புதுச்சேரி, : தினமலர் செய்தி எதிரொலியால் வழுதாவூர் சாலை, அய்யங்குட்டிப்பாளையத்தில் பேனர்கள் நேற்று அகற்றப்பட்டது.புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பேனர் வைத்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைக்க விதித்த தடை உத்தரவு நகலுடன், கலெக்டருக்கு கடந்த பிப்., மாதம் தலைமை நீதிபதி சந்திரசேகரன் கடிதம் அனுப்பினார்.அதில், பேனர்கள் அகற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக நேரிடம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது. அதன்பின்பு வைக்கப்பட்ட சில பேனர்களும், தேர்தல் நன்னடத்தை காரணமாக கடந்த மாதம் 16ம் தேதி முழுதும் அகற்றப்பட்டது.ஆனால், அய்யங்குட்டிப்பாளையம் கோபாலன் கடை பஸ் நிறுத்தில் இருந்து பீர் கம்பெனி வரை வரிசையாக 20 திருமண வரவேற்பு பேனர்களும், கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை சாலை மற்றும் கட்டடங்கள் பிரிவு செயற்பொறி யாளர் சுந்தராஜன் உத்தரவின்பேரில், உதவி பொறியாளர் சீனுவாசராவ், இளநிலை பொறியாளர் தமிழரசன் தலைமையிலான ஊழியர்கள் பேனர்களை அகற்றினர். நகரில் அகற்றம்
புதுச்சேரி நகரின் பல இடங்களிலும் ஆங்காங்கே புதிதாக பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பேனர்களும் நேற்று அகற்றப்பட்டது.
அதிகாரிகள் கடமையை செய்வார்களா?
புதுச்சேரியில் பேனர்கள் வைக்கவும், போஸ்டர்கள் ஒட்டவும் தடை சட்டம் அமலில் உள்ளது. மேலும், பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றமும் எச்சரித்துள்ளது.லோக்சபா தேர்தல் எதிரொலியாக, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது.இருந்தபோதும், எதற்கும் பயப்படாமல் பேனர்கள் வைக்கின்றனர். இதை போலீசாரும், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளும் 'கைகட்டி வாய்மூடி' வேடிக்கை பார்த்து வருகின்றனர்.பேனர் கலாசாரத்தை சுட்டிக் காட்டி நாளிதழ்களில் செய்தி வெளியானால் மட்டுமே, அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கின்றனர். இல்லாவிட்டால், வைக்கப்படும் பேனர்களை வேடிக்கை பார்த்துவிட்டு கடந்து செல்கின்றனர்.மக்களின் வரி பணத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் அதிகாரிகள் இனியாவது தங்களது கடமையை சரியாக செய்வார்களா? சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவார்களா?