புண்ணியம் தருவது எது?
கேரளாவைச் சேர்ந்தவர், பூந்தானம். இவருக்கு எல்லாமே, குருவாயூரப்பன் தான். தினமும், தன் வீட்டின் வடக்கு பகுதியில் அமர்ந்து, பாகவதத்தை வாய் விட்டுப் படிப்பார். கண்ணனிடம் மிகுந்த பக்தியோடு, ஆத்மார்த்தமாக படித்து வந்தார். 93- ஆண்டுகள் வாழ்ந்த பூந்தானம், தன் கடைசி காலத்தில், ஒரு நுால் எழுதி வந்தார். அதில், பகவானுடைய வைகுண்டத்தை பற்றி விவரிக்கக் கூடிய பகுதியை எழுத வேண்டியிருந்தது. பலவாறு சிந்தித்தும், எழுதிப் பார்த்தும், அவருக்கு திருப்தி உண்டாகவில்லை. இரவில், மனம் அயர்ந்து துாங்கி விட்டார், பூந்தானம்.அப்போது, ஓர் கனவு... பெரிய கோவில் ஒன்றின் முன் நிற்கிறார், பூந்தானம். தங்கள் கைகளை குவித்து, பூந்தானத்தை வரவேற்கின்றனர், கோவில் வாயிற்காவலர்கள் இருவர்.'சுவாமி, நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக, உங்கள் வீட்டின் வடக்கு பகுதியில், பலா மரங்களாக இருந்தோம். உங்களால், அந்த மரப்பிறவி நீங்கி, இதோ இங்கு, பகவான் இருப்பிடத்தில் (வைகுண்டத்தில்) வாயிற்காவலர்களாக ஆனோம்.'தினமும் நீங்கள் பாகவதம் படிப்பதை கேட்டுக் கேட்டு, அதன் பலனாகவே, இந்த பாக்கியம் கிடைத்தது. வாருங்கள்...' என, உள்ளே அழைத்துச் சென்றனர்.வைகுண்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் பூந்தானத்திற்கு சுற்றிக் காட்டினர். பாகவதத்தைப் படிக்குமாறு பூந்தானத்தை வேண்டினர், அங்கிருந்த தேவர்கள். அன்று படித்து முடித்திருந்த பகுதியின் அடுத்த பகுதியைத் தொடர்ந்து படித்தார்; அனைவரும் மகிழ்ந்தனர்.கனவு கலைந்தது. பூந்தானத்துக்கு மகிழ்ச்சி, எல்லை கடந்து போனது. கனவாக இருந்தாலும், பகவானின் கருணையால் அல்லவா, அந்த காட்சி கிடைத்தது. அந்த நினைவிலேயே பூந்தானம், அவசர அவசரமாக தன் வீட்டின் வடக்கு பகுதியில் போய் பார்த்தார். அங்கிருந்த பலா மரங்கள் இரண்டும், கீழே விழுந்திருந்தன. கைகளைக் குவித்து, 'பகவானே பகவானே...' என்று கூவினார், பூந்தானம். பிறகு, தான் எழுத முடியாமல் தவித்த வைகுண்ட தரிசனத்தை, கனவில் கண்டதை அப்படியே எழுதி முடித்தார், பூந்தானம்.நல்லதைச் சொல்வது, நம் தவிப்பை நீக்கி, வழி காட்டும். நல்லதைக் கேட்பது, பெரும் புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை விளக்கும், வரலாறு இது. பி. என். பரசுராமன்ஆன்மிக தகவல்கள்!வில்வ மரம் இருக்கும் வீட்டில் குடியிருந்தால், காசி முதல் ராமேஸ்வரம் வரையான சிவ ஸ்தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.