| ADDED : மே 03, 2024 06:29 AM
புதுச்சேரி : ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் உள்ள கட்டண கழிவறைகள் பெரும்பாலான நேரத்தில் பூட்டியே கிடப்பதால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து வாரத்திற்கு 14 ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மங்களூர், மும்பை, தாதர், யஷ்வந்த்பூர் (கர்நாடகா), புவனேஸ்வர் (ஒடிசா), ஹவுரா (மேற்கு வங்காளம்), புதுடில்லி, கன்னியாகுமரி, சென்னை மற்றும் திருப்பதி உள்பட 10 நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர், அதிகரித்து வரும் பயணிகளுக்கு ஏற்ப ரயில் நிலையத்தில் கழிவறை வசதிகள் இல்லை. ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் கட்டண கழிவறைகள் இருந்தும் அவற்றை யாரும் டெண்டர் எடுக்க முன் வராததால் பூட்டியே கிடக்கின்றன. ரயில்கள் வரும்போது மட்டும் சில மணி நேரங்கள் கழிவறைகள் திறக்கப்படுகின்றன. அதன் பிறகு பூட்டியே கிடக்கின்றன.ரயில் நிலையத்தில் 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கழிவறைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டெண்டர் விடப்படுகின்றன.இந்த மூன்று மாத காலத்திற்கு மட்டும் கழிவறைகளை டெண்டர் எடுத்து நடத்தினால் லாபம் இல்லை என்பதால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக ரயில் நிலையத்தில் உள்ள இரண்டு கட்டண கழிவறைகளும் பூட்டியே கிடக்கின்றன.ஒவ்வொரு ரயிலியிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. மாநிலத்தில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இரண்டு கழிவறைகளையும் அவர்கள் பொறுப்பில் விட்டால் முழு நேரம் பயன்பாட்டிற்கு வருவதோடு, துாய்மையாகவும் பராமரிக்கப்படும். இதற்கு தென்னக ரயில்வே மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.