இந்த சவாரி வேண்டாம்!
''ரவி, நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம்!''''ஓ, கங்கிராட்ஸ் கோகிலா! அப்போ, அடுத்த வாரம் தான் நீ, வேலைக்கு வருவியா?''''ஆமாம்.''''உங்க, 'உட்பீ' என்ன பண்றார்?'' பாஸ்கரின் புகைப்படத்தை காண்பித்து, ''அவர் பெரிய பிசினஸ்மேன், கம்பெனி வெச்சிருக்கார். பணக்காரராம்,'' என்றாள், கோகிலா. ''அழகா அம்சமா இருக்கார், கோகிலா. உங்களுக்கு ஏற்ற ஜோடி.''''தேங்க்ஸ்!''போலியோவால் ஒரு கால் சற்றே சாய்ந்து நடக்கும் ரவி, தினமும் ஸ்கூட்டரில் தான் ஆபீஸ் போவான். கோகிலாவுக்கும், ரவிக்கும், ஐ.டி., நிறுவனத்தில் வேலை. வீடும் அடுத்தடுத்த தெருவில். தினமும் வேலைக்கு புறப்படும் ரவியை பார்த்தால், தன் காரில் அழைத்து போவாள், கோகிலா. தன் அம்மாவிடமும், ரவியை பற்றி அடிக்கடி கூறியுள்ளாள். 'அந்த பிள்ள எவ்வளவு நல்லா இருக்கான், கால் தான்... பாவம், விந்தி விந்தி நடப்பதை பார்க்க எனக்கே மனசு வலிக்கிறது...' என்பாள், அம்மா.''அம்மா, ரவியை என் நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிடட்டுமா?'' ''வேண்டாம்மா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏதாவது தப்பா நினைப்பாங்க. கல்யாணம் ஆனதும், உன்னை வேலைக்கு போக வேண்டாம் வீட்டில் இருந்தா போதும்ன்னு சொல்லியிருக்காங்க.''ரொம்ப, 'ஸ்டிரிக்ட்'டான குடும்பம். நீ யாரையும் கூப்பிடாத. உங்கப்பாவிற்கு கோபம் வந்துடும், சில உறவுகள் போதும்மா...'' என்றாள். அம்மா எப்பவும் அப்படித்தான். அப்பாவின் அதிகாரத்திற்குள் தான், அவள் வாழ்க்கை.மறுநாள் மாலை...கம்பீரமான நடை உடையில், மாப்பிள்ளையும், அவன் பெற்றோரும், பெரிய காரில் வந்திறங்கினர்.அப்பா, அம்மா, சித்தி மூவரும் சந்தோஷத்துடன் அவர்களை வரவேற்று, டிபன், காபி சாப்பிட்டு பேச ஆரம்பித்தனர். புகைப்படத்தில் பாஸ்கரை பார்த்ததோடு சரி, இரு தடவை போனில் பேசியிருக்கிறாள்.இன்று, நேரில் கலகலவென பேசிய குடும்பத்தையும், கம்பீரமான மாப்பிள்ளை பாஸ்கரையும் பார்த்து, மனம் கொள்ளா சந்தோஷத்துடன் இருந்தாள், கோகிலா. தட்டு மாற்றி நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. பாஸ்கரும், கோகிலாவும் பேச, மொட்டை மாடிக்கு சென்றனர். ''என்னை பிடிச்சிருக்கா கோகிலா?'' என்றான். கம்பீரம் மற்றும் வசீகரமாக இருந்தது, பாஸ்கரின் குரல். வெட்கத்தில், ''ம்ம்...'' என்றாள்.''உன்கிட்ட ஒண்ணு சொல்லணும், நம் நிச்சயதார்த்தம் ஆனதும் சொல்லலாம் என்று இருந்தேன்.''மெதுவாக அருகில் வந்து அவள் கை பிடித்து, தன் கையுடன் இணைத்தான். கோகிலாவின் உடம்பு சிலிர்த்தது. ''என்னன்னு சொல்லுங்க, பாஸ்கர்?''''அது வந்து... எப்படி சொல்றதுன்னு தெரியல.''''ஏன், என்ன சங்கடம்?''''என் ஆபீஸ், 'ஸ்டெனோ' மேரியை மூன்று ஆண்டுகளாக காதலிக்கிறேன். அவளுக்கும், என் மேல் ரொம்ப ஆசை, காதல். இப்போ அவள், என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி ரொம்ப வற்புறுத்தறா. தினம் தினம் ஒரே போராட்டமா இருக்கு. என் வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க. ஜாதி, மதம், 'ஸ்டேட்டஸ்' பார்க்கிறாங்க.''எங்க காதல் அவங்களுக்கெல்லாம் புரியாது. வீட்டிற்கு ஒரே பிள்ளை. அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு. எல்லாரையும் பகைத்து, அவளை கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. அம்மா - அப்பா தேர்ந்தெடுத்த உன்னை, எனக்கும், என் குடும்பத்திற்கும் ரொம்ப பிடிச்சிருக்கு,'' என்றான், பாஸ்கர்.அவன் பிடித்திருந்த கையை சட்டென உதறினாள், கோகிலா.''சாரி கோகிலா, கோபப்படாத.'' ''உன்னுடன் நிச்சயமானது, மேரிக்கும் தெரியும். மேரிக்கு, எல்லா சவுகரியமும் செய்து கொடுக்க தயார். அவளை நான் ஏமாற்றக் கூடாது.''''அதனால்?''''இந்த விஷயம், நம் மூன்று பேருக்குள் இருக்கட்டும், கோகிலா. நீ என்ன சொல்ற?'' என்றான். பளீரென முகத்தில் அடித்தாற் போல் இருந்தது, கோகிலாவிற்கு.''சரி, பாஸ்கர்... என் பதிலை, நாளைக்கு சொல்லட்டுமா?'' என்றாள்.''டேக் யுவர் ஓன் டைம்... நம் இருவருக்கும் நிச்சயதார்த்தமாச்சு. இன்று முதல், நீ என் மனைவி தான். உன் சம்மதமும் தேவை. நம் மூவரிடமும், இனி ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. உன்னிடம் இதை மறைப்பது துரோகம். அதனால், சொல்லிட்டேன். வா, கீழே போவோம்,'' என்றான், பாஸ்கர்.இவர்கள் இறங்கியதும், விடைபெற்று கிளம்பினர். அன்று முழுவதும் துாக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள், கோகிலா. கல்யாணத்திற்கு தேதி குறிக்க, ஜோசியர் வீட்டுக்கு அம்மாவுடன் புறப்பட, காரை எடுத்துக் கொண்டிருந்தார், அப்பா.''என்ன கோகிலா, ஒரு மாதிரியா இருக்க... என்ன விஷயம்?'' என்றாள், அம்மா.''அப்பா, சித்தியை எப்படி கல்யாணம் செஞ்சுக்கிட்டார்?'' ''அதான் சொல்லி இருக்கேனே, மறந்துட்டியா; அது ஒரு பெரிய கதை... அம்மா இல்லாத நான், உன்னை பிரசவிக்க, உறவுக்கார பெண் வீட்டுக்கு போயிருந்த போது, உங்கப்பாவிற்கு, அந்த உறவுக்கார பெண்ணுடன் பழக்கமாகி விட்டது.''அவளை உருட்டி, மிரட்டியுள்ளார். பிறகு, என்னை சம்மதிக்க வைத்து, அவளையும் கல்யாணம் பண்ணி, கூட்டிட்டு வந்துட்டாரு. எனக்கும், அவளுக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை.''அந்த காலத்தில் சுயமாக சம்பாதித்து சொந்த காலில் நிற்கும் தகுதி இல்லாமல் இருந்தோம், நாங்கள். அதனால், எதிர்த்து நிற்க முடியாமல் போனது. சரி வா, இந்த பழைய கதையை அடிக்கடி என்னிடம் கேட்டுக் கொண்டிருக்காதே,'' என்றாள், அம்மா. ''எப்படிம்மா உன்னால இதையெல்லாம் ரொம்ப சுலபமா எடுத்துக்க முடிஞ்சது?'' ''இதோ பார் கோகிலா, நான் நகை நட்டு போட்டுட்டு, தினமும் பட்டு புடவை கட்டிட்டு பங்களாவில் நல்லாத்தானே வாழ்கிறேன். எனக்கும், உன் சித்திக்கும் ஒரு குறையுமில்லை. ''உங்க அப்பா, உன்னை, 'ஜாம் ஜாம்'ன்னு அருமையான, அழகான பணக்கார மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க போறார். அது, எனக்கு சந்தோஷம்.''உங்க அப்பா செய்த தவறுக்கு, உன் சித்தி எங்க போவாள். தந்தையில்லாத ஏழை அவள்...'' என, அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார், 'ஹாரன்' சத்தம் கேட்டது. ''நானும், அப்பாவும் ஜோசியரிடம் கல்யாண தேதி குறிக்க போயிட்டிருக்கோம். நீ, உன் தோழியுடன் பேச, அவள் வீட்டுக்கு போவதாக சொன்னியே, நான் சாயங்காலத்திற்குள் வந்துடறேன். நீ கிளம்பி, தோழியுடன் பேசிட்டு வாம்மா,'' என்றாள், அம்மா.மறுநாள் காலை ஆபீசுக்கு புறப்பட்டாள், கோகிலா.எதிரில் வந்த ரவி, அவளிடம், ''என்ன கோகிலா, நிச்சயதார்த்தம் ஆச்சா?'' என்றான். ''ரவி, காரில் உட்கார் சொல்றேன்...'' என்றவள், ''ஆச்சு ரவி... நிச்சயதார்த்தம் மட்டும்!'' என்றாள்.''கல்யாணம் எப்போ?''''நீ எப்போ சொல்றியோ அப்போ?''குபீர் என சிரித்து, ''என்ன, நானா... என்ன, விளையாடுறியா? உன் வருங்கால கணவரிடம் தான் கல்யாணம் எப்போன்னு கேட்கணும்? அதுதான் முறை,'' என்றான், ரவி.''ஆமாம் ரவி, அதுதான் முறை. அதனால் தான் உன்னிடம் கேட்கிறேன்,'' என்றாள், கோகிலா.''அய்யய்யோ...'' என்றான்.''உனக்கு ஓ.கே.,வா? ஒரு வரியில் எனக்கு பதில் சொல்லு, ரவி,'' என்றாள்.''ஐயோ, உன்னைப் போல் தங்கமான பெண்ணை மணக்க கசக்குமா? என் மனதில் ஒரு ஓரத்தில் நீ இருக்கிறாய். ஆனால், உன்னிடம் சொல்லலை. அது எனக்கு மட்டுமே தெரிந்த ஒருதலைக் காதல்!''''என்ன, ஒருதலைக் காதலா? என்னிடம் சொல்லி இருக்கலாமே ரவி,'' என்றாள்.''இல்லை கோகிலா. வேறு ஒருவருடன் நிச்சயமாகும் பெண்ணை மனதால் நினைப்பது கூட துரோகம். சாரி, நீ கேட்டதால் சொல்லிட்டேன்,'' என்றான், ரவி.''சரி... நாளை பேசலாம்,'' என்றாள், கோகிலா.வீட்டுக்கு வந்த கோகிலாவின் மனம் முழுக்க, ரவி நிறைந்தான்.'மனசு ஊனமான யாரோ ஒருவருடன் முக்கோண வாழ்க்கை வாழ்வதை விட, உடல் ஊனமுடன் இருப்பவருடன் வாழ்வதே மேல்...' என்ற முடிவுக்கு வந்தாள், கோகிலா. மறுநாள் மாலை - கையில் சிகரெட்டுடன், கால் மேல் கால் போட்டபடி, பூங்காவில் கோகிலாவின் வருகைக்காக காத்திருந்தான், பாஸ்கர். துாரத்தில், அவளை பார்த்ததும், அவன் மனம் துள்ளியது.'அப்பாடி... நேற்று, மேரியிடம் பேசி, கோகிலாவின் விஷயம் சொல்லி, 'பர்மிஷன்' வாங்கியாச்சு. அவளுக்கும் என்னை விட்டா வேறு வழியில்லை. கோகிலாவுடன் நிச்சயதார்த்தமும் நன்றாக முடிந்தது.'அம்மா, அப்பா இஷ்டத்துக்காகவும், குடும்பத்திற்காகவும் கோகிலாவை கல்யாணம் செய்து கொள்ளலாம். கோவாவுக்கு போய், சர்ச்சில், 'ரிங்' மாற்றி, மேரியை கல்யாணம் செய்து கொள்ளலாம். பணம், வீடு, ஆஸ்தி என, எல்லாவற்றிக்கும் நான் ஒருவனே வாரிசு!'அப்பா - அம்மா மனமும் சந்தோஷப்படும். என்னுடன் வாழப்போகும் இருவரிடமும் உண்மையை சொல்லியாச்சு. இனி எந்த பிரச்னையும் இல்லை. ரெண்டு பொண்டாட்டி ஒன்றும் புதுசில்லையே?' பாஸ்கரின் மனம் கணக்கிட்டது. ''ஹாய் கோகிலா... வா, உட்கார். கல்யாண தேதி குறிக்க போறதா சொன்னாங்க, ஆன்ட்டி. தேதி குறிச்சாச்சா, எப்போ கல்யாணம் வச்சுக்கலாம், டியர். உனக்கு சம்மதம் தானே?'' என்றான், பாஸ்கர்.''முழுச் சம்மதம் பாஸ்கர்,'' என, அழகு தேவதையாய் எதிரில் நின்ற கோகிலா சொன்னதும், 'ஜிவ்'வென சந்தோஷ வானில் பறந்தான், பாஸ்கர்.''ஆனால், ஒரு நிபந்தனை, பாஸ்கர்.''''நிபந்தனையா... சொல் கோகிலா. மேரிக்கும், உனக்கும், வேற வேற வீடு வேணுமா? 'அரேஞ்ச்' செய்கிறேன். என்ன வேணும் சொல், உனக்காக எதை செய்யவும் நான் தயார். பங்களா, கார், நகை எல்லாம் உங்க இருவருக்கும் சமம். இது, நம் மூவருக்கும் தெரிந்த ரகசியமாக இருக்கட்டும்,'' என்றான், பாஸ்கர்.''ஆமாம், இப்ப நான் சொல்வதும் ரகசியமாக இருக்கட்டும்,'' என்றாள், கோகிலா.''என்ன, கோகி!''''நீங்க சம்மதிச்சா, ரவியும், நீங்களும், நானும் ஒரே வீட்டில் இருக்கலாம். ரெண்டு பொண்டாட்டி பழசு தான். ஆனால், ரெண்டு புருஷன் புதுசாக, ரகசியமாக இருக்கட்டும்... என்ன சொல்கிறீர்கள் பாஸ்கர்?'' என, மெதுவாக, ஆணித்தரமாக அவன் முகம் பார்த்து கேட்டாள், கோகிலா. ''என்ன?'' சட்டென்று எழுந்த பாஸ்கரின் முகம், ரத்தமாக சிவந்தது. ''நீ, திமிர் பிடிச்சவ,'' எனக் கூறி, மடமடவென காரில் ஏறி போனவனை, புன்முறுவலுடன் பார்த்தாள், கோகிலா.போன் சிணுங்கியது. ''ஹலோ மேரி, நானே உனக்கு போன் செய்ய நினைத்தேன். பாஸ்கர் உன்னைத் தேடி வரான்,'' என்றாள், கோகிலா.''வரட்டும், கோகிலா. என் அத்தை பையன், பீட்டருடன் அவனை சந்திக்கிறேன். அதை சொல்லத்தான் உனக்கு போன் செய்தேன். நாம் பேசியபடி இன்று பாஸ்கரிடம், சாரி, அந்த ராஸ்கலிடம் பேசப் போகிறேன்... ''நிச்சயமான கோகிலாவுடன், நீ கல்யாணம் பண்ணி வாழ்ந்துக்கோ, பாஸ்கர். நாளை, சர்ச்சில், எனக்கும், பீட்டருக்கும் கல்யாணம்ன்னு, சொல்றேன்,'' என்றாள், மேரி. ''தேங்க்யூ மேரி, நம் இருவரைப் போல் கூடிப் பேசி ஒன்று பட்டால், ரெண்டு கல்யாணம் மட்டும் இல்லை, இரண்டு காதலில் சவாரி செய்யும் பல ஆண்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கலாம்,'' எனக் கூறி, மனதில் நிம்மதியுடன் நிமிர்ந்து நடந்தாள், சிங்கப்பெண் கோகிலா. ராதா நரசிம்மன்இயற்பெயர்: சம்பூர்ணம்வயது: 65படிப்பு: பி.யூ.சி., பணி: பாரத் எலக்ட்ரானிக்ஸ் - 'பெல்' நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சொந்த ஊர்: மாயவரம்.இவரது கதை, கட்டுரைகள், தமிழின் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகளுக்காக, பல பரிசுகளையும் பெற்றுள்ளார். திரைக்கதை எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.கதைக் கரு பிறந்த விதம்: சிறு வயதில் நான் கேள்விப்பட்ட நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை இது. முடிவு மட்டும் மாற்றப்பட்டது. உண்மைக்கு மாறாக, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து மாற்றி எழுதினேன்.