இது எங்கள் தவறா?
சில்லென்ற காற்று தலையை வருடி, வருணின் மனதிற்கு புத்துணர்ச்சியை அளித்தது. தன் 27 ஆண்டு வாழ்க்கையை, திரும்ப மெல்ல அசை போட்டான். பல நிகழ்ச்சிகள், அனுபவங்கள், உதாசீனங்கள், வெற்றிடங்கள் மற்றும் தோல்விகள்; முடிவாய் சில சாதனைகள், திரையாய் ஓடி ஒளிந்தன.'டிஸ்லெக்சியா' எனும் கற்று கொள்ளும் திறன் கோளாறால், தன், ஐந்து வயதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, மன ரீதியான ஏற்றத் தாழ்வுகளை, அவமானங்களை, உதாசீனங்களை எதிர் கொண்டான். ஒரு தனி மனிதனாய், உணர்வுகளில் பிணைந்து வீழ்ந்து எழுந்த வருணின் வாழ்க்கை, ஒரு சிறிய பிளாஷ் பேக்...அம்மா மைத்ரேயி, நல்ல குடும்பத்தில் பிறந்து, பல திறமைகளை பெற்று, சிறந்த குடும்ப தலைவியாக இருந்தார். அப்பா அசோக், ஆடிட்டர். மிகவும் கண்டிப்பு, ஒழுக்கம் மிக்கவர். அக்கா மாலினி, சில நேரங்களில், தன் அன்பை, உரிமையாய் பரிமாறுவாள்; அதிக அளவில் ஏவுகணைகளையும் வீசுவாள்.'வருண் எழுந்துக்கோ...' கண்டிப்பான குரல், சுரீரென்று காதில் விழுந்தது.அசைவற்ற நிலையில், காதில் விழாதது போல் படுத்திருந்தான், வருண்.'எழுந்துக்கோ வருண்... எத்தனை முறை கூப்பிடறது? புக்ஸ் எல்லாத்தையும் எடுத்து வை, இன்னும் அரை மணியில் ஸ்கூல் கிளம்பணும்...'ஸ்கூலுக்கு போக பிடிக்காததை, அம்மாவிடம் எப்படி சொல்வது. படித்து, ஒப்பித்து, எழுத சொல்வர். தினமும் சாயங்காலம் உட்கார்ந்து, 'படி படி' என்று அம்மா சொல்லும் போது, மண்டையெல்லாம் வலித்தது.'வருண், எழுந்துக்கோ. வாழ்க்கையில் படிப்பு ரொம்ப முக்கியம். படிச்சாலே வேலை கிடைக்கிறது கஷ்டம், படிக்கலைன்னா உருப்பட முடியாது...'பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், 'வருண், 'ஹோம் ஒர்க்' முடிச்சியா. கொண்டு வா பார்ப்போம்...'நோட்டை எடுத்து, ஆசிரியரிடம் காண்பிக்க, 'என்ன இப்படி கிறுக்கி வச்சிருக்கே. வகுப்பிற்கு வெளியில் போய் நில்...'சக மாணவர்கள் அனைவரும் வருணின் முகத்தையே பார்த்தனர்.அந்த வகுப்பு முடியும் வரை, எதுவும் நடக்காதது போல் வெளியில் நின்றான். கால் வலித்தது.'எதுக்கு என்னை படிக்க சொல்றாங்க. என்னால பதில் சொல்ல முடியலை. 'ஸ்பெல்லிங்' மறந்து போகுது. படி... படி... ஏன் எல்லாரும் இதைப் பத்தியே என்கிட்ட பேசறாங்க...''வருண், உள்ளே வா...' அழைத்தார், ஆசிரியர்.ஸ்கேலால் இரண்டு கையிலும் அடித்து, 'நாளையிலிருந்து ஒழுங்கா முடிக்கணும் சரியா, போய் உட்கார்...'மாலை வேளையில், அரை மணி நேரம் விளையாட விடுவாள், அம்மா. பக்கத்து வீட்டு சுரேனுடன் கிரிக்கெட் விளையாடுவான். ஒரே குஷி தான்.'வருண் வா...' கூப்பிட்டாள், அம்மா.ஒருநாள், வருணுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் போது, ஒவ்வொரு வார்த்தையையும், 10 தடவை எழுத சொன்னாள், அம்மா.ஒவ்வொரு முறையும் ஏதாவது தவறு செய்வான். பொறுமையிழந்து, முதுகில் ஒரு அடி வைத்தாள், அம்மா.'அம்மா, அடிக்காதீங்க; வலிக்குது...''நான் சொல்றதை கேள். அம்மா தானே அடிச்சேன்; இனிமே அடிக்க மாட்டேன். வா வருண், நீ என் செல்லம்...'ஒருநாள், குடும்பத்தில் திடீர் அதிர்ச்சி கலந்த மாற்றம். அப்பாவிற்கு வயிற்றில், 'கேன்சர்' என, டாக்டர் சொல்ல, சோர்ந்து போயிருந்தார், அப்பா. வருணுக்கு ஒன்றும் புரியவில்லை.அப்பாவிற்கு ஆபரேஷன். பாவம், இரண்டு மாதம் படுத்த படுக்கை.'வலிக்குதா அப்பா... உனக்கு ஏதாவது வேணுமா?''இல்லை வருண். நீ, நல்லா படிக்கணும்; அது தான் என் ஆசை...''சரிப்பா...'ஒரு மாதம் ஓடியது. தன் மன உறுதி மற்றும் மருத்துவர்களின் சிகிச்சையால் நோயிலிருந்து மீண்டு வந்து, பணியை தொடர்ந்தார், அப்பா. அந்த குடும்பத்தில், கடவுள் மற்றுமொரு சோதனையை எடுத்து வைத்தார்.அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அப்பா.படுத்த படுக்கையானாள். அம்மாவிற்கு, உணவு குழாயில், 'கேன்சர்' என, கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி, ஒருநாள் தன் கண்களை மூடினாள், அம்மா.உலகமே இருண்டது, வருணுக்கு. 'வருண், எழுந்துக்கோ. நீ தான் காரியம் செய்யணும்....' என்றனர், வந்தவர்கள்.தீ சட்டியை கைகளில் ஏந்தி, மயானத்திற்கு சென்றான். 'என்னோட அம்மா... அம்மா... நீ, இனிமே ஸ்கூலுக்கு வர மாட்டியா? நான் நல்லா படிக்கறேன் அம்மா...' என, அழுதபடியே கூறினான்.எல்லாம் முடிந்தது. மீண்டும் வீட்டில் பல மாற்றங்கள். வருணுக்கு ஒன்றும் புரியவில்லை. 'வருண், வா... நல்லா படிக்கணும். அப்பதான் வாழ்க்கை நல்லா இருக்கும், சரியா...' அம்மாவின் பங்கை எடுத்துக் கொண்டார், அப்பா.'எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். 'கோச்சிங்ல' சேர்க்கறீங்களா அப்பா...''சரி, சேர்த்து விடறேன்...'கிரிக்கெட் கோச்சிங் வகுப்பில் சேர்ந்தான். சிரிப்பு, அழுகை, பயம் மூன்றும் மாறி மாறி உணர்வுகள். ஒருமுறை கண்ணில் பந்து விழுந்து அடிபட்டது. வலி தாங்க முடியவில்லை. 'டேய் மக்கு, ஒழுங்கா ஆடுடா. பேக்கு மாதிரி ஆடற...' 'அப்பா... பந்து கண்ணில் பட்டு வலிக்குது. எல்லாரும் என்னை, 'மக்கு பேக்கு'ன்னு சொல்றாங்க...''சரியாயிடும், நல்லா விளையாடு. நான் இருக்கேன், பார்த்துக்கிறேன்...'கோச்சிங் சென்டரில் ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியில், ஆறு சிக்சர் அடித்து, சிறந்த விளையாட்டு வீரனாய் தேர்ந்தெடுக்கப்பட்டான், வருண்.நண்பர்களிடம் காண்பித்தான். அனைவரும் வாழ்த்துக்கள் கூறினர்.மனம் சந்தோஷமாய் இருந்தது. கோப்பையை கைகளில் ஏந்தி, வீட்டில் கொண்டு வைத்தான்.அம்மாவின் புகைப்படத்திற்கு அருகே நின்று, 'அம்மா, நான் ஜெயிச்சுட்டேன். இங்கே பாரும்மா...'ஒரு வழியாய், பிளஸ் 2 வகுப்பில், 42 சதவீதம் எடுத்து, தேர்ச்சி பெற்றான். அப்பாவின் ஊக்கத்தில் படித்து, பாஸ் செய்ததில் மகிழ்ச்சி தான். இனிமேலும் படிக்க சொல்லுவாங்களா? 'அப்பா... வேண்டாம்ப்பா, நான் படிக்கலை...''பிடிக்கலைன்னா, உனக்கு யாரு சோறு போடுவாங்க, வருண்? நீ, இனிமே ஹாஸ்டலில் தான் இருக்கணும். உன்னை, 'லா காலேஜ்'ல் சேர்க்க போறேன். இன்னும் ரெண்டு நாளில் நான் கொண்டு விடறேன். ஐந்து ஆண்டுகள் நீ படிக்கணும்.'பணம் கட்டியாச்சு, நான் அடிக்கடி உன்னை வந்து பார்த்துக் கொள்வேன். நல்லா சாப்பிடு, நல்லா படி. போயிட்டு வரேன்...' கைகளில் முத்தமிட்டு, தோளில் தட்டிக்கொடுத்து கிளம்பினார், அப்பா. விடுதி நண்பர்களான, அரவிந்த், பாஷா, சுசில் மற்றும் கிருஷ்ணாவுக்கு, ஒரு, 'ஹாய்' சொன்னான். 'என் பெயர், வருண். சென்னையிலிருந்து வரேன். வாங்க எல்லாரும் நண்பர்களாய் பயணிப்போம்...' என்றான்.ஒருநாள்-'யாரு இங்கே வருண்... வீட்டிலிருந்து போன் வந்துருக்கு, உங்க அப்பா இறந்துட்டாராம்...' என்றார், ஹாஸ்டல் வார்டன்.சென்னை வந்தான். எல்லாரும் அழுது கொண்டிருந்தனர். இரண்டாம் முறையாய் தீ சட்டியை கைகளில் ஏந்தி, மயானம் சென்றான். இறுதி காரியங்களை செவ்வனே முடித்தான்.மறுபடியும் கல்லுாரிக்கு பயணம்.'நல்லா படிக்கணும்; கண்டிப்பா படிப்பேன். நான் உருப்படுவேன். அம்மா - அப்பா சொன்னபடி படிப்பேன்...' என, மனதில் உறுதி ஏற்றான்.முதல் ஆண்டு தேர்வு எழுதினான். தோல்வி. அடுத்த முறை எழுதி, தேர்வானான். அப்போது தான், அப்துல்லா எனும் ஆசிரியர், வருணுக்கு நட்பானார்.'வருண், நான் உன்னோடு இருக்கேன். நான் சொல்றபடி நீ செய்தால் போதும். நான் உன்னை வளர்க்கிறேன். ஒழுங்கா சாப்பிடு. மனசை தளர விடாதே...' என்று, ஊக்கப்படுத்தினார்.முதல்முறை அன்பின் பரிமாற்றத்தால், கண்களில் கண்ணீர் வந்தது. 'எனக்கு தெரியும், உன் கஷ்டங்கள், 'டிஸ்லெக்சியா' எனும் கற்று கொள்ளும் திறன் குறைவால், நீ கஷ்டப்படுவது புரிகிறது. இது ஒரு கோளாறு அல்ல. சில விதிமுறைகளை, சில படிப்பு முறைகளை கடைப்பிடித்தால், நீயும் மேலே உயரலாம்; வானில் பறக்கலாம். 'என்னுடன் பயணி, உன்னுள் புதைந்திருக்கும் அறிவாற்றலை வெளிக்கொண்டு வர, ஒரு கருவி என்னிடம் உள்ளது. நான் ஒரு சில வார்த்தைகளை உச்சரிக்கும்போது என்னை கவனி. சத்தம் போட்டு படி, புரிந்து கொண்டதை மறுபடி எழுது.'தினமும் ஒரு மணி நேரம் உன்னோடு உட்காருகிறேன்... உன்னால் முடியும், நீ சாதிக்கப் பிறந்தவன்...' என்று கூறி, நம்பிக்கை ஊட்டினார். ஐந்து ஆண்டுகளை கடந்தான். வருண், இப்போது ஒரு வக்கீல்.'அம்மா, அப்பா நான் பாஸ் பண்ணிட்டேன். நான் உருப்பட போறேன்...' என, மனதார வேண்டினான்.தன் பழைய நினைவுகளிலிருந்து மீண்டான், வருண்.அன்று, இவனை போன்று, 'டிஸ்லெக்சியா' குறையுள்ள ஒரு மாணவனுக்காக, நீதிமன்றத்தில் வாதாடும் வாய்ப்பு கிடைத்தது.நீதிமன்றத்தில், தன் வாதத்தை வலிமையுடன் எடுத்து வைத்தான், வருண்...''யுவர் ஹானர்... படித்து, புரிந்து கொள்ள முடியாத கோளாறால், தேர்வில் தேர்ச்சி அடையாமல், மன உளைச்சலுக்கு ஆளான இந்த மனுதாரரின் வழக்கில், என்னுடைய வாதம் என்னவென்றால்...''மனுதாரர் தன்னுடைய உணர்வுகளின் வலிகளை தெள்ளத் தெளிவாய் எடுத்து சொல்லி இருக்கிறார். அவரிடம் சாட்சிகள் இருக்கிறது. உண்மை இருக்கிறது.''மூளை செயல்பாட்டின் ஏற்ற தாழ்வுகளால், பல சவால்களை எதிர் கொள்ளும் குழந்தைகளின் மன நிலைக்கேற்ப பாட திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அவர்களுக்கு மன ரீதியான ஆதரவு அளிக்கப்பட வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.''நீதிபதி அவர்களே... இந்த வழக்கிற்கு நடு நிலையோடு ஒரு நடுத்தரமான தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே, என் வாதம்,'' என்று கூறி, அமர்ந்தான்.வருணின் வாதத்தை கேட்ட நீதிபதி, அவனது கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைப்பதாக கூறி, வழக்கை முடித்து வைத்தார்.'பெற்றோர்களே... குழந்தை வளர்ப்பில், அவர்களுக்காக அதிக நேரம் செலவிடுங்கள்; உங்கள் பணத்தை விட...' என்ற வாசகம் பொரித்த அட்டை, வருணின் அறையில் கம்பீரமாய் தொங்க விடப்பட்டிருந்தது.என். கிருபாவயது: 59கல்வி தகுதி: பி.எஸ்சி., சி.ஏ.ஐ.ஐ.பி., பி.ஜி., டி.பி.ஏ.,பணி: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில், துணை மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். இவரது படைப்புகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். நிறைய எழுதி, மக்கள் மனதில் கலை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக் கரு பிறந்த விதம்: மகனின் நண்பன் ஒருவன், கற்றல் குறைபாட்டால் எதிர்கொண்ட சவால்களை கண்ணுற்றதில் பிறந்தது, இக்கரு. எந்த கேள்விக்கும் பதில் உண்டு, எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பதை சுட்டிக் காட்ட, எழுதப்பட்ட கதை.