உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்

அன்பு சகோதரிக்கு —என் வயது, 43; கணவர் வயது, 47. எங்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன், இன்ஜினியரிங் கல்லுாரியிலும், மகள், மருத்துவ கல்லுாரியிலும் படிக்கின்றனர்.குடும்பத்தினருடன், ஒளிவு மறைவு இல்லாமல், கலகலப்பாக பேசும் இயல்புடையவள், நான். சின்ன விஷயமானாலும், அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன். இந்த இயல்பே, பலமுறை எனக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.உதாரணமாக, என் பெற்றோர் ஏதாவது ஒரு விஷயம் சொன்னால், அதை, என் கணவரிடம் சொல்லி விடுவேன்; அதேபோல், கணவர் ஏதாவது கூறினால், அதை, பெற்றோரிடம் கூறி விடுவேன். இதனால், பலமுறை காயப்பட்டும், இந்த இயல்பை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. இதேபோன்ற ஒரு தவறை, என் மகள் விஷயத்தில் செய்து, தற்போது, விழி பிதுங்கி உள்ளேன்...தன் வகுப்பு தோழனை காதலிக்கிறாள், மகள். இந்த விஷயத்தை என்னிடம் கூறி, 'இப்போது, இதை அப்பாவிடம் கூற வேண்டாம்; படிப்பு முடிந்து, பணியில் அமர்ந்ததும் சொல்லிக் கொள்ளலாம்...' என்று கூறினாள்.நான் தான் மண்டு மாதிரி, வழக்கம் போல், பேச்சு வாக்கில் கணவரிடம் சொல்லி விட்டேன்; விபரீதம் வெடித்தது. மகளை தாறுமாறாக பேசியதோடு, அந்த மாணவனின் வீட்டிற்கு சென்று, கேவலமாக பேசி விட்டார்.இதனால், மனம் நொந்து, என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாள், மகள்; மகனோ, தங்கையின் வாழ்க்கையை கெடுத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறான். விஷயம், இவ்வளவு சீரியசாகும் என, கனவிலும் நினைக்கவில்லை.இப்போது, வீட்டில் நான்கு பேரும், நான்கு திசைகளில் அவரவர் வேலையை பார்த்து வருகிறோம். சந்தோஷம், கலகலப்பு எதுவுமே இல்லை. பிரச்னைக்கு காரணமான நானே, அதற்கு தீர்வு காண வேண்டும்; நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் சகோதரி.— இப்படிக்கு,அன்பு சகோதரி.அன்பு சகோதரிக்கு —நீ என்ன, நம் நாட்டு ராணுவ ரகசியங்களையா, பாகிஸ்தானுக்கு விற்றாய்... படிக்கும் வயதில் காதலிக்கிறாள், உன் மகள். மகளின் காதலன் நல்லவனா, கெட்டவனா யாருக்கு தெரியும்... படிப்பு முடித்து, பணியில் அமர்ந்த பின், அவன், உன் மகளை தான் மணம் செய்து கொள்வான் என்பதற்கு என்ன உத்திரவாதம்...மகளின் காதலை கணவனிடம் மறைத்து, இடையில் ஏதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால், உன்னை குற்றம் சாட்டுவோர் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பர்... உன் மகளை யாராவது காதலித்து, திருமணம் செய்து கொள்ளாவிட்டால், அவளுக்கு திருமணமே ஆகாது என்ற அவல நிலையிலா உள்ளது, உன் குடும்பம்...உன் வீட்டினர் அனைவருமே, 'டென்ஷன்' பார்ட்டிகளாக உள்ளனர். விஷயத்தை அறிந்த உன் கணவர், என்ன செய்திருக்க வேண்டும்... 'தாம் துாம்' என்று குதிக்காது, மகளின் காதலின் உண்மைத்தன்மையை நிதானமாய் ஆராய்ந்து முடிவெடுத்திருக்க வேண்டும்.'சொல்லாதே...' எனக் கூறியும், நம் காதலை அப்பாவிடம் போட்டு உடைத்து விட்டாள் அம்மா. அதனாலென்ன, ஏதாவது ஒரு கட்டத்தில், அப்பாவுக்கு இதை தெரியப்படுத்தி தானே ஆக வேண்டும். அப்பாவின் குட்டி கலாட்டாக்களை மீறி, காதலன், நம் காதலை அடுத்த கட்டத்துக்கு விவேகமாக கொண்டு செல்கிறானா என ஆலோசிக்க வேண்டும் உன் மகள்.தங்கையின் காதல் ஆழமானது என்றால், யார் தடுத்தாலும் வெற்றி பெறும் என, உன் மகன் உணர வேண்டும்.சகோதரி... நால்வரும் கலந்து பேசுங்கள். உயர் ரத்த அழுத்த குடும்பம் என்ற அவப்பெயரை சுமக்காமல், நிதானமாக பேசி, கருத்து வேறுபாடுகளை களையுங்கள். உன் மகளின் காதலை பற்றி, எந்த முடிவெடுத் தாலும், தீர்க்கமாக யோசித்து, ஆக்கபூர்வமாய் முடிவெடுங்கள். காதலன், மகளுக்கு பொருத்தமானவன் என்றால், அவனுடன் அன்பாய், சமாதானமாய் பேசுங்கள். அவனின் குடும்பத்தாரின் உள்ளக்கிடக்கையை உளவறியுங்கள். எந்த பிரச்னையையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என அணுகாமல், அனுபவபூர்வமாக, ஈகோ இல்லாது அணுகினால், நிச்சயம் தீர்வு கிட்டும். பிள்ளைகளின் காதலை பற்றி முடிவெடுக்கும்போது, நம் சுயநலத்தை பார்க்கக் கூடாது; அவர்களின் ஆயுட்கால சந்தோஷத்தையே பார்க்க வேண்டும்.சகோதரி... திரைப்படங்களுக்கு தான் தணிக்கை குழு அவசியம் என கருதாதே... நாம் பேசும் வார்த்தைகளுக்கும் சுயதணிக்கை தேவை. பிறர் நம்மை நம்பி சொன்ன ரகசியங்களை, வெறும் சுவாரசியத்துக்காக உளறி கொட்டலாமா... நம் ரகசியங்களை பிறர் உளறி கொட்டினால், நாம் எவ்வளவு கோபப் படுவோம்...எல்லா உறவுகளிலும் சொல்லக்கூடிய வெளிப்படையான வார்த்தைகள், சொல்லக் கூடாத சிதம்பர ரகசிய வார்த்தைகள் என, இரு பக்கங்கள் உண்டு. அணுகுண்டுகளை விட, வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம். வெளிப்படையான மனிதர்கள், வாழ்க்கையில், தோல்வியுற்ற மனிதர்கள் என்பதை மறந்து விடாதே! பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை; பேசாத வார்த்தைகளுக்கு நாம் முதலாளி. இனியாவது, உன் ஓட்டை வாய்க்கு, திண்டுக்கல் பூட்டு போடு!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !