| ADDED : மே 02, 2024 12:10 AM
புதுடில்லி:பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையில், உள்ளூர் நாணயங்களை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க இந்தியாவும், நைஜீரியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக, வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான கூட்டு வர்த்தகக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக, வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அமர்தீப்சிங் பாட்டியா தலைமையிலான 7பேர் கொண்ட குழு, நைஜீரியாவின் அபுஜாவிற்கு சென்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பின் இக்கூட்டம், கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடந்தது. இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இந்திய ரூபாய் மற்றும் நைஜீரிய நைராவை எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க, இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த 2022 - 23ல், இருதரப்பு வர்த்தகத்தில், ஏற்றுமதி 43,160 கோடி ரூபாயும், இறக்குமதி 55,610 கோடி ரூபாயும் என, மொத்த வர்த்தகம் 98,355 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டான 2021 - 22ல் மொத்த வர்த்தகம் 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.