உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழங்கால ஓவியங்களை மீட்டெடுக்கும் புதுச்சேரி ஓவியர்

பழங்கால ஓவியங்களை மீட்டெடுக்கும் புதுச்சேரி ஓவியர்

பழங்கால செங்காவி ஓவியங்களை வில்லியனுாரை சேர்ந்த ஓவியர் மீட்டெடுத்து இளைய தலைமுறையினரிடம் பரப்பி வருகிறார்.புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் பழங்கால பாணியில் ஓவியங்களை வரைந்து வருகிறார் வில்லியனுார் ஓவியர் துரை, 44. அண்மையில் ஜனாதிபதி புதுச்சேரி வந்தபோது அவரைபோன்று சிற்பத்தை வடிவமைத்து தந்தவர் இவர். தற்போது பழங்கால கோவில்கள், பாறைகளில் காணப்படும் செங்காவி ஓவியத்தினை மீட்டெடுத்து வருகிறார்.செங்காவி ஓவியங்கள் தீட்டுவது குறித்து ஓவியர் துரை கூறியதாவது:ஆதிமனிதன் கரிக்கட்டி கொண்டு ஓவியம் வரைந்தான். அடுத்து மூல ஓவியம் செங்காவி ஓவியம் தான். பண்டைய கோவில்கள், பாறைகள், குகைகளில் செங்காவி ஓவியங்கள் நம்முன்னோர்களால் அதிசயப்படத் தக்க வகையில், இவை தீட்டப்பட்டுள்ளன. செம்மண், வேலம்பிசினி, முட்டை வெள்ளை கரு, இளநீர், புளியங்குச்சியின் கறி துாள் ஆகியவைகளை பயன்படுத்தி வரையப்பட்ட செங்காவி ஓவியங்கள், மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.செங்காவி ஓவியம் என்பது சுவாசிக்கும் தன்மை உடையது. அதாவது வெயில் நேரங்களில் விரிசல் விட்டும் குளிர் காலங்களில் அந்த விரிசல்கள் மூடியும் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும். அந்த அளவுக்கு செங்காவி ஓவியங்களாக தனிச்சிறப்பு வாய்ந்தவை.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி ஓவியம் இன்றளவும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அளவிற்கு சிறந்து விளங்குகிறது. மனிதர்களது முகங்கள் விலங்கின் முகங்கள், விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல், வேட்டையாடுதல் ,சடங்குகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள், குதிரையின் மீது மனிதர்கள் அமர்ந்து செல்வது போன்ற செங்காவி ஓவியங்கள் இன்றளவும் புகழ் பெற்றவைகளாக கருதப்படுகிறது. ஆனால் பாருங்கள்.. செங்காவி ஓவியங்கள் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு சுத்தமாக தெரியாது. எல்லோரும் நவீன ஓவியங்களை கற்று வருகின்றனர். நவீன ஓவியங்களை போன்று செங்காவி ஓவியங்களை கற்றுக் கொள்ளவும் மாணவர்கள் முன்வர வேண்டும். அது மட்டுமல்லாமல் செங்காவி ஓவியங்கள் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.அதற்கான சிறிய முயற்சியை நான் எடுத்து வந்து, இளைய தலைமுறையினருக்கு அழிந்துபோன ஓவியத்தை பரப்பி வருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை