உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பி.எல்.ராஜேந்திரன் எழுதிய, 'தெரிந்தவர்கள் தெரியாதவர்கள்' நூலிலிருந்து:ஒருமுறை, கச்சேரி ஒன்றில் வாசித்துக் கொண்டிருந்தார், நாதஸ்வர கலைஞர், ராஜரத்தினம் பிள்ளை. சில ராகங்களை இசைத்து விட்டு, சீவாளியை சரி செய்த பின், தோடியில் பாட, அவர் பல்லவியை எடுத்தபோது, 'சபாஷ்' என்றொரு குரல் கேட்டது.அங்கே நின்ற பெட்ரோமாக்ஸ் லைட் துாக்கும் ஒருவனிடம், திரும்பி பார்த்து, 'யார், நீயா சபாஷ் போட்டது...' என்றார்.அந்த ஆள் பணிவோடு, 'ஆமாங்க ஐயா...' என்றான்.'ஏன் அப்படி சொன்னாய்...' என்றார்.'தோடியில் வாசிக்கப் போகிறீர்களே. அதற்காக தான்...' என்றான்.'தோடி உனக்கு தெரியுமா...' என்றார், டி.என்.ஆர்.,'உங்கள் கச்சேரிக்கெல்லாம் லைட் துாக்கி துாக்கி, எனக்கு ராகம் பழகி விட்டதுங்கய்யா...' என்று கூறி, விசில் மூலம் தோடியை பாடியும் காட்டினான்.கேட்டதும், அசந்து விட்டார், ராஜரத்தினம் பிள்ளை.***பி.யு.சின்னப்பா நடித்து, 1940ல் வெளிவந்த முதல் படம், உத்தமபுத்திரன். இரட்டை வேடத்தில் நடித்த இதில், பாரதியாரின், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே...' பாடலை பாடினார்.கடந்த, 1941ல், இவர் நடித்த, ஆர்யமாலா திரைப்படம் வந்தது. இதில், 10 வேடங்களில் நடித்திருந்தார்.இரண்டாம் உலகப் போரின்போது, தமக்கு ஒத்துழைக்க வேண்டும், யுத்த நிதி திரட்ட வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டது, ஆங்கிலேய அரசு. தியாகராஜ பாகவதர் கூட, ஆங்கிலேய அரசு கேட்டபடி நடந்து கொண்டார். ஆனால், பி.யு.சின்னப்பா சம்மதிக்கவே இல்லை.***சென்னை மாகாண முதல்வராக, 1937ல் இருந்தார், ராஜாஜி. சேலம் மாவட்டத்தில் தான், முதன் முதலில் மதுவிலக்கை சட்டமாக அமல்படுத்தினார்.ரேஷன் முறையை ரத்து செய்து, நியாய விலை கடையை கொண்டு வந்தார். அத்துடன், அவர் செய்த மற்றொரு துணிச்சலான செயல், மவுன்ட் ரோடில் இருந்த, ஆங்கிலேயன், நீல் சிலையை கொண்டு போய் பொருட்காட்சி சாலையில் வைத்து விட்டார். பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தபோதே இப்படி செய்து விட்டார்.***சென்னையில், ஓர் இடத்தில், கம்பராமாயண சீதா கல்யாண வைபவ உபன்யாசம் நடந்தது. அதில், தலைமை வகித்தார், எழுத்தாளர் கல்கி.காலதாமதமாக வந்த உபன்யாசகர், 'குறிப்பேடுகளை எடுத்து வர மறந்து, மீண்டும் வீட்டிற்கு சென்று எடுத்து வர நேரிட்டதால், தாமதமாகி விட்டது...' என்றார்.முடிவில் பேசிய கல்கி, 'உபன்யாசகர் ரொம்ப திறமைசாலி. முகூர்த்தத்திற்கு தாமதமாக வந்தாலும், குறித்த நேரத்திற்குள், 'கல்யாணத்தை' சுபமாக முடித்து விட்டார். இதை கேட்டவர்களுக்கே சொர்க்க பதவி கிடைக்கும் என்றால், கதையை கூறியவருக்கு, நிச்சயம் சொர்க்க வாசம் உண்டு.'அப்படி, உபன்யாசகர் சொர்க்கத்திற்கு சென்றால், அவர், தம்மோடு குறிப்பேடுகளையும் ஞாபகமாக எடுத்துப் போக வேண்டும். ஏனென்றால், சொர்க்கத்திலிருந்து மீண்டும் வில்லிவாக்கத்திற்கு திரும்பி வந்து எடுத்துப் போக முடியாது அல்லவா...' என்றார், மிகுந்த சிரிப்பொலிக்கு இடையே.- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !