறைவான, 'மார்ஜின்' விட்டு எழுதறவங்க, சிக்கனமான பேர்வழிகள் என்று, இஸ்ரேல்ல, எழுத்து சாஸ்திர நிறுவனத்தை நடத்தி வந்த, அன்னா கொரன் சொல்லியிருக்காங்க...' என்று கூறி முடித்தார், லண்டன் நண்பர்.'தமிழ்ல கூட, எழுத்து சாஸ்திர நிபுணர்கள் நிறைய பேர் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் கூட, நம் அலுவலகத்துக்கு, எழுத்து சாஸ்திர பலன் சொல்ல, ஒருவர் வந்திருந்தார். 'மணியிடம் சில வார்த்தைகளை எழுதச் சொன்னார். மணியின் குண்டு குண்டு கையெழுத்துகளை பார்த்து, நல்லவர், வல்லவர், தலைமை பண்புள்ளவர் அப்படி இப்படின்னு கூறினார்...' என்றார், லென்ஸ் மாமா.'ஏன்... உங்கள எழுதச் சொல்லலயா?' என்று நண்பர் கேட்டதும், 'நான் கூடதான் எழுதி காண்பிச்சேன். ஆனால், அவர் கூறியது எதுவும் எனக்கு பொருந்தவில்லை...' என்றார் தடாலடியாக.குற்றாலத்துல ஒரு ஆளு, கையில வாழைப்பழத்தை வச்சுக்கிட்டு வேகமா ஓடிக்கிட்டிருந்தார். பின்னாடி, ஒரு குரங்கு துரத்திக்கிட்டே வந்தது.அதுக்கு பின்னாடி ஒருத்தர் துரத்திக்கிட்டு வெறுங்கையோட ஓடிக்கிட்டிருந்தார்.வழியில ஒருத்தர், துரத்திய ஆளை தடுத்து நிறுத்தி, 'அந்த ஆளுதான் கையில வாழைப்பழம் வச்சிருக்கான். குரங்கை பார்த்துட்டு ஓடறான். குரங்கு, அந்த வாழைப் பழத்தை பார்த்துட்டதால, அவன் பின்னாடி ஓடுது; அது நியாயம். எந்த சம்பந்தமும் இல்லாம, நீ எதுக்கு பின்னாடியே ஓடுற...' என்றார்.'அந்த ஆளு, என் கடையில வாழைப்பழம் வாங்கிட்டு, காசு கொடுக்காம ஓடறான். காசு கேட்டுதான் துரத்துறேன்...' என்று கூறியபடி, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !