உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நிலக்கரி இறக்குமதிக்கு கட்டுப்பாடு 4 சதவீதமாக குறைக்க அறிவுறுத்தல்

நிலக்கரி இறக்குமதிக்கு கட்டுப்பாடு 4 சதவீதமாக குறைக்க அறிவுறுத்தல்

சென்னை: நிலக்கரி இறக்குமதிக்கு அனுமதித்த அளவை ஆண்டுக்கு, 6 சதவீதத்தில் இருந்து, 4 சதவீதமாக குறைக்குமாறு, தமிழகம் உட்பட பல மாநிலங்களை, மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு, 5,120 மெகாவாட் திறனில், ஆறு அனல்மின் நிலையங்கள் உள்ளன. அதில், 800 மெகாவாட் வடசென்னை - 3 அனல்மின் நிலையம் சமீபத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த புதிய மின் நிலையம் தவிர, மற்ற அனல்மின் நிலையங்களில் தினமும், 85 சதவீத மின் உற்பத்தி செய்ய, 62,000 டன் நிலக்கரி தேவை. இது, ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. நாடு முழுதும், 2022 - 23ல் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு, 2023 ஜனவரியில் எழுதிய கடிதத்தில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு, தமிழகம் உட்பட பல மாநில மின் வாரியங்களை அறிவுறுத்தி இருந்தது.தமிழக மின்வாரியமும், தேசிய அனல்மின் கழகம் போல், சந்தை விலைக்கு ஏற்ப மாறுபடும் விலை அடிப்படையில், 2022 - 23ல், 15.80 லட்சம் டன்; 2023 - 24ல், 6.25 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்தது.கடந்த ஆண்டில் இருந்து, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2023 - 24ல், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, 2.20 கோடி டன் நிலக்கரி கிடைத்தது. இது, 2022 - 23ல், 1.92 கோடி டன்னாக இருந்தது. நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பால், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதித்த அளவை, ஆண்டுக்கு, 6 சதவீதத்தில் இருந்து, 4 சதவீதமாக குறைக்குமாறு மின் வாரியங்களை, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு நிலக்கரி@

கடந்த, 2016ல் கட்டுமான பணி துவங்கிய வடசென்னை - 3 மின் நிலையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலக்கரியை தலா, 50 சதவீதம் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் வகையில், இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்திய நிலக்கரியை விட, வெளிநாட்டு நிலக்கரியில் குறைந்த அளவில் அதிக வெப்பம் கிடைக்கும். இந்திய நிலக்கரியை எரிப்பதில் இருந்து, 40 சதவீதம் சாம்பல் கிடைத்தால், வெளிநாட்டு நிலக்கரியில், 10 சதவீத சாம்பலே கிடைக்கும். இதனால், வட சென்னை - 3 மின் நிலையத்திற்காக வெளிநாட்டு நிலக்கரி வாங்க வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை