புதுடில்லி : நாடு முழுவதும் 4ஜி சேவைகளை, வரும் ஆகஸ்ட் முதல் துவக்க உள்ளதாக, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.அரசின் 'ஆத்மநிர்பார்' எனும் தற்சார்பு கொள்கையின்படி, முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், 4ஜி சேவைகளை, நாடு முழுதும் வழங்க, பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளது.அதன்படி, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்., மற்றும் சி.டாட்., எனும் தொலைதொடர்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டமைப்பில், பஞ்சாப் மாநிலத்தில் 4ஜி சேவைகளை, பி.எஸ்.என்.எல்., கடந்த ஆண்டு ஜூலையில் துவக்கியது.இத்தொழில்நுட்பம் துவக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள், 8 லட்சம் சந்தாதாரர்களை இணைத்து பி.எஸ்.என்.எல்., வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து, தற்போது நாடு முழுதும் 4ஜி சேவைகளை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.4ஜி, 5ஜி சேவைகளை அமைப்பதற்காக, 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை, டி.சி.எஸ்., தேஜாஸ் நெட்வோர்க்ஸ் மற்றும் அரசுக்கு சொந்தமான தொழில்துறை பயிற்சி நிறுவனம் ஆகியவை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.