ஏவி.எம்., சகாப்தம் (8)
எம்.வி.ராமன் பிரமாண்டமாக எடுத்த, ஆஷா என்ற இந்தி படம், எதிர்பார்த்த வெற்றி அடையாத நிலையில், ஏவி.எம்.,மின், இந்தி படமான, பாபி, 50 வாரங்கள் ஓடி, சாதனை படைத்தது. அது மட்டுமல்ல... அந்த, 50 வாரங்களும், அதாவது, 350 நாட்கள், ஒரே, 'பிலிம் பிரின்ட்' தான் தியேட்டரில் ஓடியது.அவ்வளவு பாதுகாப்பாக, படச்சுருளை கிழியாமல் பத்திரமாக கையாண்டார், அந்த தியேட்டரின் ஆபரேட்டர். அவரது திறமையை பாராட்டும் விதமாகவும், இப்படி ஒரு வெற்றிப் படத்தை எடுத்ததற்காகவும், ஏவி.எம்., நிறுவனத்தை பாராட்டி, இங்கிலாந்தில் உள்ள, 'கொடக் பிலிம் கம்பெனி' சான்றிதழ் வழங்கி, கவுரவித்தது.என்னை பொறுத்தவரையில், இந்த கவுரவமானது, 'இனி, இந்தி படமே எடுக்க முடியாதோ என்று அதிர்ச்சியடைந்த என் அப்பா, அயர்ந்து போகாமல், 'முயற்சி திருவினையாக்கும்' என்ற, தன் கொள்கையில் நம்பிக்கை வைத்து செயல்பட்ட துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி...' என்றே கருதி பெருமைப்படுகிறேன்.அந்நாளில் புகழ் பெற்றிருந்த நடிகை, எம்.எஸ்.திரவுபதி, தன் பெயரிலேயே, 'எம்.எஸ்.திரவுபதி நாடக சபா' என்ற கம்பெனியை நடத்தி வந்தார். வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு அருகில், திருப்பத்துார் என்ற ஊரில், அவரது நாடகம் நடந்து கொண்டிருந்தது. அதை பார்த்த சிலர், 'திலகம் என்ற நாடகம், திருப்பத்துாரில் நடக்கிறது. அதை சினிமாவாக எடுத்தால் நன்றாக இருக்கும்...' என்று, அப்பாவிடம் கூறினர்.என்னையும், என் சகோதரர் சரவணனையும் அழைத்து, 'அந்த நாடகத்தை பார்த்து வாருங்கள்...' என, அனுப்பினார், அப்பா.ஏவி.எம்.,மில், உதவி இயக்குனர்களாக வேலை பார்த்த, லட்சுமி நாராயணன் மற்றும் எஸ்.வி.வெங்கட்ராமன் ஆகியோர், எங்களுடன் வந்தனர். நால்வரும் காரில் புறப்பட்டு, திருப்பத்துார் சென்றடைந்தோம். இரவு, 10:00 மணிக்கு நாடகம் ஆரம்பமானது. எம்.எஸ்.திரவுபதியோடு மற்ற நடிகர்களும் நடித்தனர். நாடகத்தின் கதை வசனத்தை, நாராயணசாமி என்பவர் எழுதியிருந்தார். பிற்காலத்தில், தன் பெயருக்கு முன், நாடகத்தின் பெயரை சேர்த்து, 'திலகம் நாராயணன்' ஆனார்.அதிகாலை, 2:00 மணிக்கு நாடகம் முடிந்தது. சாலை வழி சரியில்லாததால், அந்த நேரத்தில் காரில் பயணம் செய்வது பாதுகாப்பு இல்லை என்று கருதியதால், திருப்பத்துாரிலேயே தங்கி, மறுநாள் காலை புறப்படலாம் என்று முடிவு செய்தோம்.அக்காலத்தில், அந்த ஊரில் வசதியான ஓட்டல்கள் இல்லை. 'லாட்ஜ் சுமாராக தான் இருக்கும்...' என்றனர். இரண்டு அறை எடுத்து, ஒரு அறையில், லட்சுமி நாராயணன் மற்றும் எஸ்.வி.வெங்கட்ராமனும், அடுத்த அறையில், நானும், என் சகோதரரும் தங்கினோம்.நள்ளிரவில், நாங்கள் தங்கியிருந்த அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு, 'இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது...' என்று எழுந்து, திறந்து பார்த்தால், இரண்டு பெண்கள், கையில் சொம்புடன் நின்றிருந்தனர். எங்களுக்கு துாக்கி வாரிப்போட்டது. உடனே, வெளியில் ஓடிவந்து, உதவி இயக்குனர்கள் அறை கதவை தட்டினோம். வெளியில் வந்த அவர்களிடம், 'ரெண்டு பொண்ணுங்க, எங்க அறைக்கு முன் வந்து நிக்கிறாங்க எங்களுக்கு பயமா இருக்கு... வந்து என்ன ஏதுன்னு கேளுங்கண்ணே...' என்றோம்.'யாரம்மா நீங்க... எதுக்கு இந்த நேரத்துல வந்து கதவை தட்டுறீங்க...' என்று கேட்டனர்.'இங்க யாரோ தண்ணீர் வேணும்ன்னு சொன்னாங்க... அதான்...' என்று இழுத்தனர்.'அதெல்லாம் யாரும் கேக்கல. நீங்க போங்க... இனிமே இங்க வந்து தொந்தரவு செய்தீங்கன்னா, நாங்க போலீசை கூப்பிடுவோம்...' என்றதும், அவர்கள் ஓடி விட்டனர். அவர்கள் போனதும், 'இது, சரியான இடம் இல்லை. கொஞ்சம் பொறுங்க... விடிஞ்சதும் புறப்பட்டு விடலாம்...' என்றனர், உதவி இயக்குனர்கள்.அடுத்த நாள், 'நாடகம் ரொம்ப நல்லா இருக்கு. சினிமா எடுக்க தகுதியான கதை தான்...' என, தெரிவித்தோம், அப்பாவிடம். உடனே, அந்த நாடகத்தின் கதை உரிமையை வாங்கி, படம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார், அப்பா.படத்தின் பெயர், திலகம். கதை வசனம், அதே திலகம் நாராயணசாமி எழுத, இசை, ஆர்.சுதர்சனம். எம்.என்.ராஜம், தாம்பரம் லலிதா, பிரேம் நசீர், குலதெய்வம் ராஜகோபால் மற்றும் வி.கே.ராமசாமி ஆகியோர் ஒப்பந்தம் ஆகினர்.யாரை இயக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, 'நம் உதவி இயக்குனர்களான லட்சுமி நாராயணன் மற்றும் எஸ்.வி.வெங்கட்ராமன் இருவரையுமே இயக்குனராக அறிமுகப்படுத்துவோமே. இருவரும் சேர்ந்து இயக்கட்டும்...' என்றார், அப்பா. அதன்படி, அவர்கள் இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது. 7,000 அடிகள் படமெடுத்தனர். எடுத்த வரை, பார்த்தோம்; நொந்து விட்டார், அப்பா.'என்னப்பா, இப்படி பண்ணியிருக்கீங்க...' என்று இயக்குனர்களிடம் கேட்டு, வசனகர்த்தா திலகம் நாராயணசாமியிடம், எடுக்கப்பட்ட காட்சிகளின் வசனங்களை எடுத்து வர சொன்னார்.அவர் எடுத்து வந்ததும், இயக்குனர்களின் முன்னிலையில் அந்தந்த காட்சிகளின் வசனங்களை படித்து காட்ட சொன்னார். பாவனையோடு, உணர்வுப்பூர்வமாக படித்துக் காட்டினார், நாராயணசாமி. 'வசனத்தை படிக்கும்போது எப்படி இருந்தது...' என்று இயக்குனர்களிடம் கேட்டார், அப்பா.'நன்றாக இருந்தது...' என்றனர், இயக்குனர்கள். 'நீங்கள் எடுத்த காட்சியை பார்க்கும்போது அந்த உணர்வும், உருக்கமும் இருக்கிறதா...' என்று கேட்டார், அப்பா.அவர்கள், மவுனமாயினர்.'அவர் படிச்சது, ஒரு மாதிரி இருக்கு... நீங்க எடுத்ததை பார்த்தா, வேற மாதிரி இருக்கே... நாராயணசாமி எழுதியதில் இருக்கிற அழுத்தம், படத்துல இல்லையேப்பா...' என்றார், அப்பா.'ஐயா... எங்களுக்கு தெரிந்த வரை எடுத்தோம். உதவி இயக்குனர்களாக வேலை செய்த எங்களை, பெரிய பெரிய நடிகர்களை வைத்து திடீர்னு இயக்க சொல்லி, தனியா விட்டதுல குழம்பிப் போயிட்டோம். எங்களை மன்னிச்சி, விட்ருங்க. நாங்க விலகிக்கிறோம். வேற யாரையாவது இயக்குனரா வச்சு படத்தை எடுங்க...' என்று, சரணடைந்தனர்.அதன்பின், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், படத்தை திரும்ப எடுத்து, வெளியீடு செய்தோம். ஆனால், படம் தோல்வி அடைந்தது. என்ன தான் சிறந்த நடிகர்கள், நல்ல இயக்குனர்களை வைத்து படம் எடுத்தாலும், சில கதைகள், நாடகத்திற்கு தான் நன்றாக இருக்கும். சினிமாவுக்கு எடுபடாது என்பதை, திலகம் படத்தின் மூலம் அறிந்தோம்.— தொடரும்.ஏவி.எம்.குமரன்