நகைச்சுவை மன்னன் எஸ்.வி.சேகரின் டிராமாயணம்! (19)
எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்த நாட்களை விட, நாடக மேடையில் இருந்த நாட்கள் தான் அதிகம். ஒரே நாளில் எட்டு நாடகம் என்றெல்லாம், நாடகத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றார். நாடக உலகில், ஆர்.எஸ்.மனோகர் நாடகத்திற்கு தான் அதிகம், 'கேட் கலெக் ஷன்' - அதாவது, டிக்கெட் மூலம் வசூல் என்றிருந்த பதிவை முறியடித்தார்.நாடகத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் குரு, நடிகர் சோ தான். ஒரு கட்டத்தில், சோ, நாடகம் போடவில்லை என்றான பின், அவர் விட்ட இடத்தை நிரப்புவதற்காக, அவரது ஆசீர்வாதத்துடன் தான், அரசியல் நையாண்டி நாடகம் போட ஆரம்பித்தார். 'என் ஒவ்வொரு அணுவிலும், ஆற்றலிலும் எஸ்.வி.சேகர் கலந்திருக்கிறார். நான் மீண்டும் நாடகம் போட வந்த போது, 'எஸ்.வி.சேகர் நாடகத்திற்கு வரும் கலெக் ஷன் நமக்கும் வந்துரும் சார்...' என்று தான், என் குழுவினர் என்னை சமாதானப்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு நாடக கலெக் ஷனுக்கு ஒரு மைல் கல்லாக சேகர் இருக்கிறார்...' என்று, மனம் திறந்து பாராட்டினார், சோ.அதிலும், மகாபாரதத்தில் மங்காத்தா என்ற நாடகம் மட்டும் இதுவரை, 1,000திற்கும் அதிகமான முறை மேடையேறி இருக்கும். இதை, 500 முறைக்கும் மேல் பார்த்தவர்கள் உண்டு. நாடகத்தை பார்ப்பதற்காக வந்தனர் என்று சொல்வதை விட, வாய்விட்டு சிரிப்பதற்காகவே திரும்ப திரும்ப வந்தனர் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்.எஸ்.வி.சேகர், சும்மா ஜாலியா நடிச்சுட்டு போவார். எந்தவித சிரமமும் படமாட்டார் என்று, பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அப்படியில்லை. அவரது சிரமங்கள், ரசிகர்களின் சிரிப்பிற்கு கீழ் மறைந்து விடும் என்பது தான் நிஜம்.ஒரு நாடகத்தை உருவாக்க, ஆறு மாதம் கூட எடுத்துக் கொள்வார். கர்ப்பிணி போல, கதையை ஆறு மாதமும் சுமந்து கொண்டே இருப்பார். வீடு, கடற்கரை, கார் என்று, கதை பற்றிய, 'டிஸ்கஷன்' நடந்து கொண்டே இருக்கும். காட்சிகளை செதுக்கிக் கொண்டே இருப்பார்.நிறைய பேச வேண்டும் என்றால், சம்பந்தப்பட்டவர்களோடு காரில் பயணித்து, நீண்ட துாரம் போய் வருவார். பல நாடகங்கள், காரில் தான் உருவானது.நாடகமே வாழ்க்கையாகிப் போவதால் தான், ஒவ்வொரு வசனங்களும், நடிகர்களின் அசைவுகளும் அவருக்கு அத்துப்படி. மேடைக்கு கீழே, 'மைக் செட்டிங்ஸ்'காரரிடம், 'வால்யூம்' தொடர்பாக, அவருக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிய அடுத்த நிமிடம், மேடையில் தோன்றி, அவர் காட்சிக்கான வசனத்தை உடல் மொழியோடு பேசி, கை தட்டலைப் பெற்று விடுவார்.அடுத்து, கிடைக்கும் நேரத்தில், நாடகத்தை யாராவது திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தால், 'மேடை வசனத்துடன், அது தப்பு...' என்று புரிய வைத்து, நிறுத்தி விடுவார்.ஒரு முறை, வடமாநிலத்திற்கு தொலைதுார ரயில் பயணம். பெட்டியில் இருந்தவர்களில் சிறுவர்கள் அதிகம். அவர்கள் ஒன்று சேர்ந்து, 'நீங்க போடப் போற புது நாடகத்தை பார்க்க, எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை...' என்றனர்.'ஏன் கவலைப்படுகிறீர்கள்...' என்று சொல்லி, ஓடும் ரயிலிலேயே, அவர்களுக்காக நாடகம் போட்டார். நம்ப முடியாமல் கை தட்டி, சந்தோஷப்பட்டனர்.வேலுார், ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றனர். அங்கிருந்த விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அங்கேயே நாடகம் போட்டு, அவர்களை மகிழ்வித்தனர்.மக்கள் சந்தோஷம் தான், எஸ்.வி.சேகர் சந்தோஷம்.இவரை பற்றி அவர்ஏதோ தன்னால் தான் கலை உலகமே மறு வாழ்வு பெறப் போகிறது என்ற கற்பனையில் வீழ்ந்து, தன்னையும் கஷ்டப்படுத்தி, மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி நாடகம் என்ற பெயரில், ஒரு சித்ரவதையை மக்கள் மீது திணிப்பதில்லை, எஸ்.வி.சேகர். சோதனை முயற்சி என்ற வேதனையை ஏற்படுத்துவதுமில்லை. 'நான் ஒரு என்டர்டெயினர்...' என்று சொல்லி, மேடைக்கு வருகிறார்; வெற்றி பெறுகிறார்.— நடிகர், எழுத்தாளர் சோ— அடுத்த இதழில் நிறைவு எல். முருகராஜ்