உள்ளூர் செய்திகள்

நாட்டைக் காப்பாற்றுவோம்!

தேச பக்தி உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் தங்களால் இயன்ற அளவு பாடுபட்டு, நாட்டைக் காப்பாற்றப் போராடுகின்றனர், அதில் வெற்றியும் பெறுகின்றனர்.அவ்வாறு வெற்றி பெற்ற ஒரு வரலாறு இது; 16ம் நுாற்றாண்டில் நடந்தது.சிவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், சின்ன சிவப்ப நாயக்கர் எனும் மூவரின் ஆட்சியில், தஞ்சாவூர் இருந்த காலம். தென் மண்டலம், இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.அந்த நேரத்தில், யவனர்கள், வடக்கிலிருந்து தெற்காக ஊடுருவத் துவங்கினர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, தஞ்சை நாயக்கர்கள், பெரும் படையுடன் வடதிசை நோக்கிப் பயணப்பட்டனர். தஞ்சை பாதுகாப்பற்றதாக ஆனது.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, யவனக் குதிரைப்படை ஒன்று, கும்பகோணத்தில் முற்றுகையிட்டு ஊடுருவியது. நகரத்தில் அங்கும் இங்குமாக, யவனர்களின் குதிரைகள் வெறி பிடித்தாற்போல அலைவதைக் கண்டு, மக்கள் நடுங்கினர். கும்பகோணத்தில் இருந்த, மகான் ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகளிடம் சரணடைந்து, காக்குமாறு வேண்டினர்.'பகவான் அருளால் நாம் வெல்வோம், கவலைப்படாதீர்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறேன். வாருங்கள்...' என்று, ஆறுதல் சொன்ன ஸ்ரீ சுவாமிகள், மடத்தின் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்.அங்கே, ஆயிரக்கணக்கான தேங்காய்கள் இருந்தன. மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'இந்த தேங்காய்களை எல்லாம் எடுத்துச் செல்லுங்கள். இன்றிரவு, யவனர்கள் நம் கோவிலைத் தாக்க வருவர். அவர்கள், கோபுர வாசலை நெருங்கும் போது, தேங்காய்களை ஒவ்வொன்றாக, சிதறுகாய் போல உடையுங்கள். 'இன்று ஒருநாள் தாக்குப்பிடித்தால், நாளை காலை தஞ்சை மன்னர்கள் வந்து விடுவர்...' என்றவர், தேங்காய்களின் மீது மந்திர அட்சதை தெளித்து, ஜபம் செய்து, அவற்றை எடுத்துப் போக சொன்னார், ஸ்ரீ சுவாமிகள்.தேங்காய்களை எடுத்துப் போன மக்கள், ஸ்ரீசாரங்க பாணி கோவில், ஸ்ரீராமன் கோவில் மற்றும் ஸ்ரீ ஆதி கும்பேசுவரர் கோவிலின் கோபுர வாசலில் காத்திருந்தனர்.குதிரைகளின் மீதேறி யவனர்கள், கோவில் வாசலை நெருங்கியபோது, ஆங்காங்கே தயாராக இருந்த அடியார்கள், ஸ்ரீசுவாமிகளை தியானித்து, ஒவ்வொரு தேங்காயாக எடுத்து, சிதறுகாய் போல் உடைத்தனர்.குதிரை வீரர் ஒவ்வொருவருக்கும், தலை தெறிப்பதைப்போல இருந்தது. தலை சுற்றிக் கீழே விழுந்த அவர்கள், சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து ஓடினர். கோவில்களும், நாடும் காப்பாற்றப்பட்டன.மறுநாள் காலையில், தஞ்சை மன்னர்கள், திரும்பி வந்து, ஸ்ரீசுவாமிகளை பணிந்து, நன்றி தெரிவித்தனர். நாட்டையும், கோவில்களையும் கட்டிக் காத்த ஸ்ரீசுவாமிகளின் சீடர், ஸ்ரீசுதீந்திரர். சுதீந்திரரின் சீடர் தான், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்.இவ்வாறு நம்மைக் காக்கும் பொறுப்பு கொண்டவர்கள் சொல் கேட்டு, அதன்படி நடந்தால், நாம் நலம் பெறுவோம்; வீடும் நலம் பெறும்; நாடும் நலம் பெறும்!ஆன்மிக தகவல்கள்!* சுப்ரபாதத்தை, தினமும், காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்* நிவேதனம் செய்த தேங்காயை, சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !