உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து:முன்னாள் நீதிபதிகள் கண்டனம்

தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து:முன்னாள் நீதிபதிகள் கண்டனம்

புதுடில்லி: ரோஹிங்கியா அகதிகள் குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு எதிராக கருத்து வெளியிடுவதற்கு, முன்னாள் நீதிபதிகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில், கடந்த 2ம் தேதி, அதிகாரிகள் காவலில் ரோஹிங்கியா அகதிகள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த, சமூக ஆர்வலர் தாக்கல் செய்த மனு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், 'ஊடுருவல்காரர்களுக்கு நம் நாட்டில் சட்டப்பூர்வமாக தங்க அனுமதி இல்லை. அவர்களுக்கு சிவப்பு கம்பளம் அளித்து வரவேற்பு அளிக்க முடியுமா?' என, கேள்வி எழுப்பியிருந்தனர். நீதிபதிகளின் இந்த கருத்துக்கு, பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்துக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, 44 முன்னாள் நீதிபதிகள் கையொப்பமிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீதித் துறையை அவமதிக்கும் நோக்கிலும், தலைமை நீதிபதியை விமர்சிக்கும் வகையிலும் அவதுாறு கருத்துகள் கூறப்படுகின்றன. இது, நீதிமன்றத்தின் சுதந்திரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிடுகிறது. நீதித்துறை நடவடிக்கைகள் நியாயமான விமர்சனத்திற்கு மட்டுமே உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், எந்த வழக்கிலும் உரிமைகள் குறித்து தீர்ப்பு கூற முடியாத நிலை ஏற்படும். நீதிபதிகளின் உத்தரவை முழுமையாக ஆராயாமல், அவர்களுக்கு எதிரான கருத்துகளை விமர்சகர்கள் பரப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நீதிபதிகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. நம் நாட்டுக்குள் நுழைந்தவர்கள், இந்திய அடையாள ஆவணங்களை சட்டவிரோதமாக வாங்குவது குறித்து நீதிமன்ற மேற்பார்வையிலான சிறப்பு விசாரணைக் குழுவை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி