| ADDED : ஜூன் 27, 2024 01:14 AM
சென்னை:'ஆப்பிள் ஐ போன்' தயாரிப்பாளரான 'பாக்ஸ்கான்' நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ளது. இந்த ஆலைக்கான ஆட்சேர்ப்பில், திருமணமான பெண்கள் முழுமையாக தவிர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திருமணமான இந்திய பெண்களுக்கு வீட்டுப் பொறுப்புகள் அதிகரிப்பது, அவர்கள் அணியும் நகைகள் மற்றும் அணிகலன்கள், ஐ போன் உபகரணங்களை பழுதாக்குவது ஆகியவை, இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.வேலையில் இருந்து நீக்கப்படும் பயத்தால், சில திருமணம் ஆன பெண்கள், பாக்ஸ்கான் வளாகத்திற்குள் நுழையும்முன், நகைகளை அகற்றி விட்டு உள்ளே செல்வதாகவும் கூறப்படுகிறது.ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம், திருமணமான பெண்கள் பாரம்பரிய முறையிலேயே, அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.கடந்த 2021ல், இதே நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதுார் ஆலையில், தரமற்ற உணவை சாப்பிட்டு, 100க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது போன்ற பல குற்றச்சாட்டுகள் தொடர்வது, சீனாவுக்கு மாற்றாக, உலகின் ஐ போன் தயாரிப்பு மையமாக, இந்தியாவை கருதி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு, பேரிடியை கொடுத்துள்ளது.