புதுடில்லி : கடந்த நான்கு வாரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாட்டினத்தின் அளவு, கடந்தாண்டு முழுமைக்கும் செய்யப்பட்ட இறக்குமதியை விட அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நகை வியாபாரிகள், பிளாட்டினம் இறக்குமதி தொடர்பான அரசின் விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்ததே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். தங்கத்தை விட பிளாட்டினம் விலை அதிகரித்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரியை, மத்திய அரசு, கடந்த ஏப்ரல் மாதம் ஐந்து சதவீதமாக குறைத்தது. அதேவேளையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக இருந்தது. மேலும், ஒரு உலோகத்தில் இரண்டு சதவீதம் அல்லது அதற்கு மேல் பிளாட்டினம் கலக்கப்பட்டிருந்தால், அதை, பிளாட்டினம் சார்ந்த உலோகமாகவே கருத வேண்டும் என்ற விதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த விதியை பயன்படுத்தி, நகை வியாபாரிகள், கடந்த நான்கு வாரங்களில் மட்டும், கிட்டத்தட்ட 8,300 கோடி மதிப்புள்ள, 13 மெட்ரிக் டன் எடை கொண்ட, 90 சதவீதம் தங்கம் கலந்த உலோகங்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு முழுதும் இறக்குமதி செய்யப்பட்ட பிளாட்டினத்தின் அளவு, 9.97 மெட்ரிக் டன் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: உலகில் அதிகம் தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், நாட்டின் தங்கத் தேவையில் பெரும் பங்கு, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன. பிளாட்டினம் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் இந்தியா உள்ளது.இந்நிலையில், அரசின் சமீபத்திய உத்தரவை பயன்படுத்தி, சில நகை வியாபாரிகள், பிளாட்டின நகை எனும் பெயரில் தங்கத்தை இறக்குமதி செய்கின்றனர். இவ்வாறு 10 சதவீத இறக்குமதி வரி மிச்சமாகிறது. இதனால் தங்களது விற்பனை விலையில் இரண்டு சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றனர். இதன் காரணமாக நியாயமாக 15 சதவீத இறக்குமதி வரி செலுத்தி, தங்கத்தை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தள்ளுபடி விலையில் நகைகளை விற்பனை செய்வதால், உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கும் வரி வருவாயில் இழப்பு ஏற்படுகிறது. தற்போது பிளாட்டினத்தின் விலை குறைந்துள்ளதாலும்; அதற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாலும், அரசின் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு தெரிவித்தனர்.கடந்த நான்கு வாரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாட்டினத்தின் அளவு, கடந்தாண்டு முழுவதும் செய்யப்பட்ட இறக்குமதியை விட அதிகம்