அந்துமணி பா.கே.ப.,
பா - கேஎனக்கு தெரிந்த ஒருவர், எதிலும் தெளிவான முடிவெடுக்கத் தெரியாத சஞ்சல பேர்வழி. வயதுக்கேற்ற பக்குவம் இல்லாதவர்; ஆனால், மிகவும் நல்லவர்.சமீபத்தில் அவரை சந்திக்க நேர்ந்தது. கொஞ்சமாவது மாறியிருப்பார் என்று நினைத்தால், மாறவே இல்லை என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. அவரை எப்படி திருத்துவது என்று யோசித்தேன்.சமீபத்தில், உளவியல் மருத்துவர் ஒருவர் கூறியதை, அவரிடம் சொன்னேன்.அது:இந்த உலகத்துல ஏழு வகையான மனிதர்கள் இருக்காங்கன்னு சொல்றார், மனோதத்துவ மருத்துவரான எட்வர்டு பாட்ச்.மனிதர்களோட மனோநிலை அடிப்படையில, அவர்களை ஏழு வகையா பிரிக்கலாம்ங்கிறார்.முதல் வகை: பயந்த குணமுள்ளவர்கள்.'சார், ரொம்ப பயந்த சுபாவம். வீட்டுல கூட வாயை திறக்க மாட்டார். சாப்பிடுற நேரம் மட்டும் தான் கொஞ்சம் வாயை திறப்பார்...' அப்படிங்கறோம்ல, அவங்கள்லாம் இந்த ரகம்.இரண்டாவது வகை: சஞ்சலப்படுகிறவர்கள்.எதுக்கெடுத்தாலும் கலக்கம், குழப்பம். இப்படியே காலம் தள்ளுபவர்கள். மூன்றாவது வகை: யதார்த்த உலகை மறந்து, கற்பனை உலகத்துல மிதக்கிறவங்க. இளம் வயதினர் மற்றும் கவிஞர்கள் போன்றவர்கள், எப்ப பார்த்தாலும் கற்பனை உலகத்துலயே மிதந்துக்கிட்டு இருப்பாங்க. அருகில் போய், 'என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்களே...' என கேட்டால், ஒரு அற்பப் புழுவை பார்க்கறது மாதிரி நம்மை பார்ப்பாங்க.'அதோ அந்த வானத்து நிலா, என்னை வா என்று கூப்பிடுகிறது. எனக்கு விரைவில் ஒருநாள் சிறகுகள் முளைக்கும். சிறகடித்து பறந்து செல்வேன். என் செல்ல நிலாவை கொஞ்சிவிட்டு திரும்பி வருவேன்...' என்பர்.'கொஞ்சறது அப்புறம் இருக்கட்டும்... இப்ப கஞ்சிக்கு வழியை பாருடா...' என்றால், அதை காதுல வாங்க மாட்டாங்க.நான்காவது வகை: தனிமை உணர்வு மிக்கவர்கள்.இவங்கள்லாம் மத்தவங்களோட சகஜமா நெருங்கி பழக மாட்டாங்க. தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பாங்க.அந்த வீட்டுல இருக்கறது யாருன்னு கேட்டா கூட, 'அடுத்த வீடுன்னு ஒண்ணு இருக்கா?' என்பர். அவங்ககிட்ட மேற்கொண்டு பேச முடியாது.ஐந்தாவது வகை: மற்றவர்கள் செல்வாக்குக்கு உட்பட மறுப்பவர்கள். அதாவது, அடுத்தவங்க செல்வாக்குக்கு, ஆசைப்படாதவங்க.'நான் யார் தெரியுமா?' என்றால், 'அதை தெரிஞ்சுக்கிட்டு எனக்கு என்ன ஆவப் போவுது...' என்பர்.ஆறாவது வகை: எப்பவும், எதுலயும் பற்று இல்லாம இருக்கறவங்க.இது ஒரு துறவு மனப்பான்மை போன்றது. அவர்களுக்கு எதிலேயும் ஈடுபாடு இருக்காது.ஏழாவது வகை: மற்றவங்க கவலையை, தன்னுடையதா ஆக்கிக்கிட்டு கவலைப்படறவங்க.இவங்க மகாத்மாக்கள். தான் வேறு, அடுத்தவங்க வேறு என்ற எண்ணம், இவங்களுக்கு வர்றதில்ல. அதனால தான், அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா, அதை தன் கஷ்டமா எடுத்துக்கிட்டு, தீர்த்து வைக்க முயல்வாங்க.'ஆக, இப்படி ஏழு வகையான மனிதர்களை அடையாளம் காட்டுகிறார், அந்த நிபுணர். இதுல நாம எந்த ரகத்துல வர்றோம்கிறதை அடையாளம் கண்டு, நாம தான் மாறிக் கொள்ளணும்...' என்று முடித்தேன்.புரிந்ததற்கு அடையாளமா தலையை ஆட்டினார்.'அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது, ஒரு சாதனையாளரா தான் சந்திக்கணும்...' என்று கூறி, விடை கொடுத்து அனுப்பினேன்.இவ்வளவையும் கேட்ட அந்த சஞ்சலப் பார்ட்டி, 'ஓஹோ... அப்படியா...' என்று சொல்லி, அங்கிருந்து நகர்ந்தார்.எனக்கு, 'சப்'பென்றாகி விட்டது.'இந்தாளுக்கு சவுக்கடி கிடைத்தால் தான் புத்தி வரும் போலிருக்கு...' என்று நினைத்துக் கொண்டேன்.பநம்மூர் தெனாலிராமன் போன்று, துருக்கியில் இருந்தவர், முல்லா. அவரது நகைச்சுவை கதை ஒன்று:பெரிய அறிஞர்கள் என, பெயர் பெற்ற, மூவர் இருந்தனர். இவர்கள், ஊர் ஊராகப் போய், தங்கள் அறிவை நிலைநாட்டி வந்தனர்.ஒரு ஊருக்குச் சென்றால், அங்குள்ள அறிஞர்களைப் போட்டிக்கு அழைப்பர். அவர்களிடம் சில கேள்விகளை கேட்பர். அவற்றுக்கு உள்ளூர் அறிஞர்கள், பதில் சொல்ல முடியாமல் போட்டியில் தோற்று விடுவர். அவர்கள் பெற்ற பரிசுகள், விருதுகள் அனைத்தையும் இந்த மூவரிடம் கொடுத்து விட வேண்டும்.இவ்வாறு பல ஊர்களில் உள்ள அறிஞர்களை வெற்றி கொண்டு, பரிசுகள் பெற்று வந்தனர். முல்லா வாழ்ந்த ஊருக்கு வந்த, இந்த மூவர், தாங்கள் வந்த விபரத்தை, ஊர் தலைவரிடம் கூறினர்.முல்லாவை வரவழைத்த ஊர் தலைவர், 'இந்த மூவருடன் நீங்கள் போட்டியிட்டு, நம் ஊரின் புகழை நிலை நிறுத்த வேண்டும்...' என, கேட்டுக் கொண்டார்.போட்டி நாள் குறிக்கப்பட்டு, மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. போட்டி துவங்கியது. முல்லாவிடம், 'இந்த உலகின் மைய இடம் எது?' என கேட்டார், முதல் அறிஞர்.'வெளியே என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்...' என்றார், முல்லா.'அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்...' என்றார்.'நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது, என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்...' என்றார், முல்லா.என்ன சொல்வது என்று தெரியாமல், பேசாமல் இருந்தார், முதல் அறிஞர்.அடுத்து, 'ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?' என கேட்டார், இரண்டாம் அறிஞர்.'என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ, அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்...' என்றார், முல்லா.பேசாமல் இருந்து விட்டார், இரண்டாம் அறிஞர்.முல்லாவிடம், 'மக்கள் கடைப்பிடிப்பதற்காக சான்றோர் வகுத்த நெறிகள் எவ்வளவு?' என்றார், மூன்றாவது அறிஞர்.'அறிஞர்களே... உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ, அத்தனை நெறிகளை மக்களுக்காக வகுத்துள்ளனர், சான்றோர். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்...' என்றார், முல்லா.'வேண்டாம், வேண்டாம்... நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்...' என்று கூறி, தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு வெளியேறினர், அந்த அறிஞர்கள்.போட்டியில் வென்ற முல்லாவிற்கு பல பரிசுகள் அளித்துப் பாராட்டினர், ஊர் மக்கள்.