உள்ளூர் செய்திகள்

திண்ணை!

மறைந்த மூப்பனாரின் பிறந்தநாள் விழா, 2001ல் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவை ஏற்பாடு செய்திருந்த பீட்டர் அல்போன்ஸ், 80 ஏழைகளுக்கு திருமண ஏற்பாடு செய்து, மணமக்களை வாழ்த்த வருமாறு, மூப்பனாரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.மணமக்களை வாழ்த்த, வ.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவும் வந்திருந்தார். நல்ல கண்ணு, மூப்பனாரை மேடையில் சந்தித்தவுடனேயே, மூப்பனாரின் கரங்களைப் பற்றியபடி, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.'உங்களுக்கு வயது என்ன?' என்று, நல்லகண்ணுவிடம் கேட்டார் மூப்பனார். 'உங்களை விட இரண்டு வயது பெரியவன்...' என்றார் நல்லகண்ணு. அடுத்த கணம், மூப்பனார் தன் தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டி, நல்லகண்ணுவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, தன்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டார். பதறிப் போன நல்லகண்ணு, மூப்பனாரைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டார். அரங்கமே இந்தக் காட்சியைப் பார்த்து, கண் கலங்கி நின்றது.— பசுமை குமார் எழுதிய 'தோழர் ஆர்.என்.கே.,'என்ற நூலிலிருந்து.தென்னங்கன்றுகள் நன்றாக ஓங்கி வளர்ந்த பின்னும், அதாவது, பத்து ஆண்டுகள் கழித்தும் காய்க்கவில்லை என்றால், அந்த மரங்களுக்கு, உலக்கை பூஜை நடத்தினால், நன்றாக காய்க்க ஆரம்பிக்கும். வெகுநாட்கள் காய்க்காத மரம் எதுவென்று தெரிந்து, அந்த மரத்தை உலக்கையைக் கொண்டு, நன்றாக அடிக்க வேண்டும்.மரத்தின் அடிப்பக்கம், சுமார் மூன்று அடி உயரம் வரை சுற்றிச் சுற்றி வந்து, ஐம்பது அடியாவது அடிக்க வேண்டும். அதன்பின், உலக்கையின் பூண் சேர்க்கப்பட்ட பக்கத்தை கொண்டு, ஓங்கி ஓங்கிக் குத்த வேண்டும்.உலக்கையின் பூண், மரத்தின் மேல், வட்ட வட்டமாக காயம் உண்டாக்க வேண்டும். அந்த அளவிற்கு அடிக்க வேண்டும். இவ்விதம், மூன்று தினங்களுக்கு ஒரு தரம், ஐந்து முறை செய்தால் போதும். அந்த மரம் நன்றாக காய்க்க ஆரம்பிக்கும்.— ஆசைராஜா எழுதிய, 'தென்னைமரம்' என்ற நூலிலிருந்து.இருபது ஆண்டுகளுக்கு முன், புரட்சி கவிஞர் பாரதிதாசனின் தமிழ்த் தொண்டை பாராட்டும் விதமாக, விழா நடத்தி, ௨௫ ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்தேன். விழா முடிந்ததும், அவரை வீடு வரை கொண்டு விடுவதற்கு நானும், அவரும் ஒரு குதிரை வண்டியில் ஏறி, அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணிக்கு சென்றோம். வண்டியில் போய் கொண்டிருந்த பாரதிதாசன், என்னிடம், 'நீ கொடுத்திருக்கிற இந்தப் பணத்தை வைத்து, நாம் தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி துவக்கி நடத்துவோம்...' என்றார்.அந்த நேரத்தில், எனக்கும் ஈ.வெ.ரா.,விற்கும் மனத் தாங்கல். அதுபோலவே, பாரதிதாசனுக்கும், ஈ.வெ.ரா.,விற்கும் மனத் தாங்கல் இருந்தது. இதை மனதில் வைத்துதான், கட்சி நடத்தும் யோசனை இவருக்கு வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். 'ஐயா... நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம். கவிதை உலகத்திலே உங்கள் உயரத்துக்கு, எந்த அரசியல்வாதியும் வர முடியாது. அரசியல்வாதிகளின் மத்தியில் இருந்து, கவிதை எழுதுவது என்றால், அது, அரசியல் கவிதையாகத் தான் இருக்கும். அதற்கு, வயது ஆறு மாதமாகத் தான் இருக்கும். உங்களுக்கு கொடுத்திருக்கிற இந்தப் பணத்தை வைத்து, இந்தியாவிலுள்ள பெரும் மலைப்பகுதி, நதி தீரங்களுக்கு போய் வாருங்கள்; வந்து, உங்கள் அனுபவத்தை கவிதை வடிவிலே கொடுங்கள்...' என்றேன்.-- பாரதிதாசன் படத்திறப்பு விழாவில், அண்ணாதுரை பேசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !