உள்ளூர் செய்திகள்

திண்ணை!

எஸ்.ஜி.கிட்டப்பா, வீணை தனம்மாள், திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை போன்ற சங்கீத மேதைகளுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர், இசை விமர்சகர், தா.சங்கரன் தன், 'இசை மேதைகள்' என்ற நூலில், 'ராஜரத்னம் பிள்ளை' பற்றி கூறியிருப்பது:ராஜரத்னம் பிள்ளை ஒரு தனிப்பிறவி. சுகபாவத்தின் சிகரம்; பெருமித குணம் கொண்டவர். கொட்டை கொட்டையாக இவர் எழுதும் எழுத்துக்களே அரைப்பக்கம் நிரம்பி விடும். லெட்டர் பேடு கூட வால் போஸ்டர் மாதிரி தான் இருக்கும். அதைப் போடும் கவர், 15 அங்குல நீளத்தில் இருக்கும். எடைக்கு ஏற்ப ஸ்டாம்ப் என்பதால், தபால் இலாகாவுக்கு நல்ல லாபம்.கவரின் மேல் அச்சிடப்பட்டுள்ள, 'நாதஸ்வர சக்கரவர்த்தி; அகில உலக இசை ஜோதி!' - அவர் பெற்றுள்ள பட்டம், பதவிகளும் கொஞ்சமும் இளைத்தவையல்ல; ரொம்பவும் பொருத்தமான பட்டங்களும் கூட! 'பெரிய ரதம் போன்ற மோட்டார் கார்; கேலன் பெட்ரோலுக்கு எட்டு மைலுக்கு மேல் ஓடாது. கச்சேரிகளுக்கு செல்லும் போது, பக்கவாத்திய பரிவாரம், குடும்பம், சகலமும் அந்தக் காரில் அடங்கி விடும்.காதுகளில், மோட்டார் ஹெட் லைட்டுக்கு சமமான வைரக் கடுக்கண்கள்; ஜரிகை மயமான ஆடை, பட்டுச்சட்டை. சில சமயங்களில், கழுத்து முதல் பாதம் வரை கவுன் போன்ற ஆடையையும் அணிந்து கொள்வார். செட்டிலுள்ள பையன்களும் ஆடம்பரமாகத் தான் இருப்பர்.பொடி டப்பி! பெயர் தான் பொடி டப்பி. வெள்ளியும், பொன்னும் கலந்த அந்த பொடி டப்பி, பார்க்க டிரங்க் பெட்டி போன்று தோன்றும். வெற்றிலை பெட்டியோ ஒரு கூட்ஸ் வண்டி போன்றும் இருக்கும். கூஜாவோ வெள்ளி டாங்க்!இவ்வளவையும் தூக்கியபடி, முதல் வகுப்பு ரயில் பயணம்! 'இதுவரை ஒரு மேளக்கார பயலும் செய்யாததை எல்லாம் செஞ்சுட்டேனுங்க...' கலையில் சிகரத்தை அடைந்தவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் பெருமிதம்! ஜி.ஆளவந்தார் எழுதிய, 'மாவீரன் திப்பு சுல்தான்' நூலிலிருந்து:பேரரசர் அவுரங்கசீப், 1707 மார்ச் மாதத்தில் காலமானார். சக்கரவர்த்தி இறந்தவுடன், பேரரசு சின்னாபின்னமாயிற்று. அவுரங்கசீப்புக்கு மூன்று மகன்கள்; மூத்தவன், தன் இரு தம்பிகளையும் கொன்று, பகதூர்ஷா என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார். இவர், ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு பின்,1712ல் காலமானார். இவருடைய நான்கு மகன்களுக்கிடையே, அரச பதவிக்கு போட்டி!மூத்தவன் ஜஹந்தர்ஷா, தன் மூன்று தம்பிகளையும் கொன்று, அரசனானான். இவனுடைய ஆட்சி ஒரு சில மாதங்களே நீடித்தது. அவனால் கொலை செய்யப்பட்ட ஒரு தம்பியின் மகன் பரூக் என்பவன், ஜஹந்தர்ஷாவை சிம்மாசனத்திலிருந்து கீழே இறக்கி, செருப்புக் காலால் உதைத்தே கொன்றான். 1713ல் அரசனான பரூக், ஆறு ஆண்டுகள் தான் பதவியில் நீடித்தான்.சையத் சகோதரர்கள் இவனைப் பதவியிலிருந்து இறக்கினர். அரச சபையில் சிற்றரசர்களின் முன்னிலையிலேயே ஒருவன், பரூக்கை மயிலாசனத்திலிருந்து கீழே தள்ளி, அவன் மார்பின் மீது உட்கார்ந்து, கத்தியால் கண்களை தோண்டி எடுத்து, தரதரவென்று இழுத்துச் சென்று கேவலமான முறையில் கொன்றான். இதன்பின், சையத் சகோதரர்கள், பகதூர்ஷாவின் இரு பேரன்களை ஒருவர் பின் ஒருவராக சிம்மாசனத்தில் பொம்மைகளை போல் அமர்த்தினர்.ஒரு சில மாதங்களுக்கு தான் இக்கூத்து; இரு அப்பாவி மன்னர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். பகதூர்ஷாவின் மற்றொரு பேரன் முகம்மது ஷா, 1719ல் அரியாசனம் ஏறினான். இவன் சதி திட்டம் தீட்டி சையது சகோதரர் இருவரையும் கொன்றான்.இத்தோடு முகலாயர் வம்சம் அழிந்தது. அடுத்து, பாரசீக மன்னன் படையெடுத்து வந்து, கொள்ளையடித்து சென்றான். அவன் போன கையோடு, கிழக்கிந்திய கம்பெனியார் இங்கிலாந்திலிருந்து வந்து, இந்தியாவை பிடித்துக் கொண்டனர்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !