| ADDED : ஜன 23, 2024 11:06 PM
குடியரசு தின அணிவகுப்பு
புதுடில்லி:குடியரசு தின அணிவகுப்பு நடந்ததை முன்னிட்டு, டில்லியில் நேற்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியரசு தின விழா, நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு ஒரு மாதமாக, கர்தவ்ய பாதையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடந்து வருகிறது. நேற்று முழு அளவிலான ஒத்திகை நடந்தது. இதனால், டில்லியின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கிருஷி பவன் அருகே அசோகா சாலை மற்றும் ரபி மார்க் ஆகிய இடங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அதேபோல புறநகர் சுற்றுச்சாலை, பிரகதி மைதானம் சுரங்கப்பாதை, சராய் காலே கான், வருமான வரித்துறை அலுவலகம் ஆகிய இடங்களிலும் சாலைகளில் வாகனங்கள் தேங்கி நின்றன.தெற்கு டில்லியில் இருந்து கன்னாட் பிளேஸ் சென்றவர்கள் கர்தவ்ய பதை அருகே கடும் நெரிசலில் சிக்கித் தவித்தனர். அந்த வழியாக காரில் வந்த ஒரு பெண், 'வழக்கமாக 20 நிமிடங்களில் கன்னாட் பிளேஸ் சென்று விடுவேன். ஆனால் இன்று, 40 நிமிடங்கள் ஆகி விட்டது' என்றார்.மத்திய செயலக மெட்ரோ ரயில் நிலையம் அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. காலை 10:30 மணிக்கு விஜய் சவுக்கில் துவங்கிய அணிவகுப்பு ஒத்திகை கர்தவ்ய பாதை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை ரவுண்டானா, திலக் மார்க், பகதுார் ஷா ஜாபர் மார்க் மற்றும் நேதாஜி சுபாஸ் மார்க் வழியாக செங்கோட்டையில் நிறைவு பெற்றது. இந்த ஒத்திகையை முன்னிட்டு, விஜய் சவுக்கிலிருந்து இந்தியா கேட் வரை, நேற்று முன் தினம் மாலை 6:00 மணிக்கே போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை ஒத்திகை நிறைவு பெற்றவுடன் சாலை திறந்து விடப்பட்டது.மாநகரில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, டில்லி - குருகிராம் விரைவுச் சாலையிலும் எதிரொலித்தது. அங்கும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், போக்குவரத்து போலீசாரின் வழிகாட்டலை பின்பற்றவும், டில்லி மாநகரப் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.