அப்ப்பா... ஆ..!
'பதினெட்டு வயசுப் பையன, பையனா நெனைக்காம, பாலகனா நினைக்கிறீயே பாவி... புள்ளைய செல்லமா வளக்க வேண்டியதுதான்; அதுக்காக இப்படியா...' என, எனக்குள் ஏகப்பட்ட கடுப்பு, கொதிப்பு. ஆனாலும் என்ன செய்ய, வகையாய் மாட்டிக் கொண்டேனே!என் மகனின் நண்பன் கோபுவின் அப்பாவோட ஒரே இம்சையாய் இருந்தது.விஷயத்துக்கு வர்றேன்... பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வில், என் பையன் எடுத்து கிழித்த மதிப்பெண்களுக்கு, ஏனாம் கல்லூரியை தவிர, வேறு எங்கும் இடம் கிடைக்கவில்லை. பையனின் எதிர்காலமாயிற்றே... விட முடியுமா... பிடித்துக் கொண்டாயிற்று.ஏனாம் எங்கிருக்கு தெரியுமா... ஆந்திராவில் காக்கிநாடா பக்கம். காரைக்காலிலிருந்து, 1,000 கிலோ மீட்டர் தூரம். அடாவடிக் கைதிகளை ஆங்கிலேயர்கள் எப்படி அந்தமான் சிறைக்கு அனுப்பினரோ... அப்படி, புதுச்சேரி அரசு ஊழிய அடிமைகளுக்கு, இது, தண்டனை இடம்.காரைக்காலிலிருந்து பஸ்சில் எட்டு மணி நேரம் பயணம் செய்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து விசாகப்பட்டினம் அதிவேக ரயில் வண்டியில் மாலை ஏறி, காலை காக்கிநாடாவில் இறங்கி, அடுத்து, அங்கிருந்து ஒரு மணி நேர பஸ்சில் பயணம் செய்து கிழக்காகச் சென்றால், ஏனாம் என்ற ஊர் வரும்.அடுத்து, அங்கிருந்து, 10 கி.மீ., பஸ் மற்றும் ஷேர் ஆட்டோவில் பயணித்தால், கல்லூரி!விசாரிக்கும் போதே தலை சுற்றியது.போய் வர ஒரு ஆளுக்கு, 1,000 ரூபாய்! தூரம் மற்றும் செலவை பார்த்தால், பையன் விருப்பப்படும் படிப்பை படிக்க முடியாது. உள்ளூர் கல்லூரிகளில் சேர்க்கலாம் என்றால், இடம் ஒன்றுக்கு லட்சம் ரூபாய். அதைத்தவிர, ஓர் ஆண்டு படிப்புக்காக ஆகும் செலவு தொகை, அதிலிருந்து இரு மடங்கு. ஒரு ஆண்டென்றால் பரவாயில்லை; நடுத்தர வர்க்கத்திற்கு நான்கு ஆண்டுகள் தாங்காது. தீர யோசித்து இடம் வாங்கி, புறப்பட்டாச்சு!சென்னை செல்லும் பஸ்சில் ஏறியதும், 'சேகர்... இங்கிருந்து உன் நண்பர்கள் யாராவது ஏனாம் வர்றாங்களா...' என்று கேட்டேன்.'ஒருத்தன் வர்றான்ப்பா; பேர் கோபு. அவன் நேத்தியே புறப்பட்டு சென்னை போயிட்டான். சென்ட்ரல்ல வந்து சந்திக்கிறதா சொன்னான்...' என்றான்.அப்பாடா... மொழி தெரியாத இடத்துல பையனுக்கு துணை; எனக்கும் நிம்மதி!சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தன் நண்பன் கோபுவை தேடினான் என் மகன். அவன், இவனுக்காகவே காத்திருந்தது போல், எங்கிருந்தோ வந்தான். கூடவே, அவனுக்கு துணையாய் ஒருவரும் வந்திருந்தார்.அருகில் வந்த கோபு, 'சார்... இவர் என் அப்பா...' என்று அவரை அறிமுகப்படுத்தினான்.'வணக்கம் ஐயா...' என்று கை கூப்பினேன்.அவரும் வணக்கம் தெரிவித்து, தன் பெயர் சோமு என்றார்.புறப்பட தயாராய் இருந்த ரயிலில், முன்பதிவு பேப்பரை பார்த்து, ஏறினோம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதிர் இருக்கைகள்.ரயில் புறப்பட்டு, 10 நிமிடங்கள் ஆன பின்தான் எல்லாருக்குமே ஆசுவாசம் ஆயிற்று.சிறிது நேர மவுனத்திற்கு பின், 'ஏனாம் ரொம்ப தூரம்; இல்ல சார்...' என்று கேட்டு, எதிரிலிருந்த என்னை ஏறிட்டார் சோமு.வெளியே வேடிக்கை பார்த்தபடியே, 'ஆமாம்...' என்று தலையசைத்தேன்.'அங்க கல்லூரி எப்படி சார்?' என்று, அவர் திருப்பிக் கேள்வி கேட்டார்.'தெரியல...' என்றேன் ஈடுபாடில்லாமல்! காரணம், எனக்கு அதிகப் பேச்சு, இரைச்சல் பிடிக்காது. மேலும், நான் இயற்கையின் ரசிகன்; மவுனத்தின் காதலன்.'சார்... பசங்க கலாட்டா இருக்குமா...'எனக்கு எதிர் குணம் போல, தொண தொணத்தார் சோமு.'தெரியல...' என்றேன் எரிச்சலாக!'கேள்விப்பட்டிருக்கீங்களா?''இல்ல...''கலந்தாய்வு கும்பலில் விசாரிச்சீங்களா?'இதே கேள்வியை, நான், அவரை கேட்கலாம். பேச்சை வளர்க்க விருப்பமில்லாததால், 'இல்ல...' என்று சொல்லி துண்டித்தேன்.'எனக்கு செலவெல்லாம் ஒரு பிரச்னை இல்ல சார்... ஆனா, இவ்வளவு தூரம் பயணம்... இடையில ஒரு விபத்துன்னா, நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு...' என்றார். பயத்தின் பாதிப்பு, அவர் குரலில் லேசான நடுக்கம் வெளிப்பட்டது.பேனை பெருச்சாளியாக்கும் அவரது குணம் புரிந்தது.அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த கோபு, அவசரமாக எழுந்தான்.'எங்க போற?''பாத்ரூம்!''பாத்துப் போ... பெட்டி ஆடும். கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு சுவத்தை கெட்டியா பிடிச்சுகிட்டு, ஒண்ணுக்கு போ...' என்றார்.ஜன்னலோரம் அமர்ந்திருந்த இவன் வயதையொத்த பெண் இதைக் கேட்டு, வாய் பொத்தி சிரித்தாள். பின்ன, சிறுவனுக்கு சொல்வதை போல் சொன்னால், யார் தான் சிரிக்க மாட்டார்கள். கோபுவிற்கு அவமானமாகி, முகம் சிவக்க நடந்தான்.'எச்சரிக்கை பலமா இருக்கே... பையனுக்கு இது தான், முதல் ரயில் பயணமா?' என்று கேட்டேன்.'இல்ல சார்... பலமுறை ரயில்ல போயிருக்கான்; இருந்தாலும், ஜாக்கிரதையா இருக்க சொல்றது நம் கடமை இல்லயா...' என்றார்.'நீ நாசமாய் போக...' என்று மனதிற்குள்ளே சபித்தேன். ஆனாலும், அவருக்கு, அவர் மகன் இன்னும் சிறு குழந்தை, செல்லப்பிள்ளை என்று நினைத்து மனதை சமாதானப்படுத்தினேன்.அடுத்து ஏதோ பேச வாயெடுத்தார். தப்பிக்க, ஒரு புத்தகத்தை எடுத்து விரித்தேன்.வெளியே இருட்டு; உள்ளே ஆளாளுக்கு புத்தகம், தினசரிகளில் மூழ்கியிருந்தனர். வேறு வழியின்றி அவரும் ஒரு புத்தகத்தை எடுத்தார். அப்புறம், சாப்பாடு, படுக்கை என்று பேச்சில்லை. காலையில், ஏனாம் ஊரில் இறங்கி, பஸ்சில் கல்லூரியை நோக்கி செல்லும் போது தான் வாயைத் திறந்தார்.பஸ், கர்ப்பம் தரித்த பெண்ணாய் கோதாவரி ஆற்றங்கரையில் போய்க் கொண்டிருந்தது. அடுத்தடுத்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தோம். ஆறு அதிக அகலம்; கடலில் கலக்கும் முகத்துவாரம். கடல் எது, ஆறு எது என்று தெரியாத அளவிற்கு பிரமாண்டம். கல்லூரி அங்கு தான் இருந்தது.''ஏன் சார்... ஆத்துல வெள்ளம் வந்தாலோ, கடல் பொங்கினாலோ கல்லூரி காணாம போயிடும் இல்லியா...'' என்று பயந்தவர், ''பையனுக்கு நீச்சல் வேற தெரியாதே...'' என்று முணுமுணுத்தார்.'இப்படியெல்லாமா நினைச்சு ஒருத்தர் கவலைப்படுவாரு... இவரு பையனை கல்லூரியில் சேர்க்க வந்தாரா இல்ல அவனப் பயமுறுத்தி திருப்பி தன்னோடு அழைச்சுட்டுப் போக வந்திருக்காரா...' என்று தோன்றியது.''சுனாமி வந்தா கல்லூரியே தரை மட்டம்,'' என்று சொல்லி, மேலும் பீதியை அதிகமாக்கினேன்.என் கணிப்பு தவறவில்லை; அவர் முகத்தில் திகில், மவுனம்.''ஏன் சார் மவுனமா இருக்கீங்க?'' என்று கேட்டேன்.''என்னமோ எனக்கு பையன இங்க படிக்க வைக்க பிடிக்கல,'' என்றார்.இதைக்கேட்ட கோபு, என் பையன் இருக்கும் தைரியத்தில், ''அப்பா... நான் இங்க தான் படிப்பேன்,'' என்றான்.அவருக்கு விருப்பமில்லை என்பதை, அவரது முகம் காட்டியது.நான் கல்லூரிக்குள் சென்று பரபரப்பாக சேர்க்கை விண்ணப்பம் வாங்க, அவர் விருப்பமில்லாமல் வாங்கி, அதை பூர்த்தி செய்யும் போது, ''கோபு... இப்பவும் ஒண்ணும் நஷ்டமில்ல; உன் முடிவ மாத்திக்கலாம்,'' என்று சொல்லி பாவமாக பார்த்தார்.அவன், நான் பூர்த்தி செய்வதைப் பார்த்து, ''மாத்தமில்லப்பா,'' என்றான்.வேறு பேச்சு பேசாமல் பூர்த்தி செய்தவர், என் பின்னாலேயே வந்து பணத்தை கட்டினார்.''அப்பாடா... வேலை முடிஞ்சிடுச்சு; அடுத்து நாம பையன இந்த மாத கடைசியில கல்லூரி திறக்குற அன்னக்கி அனுப்பி வைச்சா போதும்; நாளைக்கு தான் நாம ஊருக்கு போகணும்; அதனால், டவுனுக்கு போயி அறை எடுத்து தங்கி கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்,'' என்றேன்.''போகலாம் சார்... பையன் தங்குற விடுதி எப்படி இருக்குன்னு பாத்துட்டு போகலாம்,'' என்றார்.'நல்ல பொறுப்பான அப்பா...' என்று நினைத்தேன்.''தம்பி... முதலாமாண்டு மாணவர்கள் தங்கும் விடுதி எங்க இருக்கு?'' என்று எதிரில் வந்தவனை பார்த்து கேட்டார்.அவன் கை நீட்டி, தூரத்திலிருந்த கட்டடத்தை காட்டினான். அது, அரை கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்தது. கல்லூரி துவங்கி ஐந்து ஆண்டுகள் தான் ஆகியுள்ளது என்பதால், இன்னும் கட்டடங்கள் கட்டிக் கொண்டிருந்தனர். சரியான சாலை வசதி இல்லை; கால்களில் சரளைக்கற்கள் குத்தியது. அக்கட்டடத்தின் மாடி அறைகளிலிருந்து மாணவர்கள் எங்களை வேடிக்கை பார்த்தனர்.சீருடை அணிந்த காவலாளி, விடுதி வாசலிலேயே மடக்கி, ''யாரை பாக்கப் போறீங்க?'' என்று கேட்டான்.''இந்த ரெண்டு பையன்களும் இங்க தங்கணும்; அறை வசதி எப்படி இருக்குன்னு பாக்கணும்,'' என்றேன்.அவன் ஒரு பெரிய சாவி கொத்தை எடுத்து வந்து, முதல் மாடியில் உள்ள ஒரு அறையை திறந்து காட்டி, ''இப்படி தான் சார் இக்கட்டடத்தில் உள்ள எல்லா அறைகளும் இருக்கும்,'' என்றான்.அறை, இருவர் தங்க நல்ல வசதியுடன் இருந்தது. கட்டடத்தின் இரு மூலைகளிலும் குளியலறை, கழிப்பிடங்கள் சுத்தமாக இருந்தன.ஆனாலும், சோமுவிற்கு திருப்தி இல்லை.''சமையலறை, சாப்பிடுற இடத்த பாக்கணும்,'' என்றார்.''ஏன் சார்?'' என்றேன் புரியாமல்!''அதெல்லாம் சுத்தமா இருந்தா தான் சார் பசங்க நோய் நொடி இல்லாம இருப்பாங்க; நமக்கும் கவலை இல்ல,'' என்றார்.'மனுஷன் எப்படியெல்லாம் யோசிக்கிறார்...' என்று நினைத்து, ''சார்... இந்த கல்லூரியில, 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கிறாங்க... பணக்கார பசங்களும் பணத்தை கொட்டிக் கொடுத்து தங்கி படிக்கிறாங்க. எல்லாம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இல்லாம எப்படி சார் இருக்கும்,'' என்றேன்.''நீங்க சொல்றதும் சரி தான்; ஆனாலும், பாத்தா தான் எனக்கு திருப்தி,'' என்று சொல்லி நடந்தார்.அது, அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இரு பக்கமும் வயல்கள்; மலிவு விலையில் வாங்கிப் போட்ட வயல்வெளியில் தான் கல்லூரியே கட்டப்பட்டிருந்தது. அதனால், வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப, வரப்பை அகலப்படுத்தி சாலை அமைக்கப்பட்டிருந்தன. அதில், கட்டுமானப் பணிகளில் வீணான செங்கல், காரைகள், உடைந்த டைல்ஸ்களைப் போட்டு நிரப்பி இருந்தனர்.நடக்கும் போதே கவனித்திருப்பார் போல, ''சார்... இடையில மின்சார கம்பம் இல்ல பாருங்க... ராத்திரி சாப்பாட்டுக்கு பசங்க வரும் போது பாம்பு, பூரான் நட்டுவாக்கலி கடிக்க வாய்ப்பிருக்கு,'' என்றார்.எங்கள் அருகில் வந்த சீனியர் மாணவனொருவன், ''ரெண்டு கட்டடத்துக்கு மேலயும் அதிக வெளிச்சமான விளக்கு இருக்கு சார்... வெளிச்சத்துக்கு குறை இல்ல; ஆனாலும், நிர்வாகம் இத சரி செய்து தர்றேன்னு சொல்லி இருக்கு,'' என்று சொல்லி கடந்தான்.''தமிழ் பேசுறீயே... நீ எந்த ஊருப்பா?'' என்று அவனை ஆவலாய் விசாரித்தார் சோமு.''புதுச்சேரி சார்... இங்க தெலுங்கு தாய் மொழியா இருந்தாலும், புதுச்சேரி கலப்பினால், இங்க எல்லாரும் தமிழ் பேசுவாங்க,'' என்று சொல்லி நடந்தான்.சமையலறையும் அதை ஒட்டி இருந்த சாப்பாட்டுக் கூடமும் ரொம்ப சுத்தம், சுகாதாரத்துடன், நவீனமாகவும் இருந்தது. சமையல்காரரை சந்தித்து, எந்தெந்த நாட்களில் என்னென்ன வகை சாப்பாடு, காய்கறி, சைவம், அசைவம் போடுவார்கள் என, அக்கறையாய் கேட்டுக் கொண்டார் சோமு.வெளியே வந்து அங்குள்ள காவலாளியிடம், சாப்பாட்டு நேரம், காலம் எல்லாம் விசாரித்தவர், ''சீனியர், ஜூனியர் கலாட்டா...'' என்று இழுத்தார்.''அதெல்லாம் இங்கே கிடையாது,'' என்றான் காவலாளி.''அப்படித்தான் சொல்வீங்க; வர்ற வழியில கலாட்டா நடந்தா எப்படித் தெரியும்?'' என்றார்.''பையன்கள் சமாளிச்சுப்பாங்க வாங்க,'' என்று கூறி அவரை வெளியே இழுத்து வந்தேன்.''சகாய விலைக்கு வயல்வெளிகள வாங்கி, நாலு கட்டடங்கள கட்டி, பொறியியல் கல்லூரின்னு ஒரு பேரை வைச்சு எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க,'' என்று புலம்பியபடியே வந்தார். அத்துடன் நில்லாமல், என் பையனுக்கும், அவர் மகனுக்கும் நடுவில் வந்து, ''தம்பிகளா... மொழி தெரியாத இடத்துல வந்து தங்கப் போறீங்க; இங்கே எந்த வம்பு தும்பு நடந்தாலும் தலையிடாதீங்க... கேட்க நாதி இல்ல. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு பின்னிடுவாங்க,'' என்று சும்மா வந்தவர்களுக்கு கிலியை ஏற்படுத்தினார்.'அடப்பாவி... எதுவா இருந்தாலும் தைரியமா எதிர்கொள்ளுங்கன்னு தைரியம் சொல்லாம, பதுங்குன்னு பயமுறுத்துறீயே...' என்று மனதுக்குள் அவரை சபித்தேன்.''ஒரு நிமிஷம்... நான் இதுக்கு போய் வர்றேன்,'' என்று ஒற்றை விரலைக் காட்டி, பின் தங்கினார்.''தம்பி... அப்பா என்ன செய்றாரு?'' என்று கோபுவைக் கேட்டேன்.''ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சார்,'' என்றான்.'பள்ளியில சின்னப் புள்ளைக கூட பழகி பழகி, அவர்களுக்கு பாத்து பாத்து சொல்லிக் கொடுத்த தொழில் பழக்கம், பெற்ற பிள்ளையிடமும் வருது...' என்று நினைத்து, ''கோபு... நீ உங்கப்பாவுக்கு ரொம்ப செல்லமோ...'' என்றேன்.''நான் மட்டுமல்ல, அண்ணன்களுமே அவருக்கு செல்லம் தான்,'' என்றான் கோபு.''நீங்க அண்ணன், தம்பிக மூணு பேரா?'' என்று கேட்டேன்.''ஆமாம் சார்!''''ஆனா, இவரு இவனோட பெத்தப்பா இல்லப்பா, பெரியப்பா,'' என்று, குண்டை தூக்கி போட்டான் என் மகன்.''என்னப்பா சொல்ற?'' என்று அதிர்வாய் அவர்களை பார்த்தேன்.''ஆமாம்ப்பா... இவருக்கு குழந்தைங்க இல்லாததால, கூட்டுக் குடும்பமாய் இருந்து, தம்பி பசங்களத் தான் தன் புள்ளைகளா நினைச்சு வளக்கிறார். அதனால தான், புள்ளைங்க மேல இவ்வளவு அன்பு, அக்கறை,'' என்றான் என் மகன்.முதன் முதலில் அவர் மேல் அன்பும், அனுதாபமும் எனக்குள் ஏற்பட்டது. காரை ஆடலரசன்