| ADDED : ஆக 07, 2024 06:13 AM
திண்டிவனம் : குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி சென்னை நபரிடம் ரூ.35 லட்சம் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.சென்னை, அம்பத்துாரை சேர்ந்தவர் பாலகோவிந்ததாஸ் மகன் ஹிதேஷ் பிஷா,44; தனியார் கல்லுாரியில் நிர்வாக உதவியாளர். இவருக்கு, பேஸ்புக் மூலம் பழக்கமான ராஜராஜன் என்பவர், தனக்கு கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பழக்கம் உள்ளதால், 10 முதல் 15 சதவீதம் விலை குறைவாக தங்கம் வாங்கலாம் எனக் கூறினர்.அதனை நம்பிய ஹிதேஷ் பிஷா குறைந்த விலையில் தங்கம் வாங்க, ராஜராஜன் கூறியபடி கடந்த 3ம் தேதி தனது காரில் டிரைவருடன் விழுப்புரம் மாவட்டம், தீவனுார் - கூட்டேரிப்பட்டு சாலைக்கு வந்தார். அங்கிருந்த ராஜராஜனை காரில் ஏற்றுக் கொண்டு புறப்பட்டார்.அப்போது சில்வர் நிற காரில் வந்த 7 பேர், ஹிதேஷ் பிஷா காரை மறித்து நாங்கள் போலீசார், காரை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி ஹிதேஷ் பிஷா, டிரைவர் ஆனந்தனை தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர்.அங்கு, ராஜராஜன் உள்ளிட்ட 8 பேரும் சேர்ந்து ஹிதேஷ் பிஷாவை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.35 லட்சம் ரொக்கம், 2 சவரன் செயின், இரு மொபைல் போன்களை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.இதுகுறித்து ஹிதேஷ் பிஷா அளித்த புகாரின் பேரில், ரோஷனை போலீசார் வழக்கு பதிந்து ராஜராஜன் உட்பட 8 பேரை தேடிவருகின்றனர்.